ஜம்இய்யத்துல் உலமா ஹலால் பிரிவு விடுக்கும் முக்கிய அறிவித்தல்
அன்மைகாலமாக இலங்கையில் ஹலால் தொடர்பாக எழுத்து வந்த பிரச்சினைகளை கருத்தில் கொண்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஹலால் பிரிவு இலங்கை முஸ்லிம்கள் அனைவருக்கும் முக்கிய அறிவித்தல் ஒன்றை அன்மையில் விடுத்துள்ளது.
முஸ்லிம்களாகிய நாம் ஹலாலான உணவுகளை மாத்திரமே உண்ணவேண்டியது எமது மார்க்க கடமையாகும். இதனை இலகுவாக முஸ்லிம்கள் அடையாளம் கண்டு கொள்வதற்காகவே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஹலால் அத்தாட்சிப்படுத்தற் பிரிவு சேவையாற்றி வருகின்றது.
ஹலால் என உறுதி செய்யப்பட்ட பொருட்களை பொதுமக்கள் இலகுவாக அடையாளங்கண்டு கொள்வதற்காகவே ஜம்இய்யா தனது ஹலால் சின்னத்தை அப்பொருட்களில் பொறிந்து வந்தது.
எனினும் இது மாற்று மத சகோதர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும் அவர்களுக்கு முஸ்லிம்கள் ஹலால் உணவைத் திணிப்பதாகவும் கூறி ஹலால் தேவையொன்றால் முஸலிம்களுக்கு மாத்திரம் அதனைக் கொடுக்குமாறு வேண்டி எழுப்பபட்ட பிரச்சினையை கவனத்திற் கொண்ட அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பல்வேறு உயர்மட்டங்களோடு இது சம்பந்தமாக கலந்துரையாடல்களை நடாத்தியது.
இலங்கை வர்த்தக சம்மேளனம் மற்றும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த உயர்பீட பௌத்த பிக்குகளோடு நடத்தப்பட்ட முக்கிய கலந்துரையாடலில் பின்வரும் இரண்டு தீர்மானங்களும் ஏக மனதாக எடுக்கப்பட்டன.
01.ஜம்இய்யாவினால் ஹலால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பொருட்களில் ஜம்இய்யாவின் ஹலால் சின்னத்தை பொறிப்பது நிறுவனங்களின் விருப்பத்தில் விடப்படும்.
02.ஜம்இய்யா ஹலால் சான்றிதழ் வழங்கும் சேவையை இலவசமாகச் செய்ய வேண்டும்.
மேற் கூறப்பட்ட இரண்டு தீர்மானத்துக்கமையவே ஜம்இய்யா தனது ஹலால் சான்றிதழ் வழங்கும் சேவையை தற்பொழுது நடாத்தி வருகின்றது.
ஜம்இய்யாவினால் ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்ட நிறுவனங்கள்,பொருட்கள் சம்பந்தமான பூரண தெளிவை முஸ்லிம்கள் பெற்றுக் கொள்வதற்காக ஜம்இய்யா 0117425225 எனும் இலக்க விஷேட தொலைபேசி சேவையொன்றை ஆரம்பித்து வைத்துள்ளது.
அச் சேவையின் மூலம் வாரத்தின் ஏழு நாட்களிலும் காலை 9.00 மணி முதல் மாலை 07.00மணி வரை ஹலால் சம்பந்தமான அனைத்து தெளிவுகளையும் பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும் எனவும்,ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கும் நிறுவனங்கள் பொருட்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய பட்டியலும் நாடளாவீய ரீதியில்லுள்ள அனைத்து பள்ளி வாயல்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாவும் அவற்றினை பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்படுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஹலால் பிரிவின் செயலாளர் அஷ்ஷேக் முர்ஷித் முழப்பர் தெரிவித்துள்ளார்.
ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கும் நிறுவனங்கள் பொருட்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய பட்டியல் எமது ஊரிலுள்ள மூன்று ஜும்ஆ பள்ளிவாசல்களிலும் அறிவித்தல் பலகையில் காணக்கூடியதாக இருக்கிறது.
0 comments:
Post a Comment