கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

தோல்வியை ஏற்கும் திராணியற்றோர்..!




ஆடத் தெரியாதவர்கள் எப்போதும் அரங்கம் கோணல் என்பார்கள். தங்கள் தோல்விகளை ஏற்றுக் கொள்ளத் திராணியற்றவர்கள் - தாம் தோற்றுப் போனமைக்கான வெற்றுக் காரணங்களை வெளியில்தான் தேடிக் கொண்டிருப்பார்கள். தன்னுடைய பிழைகளை அடுத்தவன் தலையில் இறக்கி வைத்து விட்டு – ஒழித்துக் கொள்ளும் இவ்வாறானோர் ஆபத்தானவர்கள்.

நடந்து முடிந்த மாகாணசபைத் தேர்தல்களில் முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் இடறி விழுந்திருக்கின்றன. எந்தக் கட்சியின் ஆட்டமும் சோபிக்கவில்லை. சரியாகச் சொன்னால், மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கிய முஸ்லிம் கட்சிகள், வென்று - தோற்றிருக்கின்றன. தமது தோல்விக்கான காரணத்தை – ஒவ்வொரு முஸ்லிம் கட்சியும் மற்றைய முஸ்லிம் கட்சிகள் மீதும் நபர்கள் மீதும் இறக்கி வைக்க முயன்று கொண்டிருக்கின்றன.

வடக்கு மாகாணசபைத்  தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றிருக்கும் ஆசனங்களின் எண்ணிக்கை ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. இவ்வாறானதொரு வியப்பான வெற்றியினை பெறுவதற்கான சந்தர்ப்பம் கிழக்கில் முஸ்லிம்களுக்கும் இருந்தது. கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அனைத்து முஸ்லிம் அரசியல் கட்சிகளும் இணைந்து ஒரே அணியாகப் போட்டியிட்டிருந்தால் - இன்று கிழக்கு மாகாணசபையின் அதிகாரம் முஸ்லிம்களின் கைகளுக்குள் வந்திருக்கும்.

இப்போது மட்டும் - கிழக்கு மாகாணம் முஸ்லிம்களின் கைகளில் இல்லையா? என்ன கதை இது? கிழக்கின் முதலமைச்சராக முஸ்லிம் ஒருவர் இருக்கிறார். ஏனைய நான்கு அமைச்சர்களில் மூவர் முஸ்லிம்கள். பிறகென்ன? என்று உங்களில் எவரேனும் கேட்டால் - அது நல்ல பகிடிதான்.

அனுபவங்களை விடப் பெரும் ஆசான் இல்லை என்பார்கள். முஸ்லிம் அரசியல் தரப்புக்கள் பிரிந்து கிடப்பதால்தான் தோற்றுப் போகின்றன என்பதை – முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைமைகள் நன்கு அறியும். வடக்குத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகள் பிரிந்து நின்று களமிறங்கியமையால்தான் - அங்குள்ள முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கைக்கேற்ப முஸ்லிம் பிரதிநிதித்துவங்களைப் பெற்றுக் கொள்ள முடியாமல் போயிற்று என்பதை மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் பி.பி.சி. தமிழோசையில் ஏற்றுக் கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனாலும், மீண்டும் மீண்டும் இதே தவறினை இந்தக் கட்சிகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. அனுபவங்களிலிருந்து கற்றுக் கொள்வதற்கு முஸ்லிம் அரசியல் கட்சிகள் தயாராக இல்லை.

நடந்து முடிந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலிலாயினும் முஸ்லிம் காங்கிரசும், அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் அ.இ.மக்கள் காங்கிரசும் இணைந்து போட்டியிட்டிருந்தால் - கணிசமான முஸ்லிம் பிரதிநிதித்துவங்களைப் பெற்றெடுத்திருக்கலாம் என்பது – சமூகப் பற்றுள்ள முஸ்லிம் மக்களின் ஆதங்கமாகும். ஆனால், இந்தக் கட்சிகள் கூட்டிணைவதென்பது சாத்தியமில்லை என்பதுதான் கசப்பான உண்மையாகும்.

