பள்ளிவாசலை அகற்ற முடியாது தற்போது பிரச்சினை பாரதூரமான நிலைமையை அடைந்துள்ளது
தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினையில் ஜனாதிபதி தலையிட்டு உரிய தீர்வினைப் பெற்றுக் கொடுப்பார் என தான் நம்புவதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினை குறித்து அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“தம்புள்ளை ரஜமஹா விகாரை பூமி குறித்து தேரர்கள், பெளத்தர்கள், முஸ்லிம்கள் சிலருக்கு சட்ட ரீதியான அதிகாரம் உண்டு. பள்ளிவாசல் குறித்து ஏற்பட்டுள்ள பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும். முஸ்லிம் பள்ளிவாசலை அகற்ற முடியாது என காணி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
பள்ளிவாசலை அகற்றுவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்தால் சில வேளைகளில் அதனை அகற்றியிருக்கலாம். தற்போது பிரச்சினை பாரதூரமான நிலைமையை அடைந்துள்ளது.
கடந்த 20 ஆம் திகதி தம்புள்ளையில் இடம்பெற்ற சம்பவங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொலிஸாருக்கு சந்தர்ப்பம் இருந்தது.
பௌத்தர்களை தூண்டிவிட்டு அநாவசிய பிரச்சினை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை விரைவில் தீர்க்காவிட்டால் பாரிய அழிவு ஏற்படும்.
தம்புள்ளை விகாரை அமைப்புப் பணிகள் 6 மாதத்திலும் அநாவசிய கட்டடங்களை அகற்றும் பணிகள் 3 மாதங்களிலும் செய்து முடிக்கப்படும் என பௌத்த மத விவகார அமைச்சின் செயலாளர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
இப்படியிருக்கையில் ஏற்பட்ட பிரச்சினை குறித்த உண்மை நிலை வெளிப்படுத்தப்பட வேண்டும். நாட்டின் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் பிரச்சினை ஏற்பட்டிருக்காது என நான் நம்புகிறேன்.
தம்புள்ளை ரஜமஹா விகாராதிபதிக்கும் எனக்கும் இடையில் அரசியல் முரண்பாடு காணப்படுகிறது. கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அவர் நிறுத்திய வேட்பாளர் ஒருவர் தோல்வியுற்று நான் நிறுத்திய வேட்பாளர் வெற்றிபெற்றுவிட்டார். இதுதான் பிரச்சினையின் ஆரம்பம்”.
இவ்வாறு காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.-
0 comments:
Post a Comment