மஹ்தி அலைஹிஸ்ஸலாம் (பாகம் 1)
1979ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் திகதி, பஜ்ரு தொழுகைக்கான அதான் ஒலிக்கப்பட்ட ஓர் அமைதியான நாள். கஃபதுல்லாஹ்வில் சாதாரண வழமையான நாளாகவே தொடங்குகின்றது. ஹறம் ஷரீபை நோக்கி மக்கள் கூட்டம் அலை அலையாகத் திரண்டு சுப்ஹு தொழுகைக்குத் தயாராகின்றனர். அது இஸ்லாமிய வரலாற்றின் கறை படிந்த கறுப்பு நாட்களுள் ஒன்றாக அமையப் போகின்றது என்பது தொழுகைக்காக அணி திரண்ட பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த நாள், ஹிஜ்ரி 1400 ஆரம்பிக்கின்ற முஹர்ரம் 1ம் நாளாகவும் அமைந்திருந்தது.
Sheikh Mohammed al-Subayil (ஷேக் முஹம்மத் அல் சுபையில்)எனும் இமாம் அவர்களினால் சுப்ஹு தொழுகை நடாத்தப்படுகின்றது. தொழுகை முடிவடைந்ததும், உடனடியாக, சில துப்பாக்கி வேட்டுக்கள் கேட்கின்றன. அதுவும், ஹறத்தின் உள்ளேயே கேட்கின்றது. முன்வரிசைப் புறத்திலிருந்து குழப்பமான ஓர் இரைச்சல் சத்தம் கேட்க ஆரம்பிக்கின்றது. அப்போது, Juhayman al-Otaybi (ஜுஹிமான் அல் உதைபி) எனும் நபர், இமாமிடமிருந்த ஒலிவாங்கியைப் பறித்தெடுக்கின்றார்.
இன்னும் சிலர் எழுந்து காவலுக்கு நிற்கின்றனர். அப்போது, ஒலிவாங்கியைப் பறித்த ஜுஹிமான் அல் உதைபி, அங்கு தொழுது விட்டு குழுமியிருந்த மக்களை நோக்கி பேச ஆரம்பிக்கின்றார். நாட்டிலுள்ள ஊழல் மற்றும் ஏனைய பாவச் செயல்களைப் பற்றி அவர் உரைக்கின்றார். உலக முடிவு நாளுக்குரிய ஏராளமான அடையாளங்கள் கண்முன்னே நிகழ்ந்தேறியும், நிகழ்ந்து முடிந்தும் இருப்பதை அவர் மக்களுக்குப் பறை சாற்றுகின்றார். மேலும், ஒவ்வொரு நூற்றாண்டுக்கொரு முறை, மார்க்கத்தை நல்வழிப்படுத்துவதற்காக ஓர் “முஜத்தித்” தோன்றுவார் என ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியிருப்பதை நினைவு கூருகிறார்.
உலகம் நெறி பிறழ்ந்து, ஈனச்செயல்களிலும், பாவச்செயல்களிலும் மூழ்கியிருக்கும் போது மஹ்தி அலைஹிஸ்ஸலாம் தோன்றுவார் என ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறிய ஹதீதையும் அவ்விடத்திலே அவர் ஞாபகமூட்டுகின்றார். இப்போது நாம் இருக்கும் கால கட்டம், நபி பெருமானார் கூறிய அந்தக் கால கட்டம் என அவர் நியாயிக்கின்றார். அதனைத் தொடர்ந்து ஒரு நபரை அவ்விடத்திற்கு எழுந்து வருமாறு அழைக்கின்றார்.
மக்களுக்கு அவரைக் காட்டி, இதோ, இவர்தான் அந்த மஹ்தி. அனைவரும் இவரிடத்திலே “பையத்” செய்து கொள்ளுங்கள் என்று வேண்டினார். இவருடைய பெயர் Mohammed Abdullah al-Qahtani (முஹம்மத் பின் அப்துல்லாஹ் அல் கஹ்தானி). ரசூலுல்லாஹ் கூறியது போல், இவருடைய பெயர் முஹம்மத். இவரின் தந்தையின் பெயர் அப்துல்லாஹ். இவரின் குலம் அல்-கஹ்தான் என்று சொல்லப்படுகின்ற குறைஷிக் குலத்திலிருந்து தோன்றுகின்ற குலம். இதோ இவர் ஹஜ்ருல் அஸ்வத் மற்றும் மகாமு இப்றாஹீம் ஆகியவற்றிற்கிடையே இருந்து தோன்றுகின்றார். மேலும், ஹிஜ்ரி 1400 முதலாம் நாளிலேயே உங்களிடத்தில் இவர் வந்திருக்கின்றார். ஆகவே, சந்தேகமின்றி இவர்தான் மஹ்தி. நாம் அனைவரும் இவரை ஏற்றுக் கொள்வோம் எனக் கூறினார். மக்களோ செய்வதறியாது திகைத்து நின்றனர். பலருக்கு அறபி மொழி தெரியாததன் காரணமாக எதுவுமே விளங்காத சூன்ய நிலையும் அங்கு தோன்றியது.
சிலர் அங்கிருந்த வெளியேற முற்பட்டனர். கதவுகள் அடைக்கப்பட்டு, அங்கு மக்களை வெளியேற விடாமல் ஆயுதம் தரித்த குழு ஒன்று நிற்பதும் அவதானிக்கப் பட்டது. மக்களிடையே பீதி பரவ ஆரம்பித்தது. அன்றிலிருந்து சுமார் ஒன்றரைக் கிழமைகள் (அண்ணளவாக 2 வாரங்கள்) புனித கஃபா அந்த ஆயுதம் தரித்த ஜுஹிமான் அல் உதைபியின் குழுவினரால் கைப்பற்றப் பட்டிருந்தது. மக்கள் பணயக் கைதிகளாக்கப்பட்டிருந்தனர். யாரும் உள் நுழையவோ அல்லது வெளியேறவோ அனுமதிக்கப் படவில்லை.