நடந்து முடிந்த மாகாணசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, வடக்கில் கூட்டாக இணைந்து போட்டியிடுவதற்கு வருமாறு, றிசாத் பதியுத்தீனுக்கு மு.காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், அந்த அழைப்பு திறந்த மனதுடனானதல்ல என்பது அரசியல் அறிந்தோருக்குத் தெரியும். ஆனாலும், மு.கா.வின் அழைப்பினை றிசாத் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்கு ஆயிரத்தெட்டுக் காரணங்கள் இருக்கலாம். அவற்றில் முதல் காரணம், மஹிந்தவை எதிர்த்துக் கொண்டு – அரசியல் செய்யும் யோக்கிதையோ, தைரியமோ றிசாத் போன்றோரிடம் இல்லை என்பதாகும். மஹிந்தவின் தோளில் தொங்கிக் கொண்டுதான், றிசாத் அரசியல் செய்து வருகின்றார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்கிறதொரு கட்சியை றிசாத் வைத்திருக்கிரார் அல்லவா? அந்தக் கட்சியின் சின்னம் என்வென்று உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும். தனக்கென்றொரு கட்சியினை றிசாத் வெறும் பெயருக்கே வைத்துக் கொண்டிருக்கிறார். தேர்தல்களில் போட்டியிடுவதென்னவோ வெற்றிலைச் சின்னத்தில்தான்.

முஸ்லிம் சமூகத்தின் நலனை முன்னிலைப்படுத்திச் சிந்தித்திருந்தால், இவர்கள் பிரிந்து நின்று போட்டியிட்டிருக்க மாட்டார்கள். சமூக நலனை விடவும் - தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள் இவர்களுக்கு முக்கியமானவை – முதன்மையானவை. றிசாத் வென்று விடக்கூடாது என்று ஹக்கீமும், ஹக்கீம் வென்று விடக் கூடாது என்று றிசாத்தும் யோசிக்கின்றார்களே தவிர, முஸ்லிம் சமூகம் வெற்றிபெற வேண்டும் என்று - இந்த இருவரும் சிந்திக்கவேயில்லை.

வடக்கில் றிசாத் அணியினர் - முஸ்லிம் மக்களின் வாக்குகளை வெற்றிலைச் சின்னத்துக்குப் பெற்றுக் கொடுத்ததன் விளைவு – சிங்களப் பிரதிநிதித்துவம் அதிகரித்திருக்கின்றது. அதேபோல், மு.காங்கிரஸ் நூலிழையில் ஒரு ஆசனத்தைப் பெற்றிருக்கிறது. கூட்டிக்கழித்துப் பார்த்தால், வட மாகாகணத்தில் முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கைக்கேற்ப – முஸ்லிம் பிரதிநிதித்துவம் பெறப்படவில்லை. இந்தத் தோல்விக்கான முழுப் பொறுப்பும் ஹக்கீமையும், றிசாத்தினையுமே சாரும்.

இந்தக் கூத்துக்குள் - அமைச்சர் அதாஉல்லா இல்லை. காரணம், கிழக்குத் தாண்டி தனது பருப்பு வேகாது என்று அவருக்குத் தெரியும். அக்கரைப்பற்றுக்குள் - வடக்கு மாகாணத்தினைக் கொண்டு வந்து கொடுத்திருந்தால் - அதாஉல்லாவும் தேர்தல் களத்தில் குதித்திருப்பார் என்று நண்பரொருவர் பகிடியாகக் கூறினார்.

முஸ்லிம் சமூகத்தின் நலன் குறித்து சிந்திப்பதற்கு தயாரில்லாத மேற்படி முஸ்லிம் கட்சிகளை மக்கள் புறக்கணிப்பதைத் தவிர வேறு வழிகளில்லை. மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்கள் இந்தப் புறக்கணிப்பினைச் செய்து காட்டியிருக்கின்றனர். முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த பேரினவாதிகள் நடத்திவரும் நெருக்குவாரங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தவறிய முஸ்லிம் காங்கிரசை விடவும், தனியனாக நின்று குரல் கொடுத்து வரும் ஆசாத்சாலிக்கு முஸ்லிம் மக்கள் வாக்குகளை அள்ளியிறைத்து வெற்றிபெறச் செய்திருக்கின்றார்கள். 55 ஆயிரத்துக்கும் மேலான விருப்பு வாக்குகள் ஆசாத்சாலிக்குக் கிடைத்திருக்கின்றன. இதேகளத்தில், போட்டியிட்ட மு.காங்கிரஸ் 11 ஆயிரத்துச் சொச்சம் வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கின்றது. மு.கா. என்கிற கட்சியை விடவும் - ஆசாத்சாலி எனப்படும் தனிமனிதருக்கு - மக்கள் அதிகபட்ச ஆதரவினைத் தெரிவித்திருக்கின்றார்கள்.

நமக்காகக் குரல் கொடுக்கத் தயாரற்ற, நமது சமூக நலன் குறித்து அக்கறைப்படாத அரசியல் கட்சிகளைப் பற்றி நாம் ஏன் சிந்திக்க வேண்டும்? நமது ஆதவினை ஏன் வழங்க வேண்டும்? என்று மக்கள் சிந்திக்கத் தொடங்கும் புள்ளியில்தான் - மாற்றங்கள் நிகழத் தொடங்கும்.

