கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

மஹ்தி அலைஹிஸ்ஸலாம் வருகிறார்.. சுவாரஸ்யமான கட்டுரையின் (பாகம் 3)



மஹ்தி (அலை), பிறந்தவுடன் அப்துல்லாஹ் எனும் அவருடைய தந்தையார், அவருக்கு முஹம்மத் என்று பெயர் சூட்டுவார். இப்பெயர் பிறந்தவுடனேயே அவருக்கு வைக்கப்படும் பெயரே தவிர வளர்கின்ற போது இடப்படும் பெயரல்ல. இந்த விடயம் தெளிவாக்கப் பட வேண்டிய தேவை உள்ளது. காரணம், 30 க்கும் அதிகமான நபர்கள் வரலாற்றில், ஒவ்வொரு நூற்றாண்டிலும் தம்மை மஹ்தி என அழைத்துள்ளார்கள். இவர்களின் இயற்பெயர் முஹம்மத் இப்னு அப்துல்லாஹ் என்பதல்ல. மாறாக, மஹ்தி என்று தம்மை வெளிப்படுத்துவதற்கு அவர்கள் சூட்டிய பெயரே முஹம்மத் இப்னு அப்துல்லாஹ் என்பதாகும். இவ்வாறு தம்மை மஹ்தி என்று அழைத்தவர்களுள் சிலரை இங்கே குறிப்பிடுவது சாலப் பொருத்தமாகும்.

1.       முஹம்மத் இப்னு ஹஸன் இப்னு அலி (9ம் நூற்றாண்டு)
2.       அப்துல்லாஹ் அல் மஹ்தி பில்லாஹ் (10ம் நூற்றாண்டு)
3.       இப்னு துமார்த் (12ம் நூற்றாண்டு)
4.       முஹம்மத் ஜௌன்புரி (15ம் நூற்றாண்டு)
5.       அஹ்மத் இப்னு அபீ மஹல்லி (17ம் நூற்றாண்டு)
6.       மிர்ஸா குலாம் அஹமத் (19ம் நூற்றாண்டு)
7.       முஹம்மத் பின் அப்துல்லாஹ் அல் கஹ்தானி (20ம் நூற்றாண்டு)

இதில் மிர்ஸா குலாம் அஹமத் என்பவர் தன்னை இமாம் மஹ்தி என்றும் ஈஸா (அலை) அவர்களின் இரண்டாம் வருகைக்குரியவர் என்றும் வாதிட்டவர். இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் காதியான் என்ற ஊரில் பிறந்த இவர், யூதர்கள் எதிர் பார்க்கும் மஸீஹ், கிறிஸ்தவர்கள் எதிர்பார்க்கும் மெஸய்யா, முஸ்லிம்கள் எதிர்பார்க்கும் மஹ்தி, ஈஸா (அலை), இந்துக்கள் எதிர்பார்க்கும் கல்கி அவதாரம் ஆகிய அனைத்தும் நான்தான் என்று கூறியவர். தற்போது அண்ணளவாக 198 நாடுகளில் இயங்கும் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்  அல்லது காதியானிகள் இவரின் கோட்பாடுகளைப் பின்பற்றுபவர்கள் ஆவர்.

இமாம் மஹ்தி (அலை) அவர்கள் அஹ்லுல் பைத் எனப்படும் ரஸூல் (ஸல்) அவர்களின் வம்சத்திலிருந்தே தோற்றம் பெறுவார். பனூ ஹாஷிம் கோத்திரத்தின் குறைஷிக் குலத்திலிருந்தே இவரது பரம்பரை அமையும். இவரின் வருகைக்கு முன் அநீதியில் திழைத்து நிற்கும் உலகம், இவரின் வருகைக்குப் பின் நீதியின் உறைவிடமாய் மாறும். இந்த மாற்றம் இமாம் மஹ்தி மூலமாகவே ஏற்படுத்தப் படும். அப்படி ஒரு கண்ணியத்தை அல்லாஹ் அவருக்கு ஏற்படுத்துவான்.