இவர்களால் கஃபா தடுத்து வைக்கப்பட்டிருந்த நாட்களில் தவாப், அதான், தொழுகை, ஸயீ என எவ்வித அமல்களும் இடம்பெறவில்லை. சவூதி அரசாங்கத்திற்கு ஆரம்பத்தில் எதுவுமே புரிந்திருக்கவில்லை. என்ன நடக்கின்றது என்று பார்ப்பதற்கு யாரையாவது அனுப்ப முயற்சித்தால் அவர்கள் கஃபாவின் மினாறாக்களில் இருந்த குறிபார்த்துச் சுடும் ஜுஹிமான் அல் உதைபியின் குழுக்களால் கொல்லப்பட்டனர். கஃபாவில் இரத்தம் சிந்தப்பட்டது. தொழுகை நடாத்திய இமாம் ஷேக் முஹம்மத் அல் சுபையில் அவர்களுக்கு இது கடும் போக்காளர் குழு ஒன்றின் வேலை என்பது புரிந்து விட்டது. பெண் ஒருவரின் ஹிஜாபை அணிந்து அவர் எப்படியோ தப்பித்து விட்டார். அரச தரப்பினருக்கு தகவல் அளித்த முக்கியஸ்தர்களுள் அவரும் ஒருவர்.
அரசாங்கம் எவ்வளவோ முயற்சித்தும் பலன் கிட்டவில்லை. மஹ்தியை ஏற்று, அரசாங்கம் தமது பதவிகளை இவர்களுக்குத் தரும் வரை விடமாட்டோம் என கடும் போக்காளர்கள் விடாப் பிடியாக நின்றனர். சுமார் 8 நாட்கள் கடந்த நிலையில் சவூதி அரசு படைகளை அனுப்ப முடிவு செய்தது. உண்மையான மஹ்தி இப்படி நடந்து கொள்ள மாட்டார் என சவூதியின் உலமாக்கள் குழு தீர்மானித்து யுத்தம் செய்வதற்கு பத்வா வழங்கியது. பொதுவாக யுத்தம் செய்வதற்கு தடுக்கப்பட்ட பிரதேசமாக ஹறம் ஷெரீப் அமைந்திருந்தாலும் இஸ்லாத்தைப் பாதுகாக்க வேண்டிய சூழலில் இது அனுமதிக்கப் பட்டிருந்தது.
மிகவும் திறமையான படைகளை அனுப்பி போராடி மீட்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டது. படைகள் சென்றன. மூடப்பட்டிருந்த கதவுகளைத் தகர்த்து இராணுவம் உள் நுழைந்தது. அங்கே, ஜுஹிமான் அல் உதைபியின் படையினர்க்கு எதிராக யுத்தம் நடத்தப்பட்டது. கஃபாவின் உள்ளேயே இது நிகழ்ந்தது. கஃபாவின் அடித்தளத்தில் ஜுஹிமான் அல் உதைபியின் குழுக்கள் மறைந்திருந்து ராணுவத்தைத் தாக்கினர். அவர்கள் உணவுக்கென பேரீத்தம் பழங்களைக் கொண்டு வந்திருந்தனர். தண்ணீரை ஸம் ஸம் கிணற்றிலிருந்து பெற்றனர். ஆயுதங்களை பஜ்ரு நேரம் ஜனாஸாக்கள் கொண்டுவரும் சந்தூக்குகளில் கொண்டு வந்திருந்தனர்.
யுத்தம் நிகழ்ந்தது. இரு தரப்பிலும் உயிர்கள் பறிக்கப் பட்டன. மஹ்தி என்று கூறப்பட்ட முஹம்மத் பின் அப்துல்லாஹ் அல் கஹ்தானியும் இதில் கொல்லப்பட்டார். இவற்றிற்கெல்லாம் மூல காரணமாக இருந்த ஜுஹிமான் அல் உதைபி உயிருடன் பிடிபட்டார். அவருடன் சேர்த்து சுமார் 70 பேர் கைது செய்யப் பட்டனர். ஜுஹிமான் அல் உதைபி உட்பட பிடிபட்ட 70 பேரும் 3 நாட்களுக்குள் மரண தண்டனை வழங்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த நிகழ்வு “மஹ்தி” எனும் புனிதரை பலருக்கும் நினைவு படுத்தியது. இஸ்லாத்தில் மிக முக்கியமாகக் கூறப்பட்ட ஒரு புனிதரின் வருகை 80 களில் பெருமளவு மறந்திருந்தாலும் இந்த நிகழ்வின் பின்னர் மெருகடையத் தொடங்கியது. மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பற்றிய ஆய்வுகள் அதிகரித்தன. பலர் புதிதாக அறிந்து கொள்ள ஆரம்பித்தனர்.
ஜுஹிமான் அல் உதைபி எனும் படையினர் தம்மில் ஒருவராக அறிமுகம் செய்யுமளவு முக்கியமான இந்த மஹ்தி அலைஹிஸ்ஸலாம் யார் ?.
மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வருகை மறுமை நாளின் அடையாளமா ?.
மஹ்தி அலைஹிஸ்ஸலாம் ஏன் இஸ்லாத்தில் முக்கியத்துவம் பெறுகிறார்?.
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)
BY: மௌலவியா தன்ஸீலா அம்ஜாட்.
0 comments:
Post a Comment