இன்னொருபுறம், இவர்கள் இப்படி அடித்துப் - பிடித்துப் பெற்றுக் கொண்ட ஆசனங்களை வைத்துக் கொண்டு, மாகாணசபைகளில் முஸ்லிம் சமூகத்துக்காக ஒன்றும் மலைகளை உடைக்கப் போவதில்லை. மஹிந்தவின் ஆட்சிக்கு இந்த ஆசனங்களால் முட்டுக் கொடுக்கும் வேலைகளைத்தான் செய்யப்போகின்றார்கள். கிழக்கு மாகாணசபையில் திவிநெகும சட்ட மூலத்துக்கு சார்பாகவும், வடமேல், மத்திய மாகாண சபைகளில் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு ஆதரவாகவும்; மேற்படி முஸ்லிம் கட்சிப் பிரதிநிதிகள் - கைகளை உயர்த்தியமையை மக்கள் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள்.

உயிரைக் கொடுத்து, மடக்கிப் பிடித்துக் கொண்டுவரும் காட்டு யானைகளை வைத்து, கோயிலில் பிச்சை எடுப்பது போல் - தனது மாகாணசபைப் பிரதிநிதித்துவங்களை மு.காங்கிரசும், றிசாத்பதியுத்தீனும் பயன்படுத்தி விடுவார்கள் என்கின்ற ஐயம் பெருவாரியாக உள்ளது.

ஆட்சியாளர்களைத் திட்டி தேர்தல்களில் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதும், தேர்தல் முடிந்ததும் பெற்றுக் கொண்ட ஆசனங்களைக் கொண்டு சென்று – ஆட்சியாளர்களின் காலடியில் தாரை வார்ப்பதும் முஸ்லிம் காங்கிரசின் கீழ்தரமான மோசடி அரசியலாகும்.

மு.காங்கிரஸ் மூன்று மாகாணசபைக்கான தேர்தல்களிலும் பெற்றுக் கொண்ட ஆசனங்களை வைத்துக் கொண்டு  ஒரு துரும்பினைக் கூட அசைத்து விட முடியாது. வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் வெற்றிலைக் கட்சியும் ஏகப் பெரும்பான்மையுடன் தனித்து ஆட்சியமைத்திருப்பதால், மு.கா. இம்முறையும் ஆட்சியாளர்களிடம் சோரம் போகும் நிலைதான் காணப்படுகிறது.

மக்களுக்கு – அபிவிருத்திகளை விடவும், அவர்களின் உரிமைகளே முக்கியமானவையும் முதன்மையானவையுமாகும். கண்டி மாவட்டத்தில் 02 வருடங்களில் 700 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான அபிவிருத்திகளை தான் மேற்கொண்டதாகவும், ஆனால், தன்னுடைய அபிவிருத்திகளை மறந்து விட்டு, ஆசாத்சாலிக்கு மக்கள் வாக்களித்து விட்டனர் என்றும் பிரதியமைச்சர் காதர் ஊடகங்களில் கவலை தெரிவித்திருக்கின்றார். பள்ளிவாசல்களை விடவும் - கொங்றீட் வீதிகள் மக்களுக்கு முக்கியமானவையல்ல. கொங்றீட் வீதிகளை அமைத்துத் தருகின்றவர்களை விடவும், பள்ளிகள் உடைக்கப்படும் போது, அதற்கு எதிராக உரத்துக் குரல் கொடுப்பவர்களைத்தான் மக்கள் நேசிக்கின்றனர் என்பதை கண்டி மாவட்டத் தேர்தலில் முஸ்லிம் மக்கள் நிரூபித்துள்ளனர்.

தமிழ் கட்சிகளின் ஒற்றுமை, கண்டி மாவட்டத் தேர்தலில் முஸ்லிம் மக்கள் வெளிப்படுத்தியிருக்கும் செய்திகளில் இருந்து – முஸ்லிம் கட்சிகள் கற்றுக் கொள்வதற்கு ஏராளமான பாடங்கள் இருக்கின்றன. கற்பதும் - விடுவதும் அவரவர் கைகளில் உள்ளது. 

ஆனால், 'சாகப் போகின்றவனுக்கு - மருந்துகள் பலிப்பதில்லை' என்கிற பழமொழியொன்று இருப்பதையும் நாம் மறந்து விடக்கூடாது.

(தம்பி)

0 comments:

Post a Comment