மஹ்தி அலைஹிஸ்ஸலாம் வருகிறார்.. சுவாரஸ்யமான கட்டுரையின் (பாகம் 2)
மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நிஜமான வருகை இஸ்லாத்தின் மறுமை நாளின் முக்கிய அம்சங்களுள் ஒன்றாகும். மறுமையின் அடையாளங்கள் சிறிய அடையாளங்கள், பெரிய அடையாளங்கள் எனப் பிரிக்கப் படுகின்றன. சிறிய அடையாளங்கள் நிகழ்ந்து முடிவுற்ற பின்னர் மஹ்தி (அலை) வெளிப்படுவார். அதன் பின்னரே பெரிய அடையாளங்கள் நிகழ ஆரம்பிக்கும். எனவே, மஹ்தி (அலை) அவர்களின் வருகை சிறிய, பெரிய அடையாளங்களை இணைக்கும் ஓர் பாலமாக அமையப் போகும் மிக முக்கிய நிகழ்ச்சியாகும்.
சிறிய அடையாளங்கள் பெருமளவு எம் கண்முன் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. சிறிய அடையாளங்கள் ஓர் குறித்த நிகழ்ச்சியாகவோ அல்லது ஓர் தொடராகவோ அமையலாம்.
ஆடை அணிந்தும் நிர்வாணமாகத் தோற்றமளிக்கும் பெண்கள், மகளின் தயவில் தாய், பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல், குடிசைகள் கோபுரமாகுதல், விபச்சாரமும் மதுப்பழக்கமும் பெருகுதல், தகுதியற்றவர்களிடம் பொறுப்பு, பாலை வனம் சோலை வனமாதல், காலம் சுருங்குதல், கொலைகள் பெருகுதல், நில அதிர்வுகளும் பூகம்பங்களும் அதிகரித்தல், பள்ளிவாசல்களை வைத்து பெருமை பேசுதல், நெருக்கமான கடை வீதிகள், பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல், உயிரற்ற பொருட்கள் பேசுதல், பேச்சைத் தொழிலாக்கி பொருள் திரட்டுதல், தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுதல், பள்ளிவாசலை பாதைகளாகப் பயன்படுத்துதல், இறப்பதற்கு ஆசைப்படுதல், இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள் தோன்றல், முந்தைய சமுதாயத்தை பின்பற்றல் என்பனவற்றை நடைபெறும் நிகழ்வுகளாகக் குறிப்பிடலாம்.
இது வரை நிகழாத சிறிய அடையாளங்கள் யூதர்களுடன் மாபெரும் யுத்தம், கஃபா ஆலயம் சேதப்படுத்தப்படுதல், யூப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல், கஹ்தான் இன மன்னரின் ஆட்சி, அல்ஜஹ்ஜாஹ் எனும் பெயருடைய மன்னரின் ஆட்சி, எண்ணிப் பார்க்காது வாரி வழங்கும் கலீபா ஒருவரின் ஆட்சி, செல்வம் பெருகுதல், மாபெரும் யுத்தம், பைத்துல் முகத்தஸ் வெற்றி, மதீனா தூய்மையடைதல் ஆகியனவாகும்.
சிறிய அடையாளங்கள் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வருகையுடன் ஆரம்பித்து விட்டது. அண்ணலாரின் வருகை கூட யுக முடிவின் அடையாளமாகும். கிட்டத்தட்ட 14 நூற்றாண்டுகளாக சிறிய அடையாளங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. இன்னும் சில நடை பெற இருக்கின்றன.
பெரிய அடையாளங்களின் நிகழ்வு இவ்வாறு அல்லாமல் மிக வேகமாக நடந்து முடிந்துவிடும் எனக் கூறப்படுகின்றது. பெரிய பத்து அடையாளங்களாவன, புகை மூட்டம், தஜ்ஜால், (அதிசயப்) பிராணி, சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது, ஈஸா (அலை) இறங்கி வருவது, யஃஜுஜ், மஃஜுஜ், கிழக்கே ஒரு பூகம்பம், மேற்கே ஒரு பூகம்பம், அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம், இறுதியாக எமனிலிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச் சென்று ஒன்றுதிரட்டல் ஆகும்.