அலி (ரழி) அவர்கள், ஹஸன் (ரழி) அவர்களைக் காண்பித்து, எனது இந்தப் புதல்வன் தலைமைத்துவத்திற்கு உரியவர். இவரின் பரம்பரையிலே ஓர் இமாம் தோன்றுவார். அவரின் பெயர் ரசூல் (ஸல்) அவர்களின் பெயரை ஒத்திருக்கும். குணத்திலும், பழக்க வழக்கத்திலும் (உருவத்தில் அல்ல) அவர் ரசூல் (ஸல்) அவர்களைப் பிரதிபலிப்பார் எனக் கூறினார். மார்க்க அறிஞர்களிடையே இந்த விடயத்திலே பல கருத்துக்கள் காணப்படுகின்றன. இமாம் மஹ்தி (அலை) அவர்கள், ஹஸன் (ரழி) அவர்களின் பரம்பரையில் தோன்றுவார் என்பது அதிகமான மார்க்க அறிஞர்களின் ஒருமித்த கருத்தாகும்.
'மஹ்தி எனது சந்ததியைச் சேர்ந்தவராவார், அவர் படர்ந்த நெற்றியையும் எடுப்பான மூக்கையும் உடையவராவார். போரும் கொடுங்கோன்மையும் நிரம்பி இருக்கும் இப்பூமியில் அமைதியையும் நீதியையும் நிலை நிறுத்துவார். அவர் ஏழு வருடங்கள் ஆட்சி செய்வார்' என்று என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: அபூதாவூது 4272)

மஹ்தி (அலை) அவர்களின் தோற்றம் பற்றி வந்த பலமான ஹதீதாக மேலுள்ள ஹதீதே ஏராளமான மார்க்க அறிஞர்களால் ஏற்றுக்  கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மஹ்தி (அலை) பற்றிய நூற்றுக் கணக்கான ஹதீதுகள் இட்டுக் கட்டப்பட்டுள்ளன. பல்வேறு குழுக்கள், மஹ்தி என்ற கதாபாத்திரத்தை தங்களிலிருந்து காட்டி, பிரபல்யம் தேடிக் கொள்வதற்காகவும், சுய லாபத்திற்காகவும், மஹ்தி (அலை) பற்றிய பொய்யான கதைகளையும் ஹதீதுகளையும் தயாரித்துள்ளனர். அது பற்றி நாம் ஒவ்வொருவரும் அவதானமாக இருக்கக் கடமைப் பட்டுள்ளோம்.
இமாம் மஹ்தி (அலை) அவர்களின் வருகை என்பது அவர் வெளிப்படுதல் என்பதைக் குறிக்கும். மஹ்தி (அலை) அவர்களின் பிறப்பு அவரின் வருகை அல்ல. அவர் பிறந்து வளர்கின்ற போது ஓர் மார்க்க அறிஞராகவோ, சீர்திருத்தவாதியாகவோ வளர மாட்டார். சாதாரண ஒரு மனிதராகவே இருப்பார். நெறி பிறழ்ந்து நிற்கும் உலகினை, நீதி நெறி நிலைக்கும் அளவு மாற்றி அமைக்கக் கூடிய ஓர் கண்ணியவானாக அல்லாஹ் அவரை குறித்த நேரம் வரும் போது மாற்றியமைப்பான். அது ஒரு இரவு நேரம் என அறிஞர்களால் கூறப்படுகிறது. மறைவான பல விடயங்களை அறிந்தவன் வல்ல அல்லாஹ் ஒருவனே.

மஹ்தி (அலை) அவர்கள் வெளிப்படக்கூடிய கால கட்டம், உலகிலே, மிக மோசமான காலமாக அமைந்திருக்கும். அட்டூழியங்கள் பல்கிப் பெருகிக் காணப்படும். அநீதி பூமியை நிரப்பி வைத்திருக்கும். கொடுங்கோன்மை மிகைத்திருக்கும். அவ்வாறான, ஓர் காலகட்டத்தில், நீதியான நேர்மையான ஆட்சிக்காக மக்கள் ஏங்கித் தவிக்கின்ற வேளையில் அல்லாஹ், அதற்குப் பொருத்தமான ஒருவராக இமாம் மஹ்தி (அலை) அவர்களை மாற்றியமைப்பான். அதன் பின்னரே, அவர் வெளிப்படுவார்.

'இவ்வுலகின் ஒரு நாள் மட்டும் மீதமிருந்தால், எனது குடும்பத்திலிருந்து ஒரு மனிதரை அல்லாஹ் எழச் செய்வான். போர்களால் நிரம்பி இருக்கும் இந்த பூமியில் அவர் நீதியை நிலை நிறுத்துவார்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அலி (ரலி), நூல்: அபூதாவூது 4270)
{இன்ஷா அல்லாஹ் தொடரும்}

By: மௌலவியா தன்ஸீலா அம்ஜாட்

0 comments:

Post a Comment