எனவே, மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வருகை சிறிய அடையாளங்களின் இறுதி நிகழ்வாகவும் பெரிய நிகழ்வுகளின் ஆரம்பமாகவும் உள்ள ஓர் சங்கிலி இணைப்பாகவே அமையப் போகின்றது. இங்கு முஸ்லிம்களாகிய நாம் அனைவரும், இதனை வரலாற்றுக் கதையாக உள்வாங்கும் அதேவேளை, மறுமையின் நேரம் எம்மை நெருங்குகின்றது என சிந்தித்து எம்மைத் தயார் படுத்தக் கடமைப் பட்டுள்ளோம். அல்லாஹ் அல்குர்ஆனில் “மனிதர்களுக்கு அவர்களின் விசாரணை நெருங்கி விட்டது. அவர்களோ புறக்கணித்து,கவனமின்றி உள்ளனர்” (21:1), என எச்சரிக்கின்றான்.
மஹ்தி (அலை) அவர்கள் வெளிப்பட்டுவிட்டால் பெரிய அடையாளங்கள் நிகழப் போகின்றன என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். “மஹ்தி” எனும் சொல்லின் பொருள் “வழிகாட்டப்பட்டவர் அல்லது வழிப்படுத்துபவர்” என்பதாகும். இது அவரின் பெயரல்ல. மாறாக, அவருக்கு வழங்கப்படும் சிறப்புப் பட்டமாகும். ரசூல் (ஸல்) அவர்கள், நான்கு கலிபாக்களையும் “மஹ்திய்யீன்” என ஓர் ஹதீதில் கூறியிருக்கின்றார். எனவே “மஹ்தி” என்பது வழிகாட்டப்பட்டவர் என்பதைக் குறிக்கும் சிறப்புச் சொல்லாகும்.
“இவ்வுலகில், ஒருநாள் மட்டுமே எஞ்சியிருந்தால் என் வழித்தோன்றலைச் சேர்ந்த ஒருவர் ஆள்வதற்காக அந்த நாளை அல்லாஹ் நீட்டுவான், அவரது பெயர் என் பெயரை ஒத்ததாகும், அவரது தந்தையின் பெயர் எனது தந்தையின் பெயராகும், போரும் கொடுங்கோன்மையும் நிரம்பி இருக்கும் இப்பூமியில் அமைதியையும் நீதியையும் அவர் நிலை நிறுத்துவார்” என கண்மணி நாயகம் (ஸல்) கூறிய ஹதீதுகள் திர்மீதி மற்றும் அபூதாவூத் போன்ற கிரந்தங்களில் பதிவாகியுள்ளன.
எனவே மஹ்தி (அலை) என சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கப்படப் போகும் அவரின் உண்மையான பெயர் முஹம்மத் இப்னு அப்துல்லாஹ் என்பதாகும். ஒரேயொரு நாள் எஞ்சியிருந்தாலும், அவருக்காக அந்த நாள் நீட்டப்படும் என்பதிலிருந்து அவரின் முக்கியத்துவம் எமக்கு உணர்த்தப்படுகின்றது. அவரின் வருகை நிகழாமல் உலக அழிவு ஏற்படாது என்பது ஊர்ஜிதமாகின்றது. பெரிய பத்து அடையாளங்களும் அவரின் வருகை நிகழாமல் நிகழாது என்பதும் தெளிவாகின்றது.
போரும், அநீதியும் பெருகி உலகம் தறிகெட்டு நிற்கும் பொழுதில் ஓர் சீர் திருத்தவாதியாக இன்ஷா அல்லாஹ் மஹ்தி (அலை) தோன்றுவார்.
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)
By :மௌலவியா தன்ஸீலா அம்ஜாட்
0 comments:
Post a Comment