கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

குஜராத் கலவரத்தில் 9 பேர் பலி!…

ஆமதாபாத்:-குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தினர் தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பிரிவில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினார்கள். சுமார் 10 லட்சம் பேர் திரண்டதால் ஆமதாபாத் நகரமே குலுங்கியது. போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளரான 22 வயது ஹார்திக் படேலை போலீசார் கைது செய்தனர். இதை அறிந்ததும் படேல் சமுதாயத்தினர் ஆமதாபாத்தில் வன்முறையில் ஈடுபட்டனர். அது பெரும் கலவரமாக வெடித்தது. இதில் 9 பேர் பலியானார்கள்.


கலவரக்காரர்கள் பா.ஜ.க. தலைவர்களின் அலுவலகங்கள், வீடுகளை குறி வைத்து தாக்கினார்கள். அரசு அலுவலகங்கள் உடைக்கப்பட்டன. செவ்வாய்க்கிழமை மாலையில் இருந்து விடிய, விடிய கலவரம் நடந்தது. கலவரத்தை போலீசாரால் கட்டுப்படுத்த இயலவில்லை. இதையடுத்து போராட்ட ஒருங்கிணைப்பாளர் ஹார்திக் படேலை விடுதலை செய்தனர். என்றாலும் கலவரம் ஓயவில்லை. மாறாக நேற்று சூரத், ராஜ்கோட், ஜாம் நகர், போர்பந்தர், பாவ்நகர் உள்பட பல நகரங்களுக்கு கலவரம் பரவியது.

இதில் குஜராத் மாநில அரசு பேருந்துகள் அதிக பாதிப்பை சந்தித்தன. கலவரக்காரர்களால் 292 பஸ்கள் தீ வைத்தும், கல்வீசியும் தாக்கப்பட்டன. இதில் சுமார் 200 பஸ்கள் எரிந்து நாசமானது. கலவரம் பரவியதைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்துக்கு நேற்று 5 ஆயிரம் ராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆமதாபாத்தின் முக்கிய பகுதிகளில் அவர்கள் நிறுத்தப்பட்டனர். இதனால் ஆமதாபாத் நகரில் வன்முறை சம்பவங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தன.

ஆனால் சூரத் உள்பட மேலும் சில நகரங்களில் நேற்று கலவரம் தலை விரித்தாடியது. சூரத் மாநகராட்சிக்கு சொந்தமான 2 தானியக்கிடங்குகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் சூரத் நகரில் வைரம் பட்டை தீட்டும் ஆலைகள், துணி உற்பத்தி ஆலைகள் மூடப்பட்டன. ராஜ்கோட் நகரில் மத்திய மந்திரி மோகன் குண்டாரி பாலின் அலுவலகம் நொறுக்கப்பட்டது. பா.ஜ.க.வினரை படேல் சமுதாயத்தினர் இப்படி குறி வைத்து தாக்கியதால் வேதனை அடைந்த பிரதமர் நரேந்திரமோடி, பொதுமக்கள் கலவரத்தை கைவிட்டு அமைதி காக்க வேண்டும் என்றார். என்றாலும் குஜராத்தில் இயல்பு நிலை திரும்பவில்லை. இட ஒதுக்கீடு பெறும் வரை போராட்டத்தைத் தொடரப்போவதாக போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ஹார்திக் படேல் அறிவித்துள்ளார். போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.30 லட்சம் வழங்க வேண்டும். போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் மீண்டும் வன்முறையில் ஈடுபடுவோம் என்று படேல் போராட்டக்குழுவினர் எச்சரித்துள்ளனர். இதனால் ஆமதாபாத், சூரத் உள்பட பல நகரங்களில் பதற்றம் நீடிக்கிறது. இந்த நகரங்களில் மீண்டும் வன்முறை வெடிக்காமல் இருக்க குஜராத்துக்கு இன்று மேலும் 2 ஆயிரம் ராணுவ வீரர்கள் விரைந்துள்ளனர்.
கலவரத்தை கட்டுப்படுத்த ஆமதாபாத், சூரத், ராஜ்கோட், மெஹசானா, படான், பலென்பூர், ஊஞ்சா, விஸ்நகர், ஜாம்நகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த ஊரடங்கு இன்று 2–வது நாளாக நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டது. மக்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். கலவரம் பாதித்த பகுதிகளிலும், பதற்றமான பகுதிகளிலும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். 7 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டதால் தற்போது குஜராத்தில் அமைதி திரும்பத் தொடங்கியுள்ளது என்றாலும் மக்களிடம் பதற்றம் காணப்படுகிறது. சகஜ வாழ்க்கைக்கு மக்கள் இன்னும் திரும்பவில்லை. நேற்றிரவு சிறு, சிறு கல்வீச்சு தவிர பெரிய அளவில் வன்முறை ஏற்படவில்லை. இன்று பகலிலும் அமைதி நிலவியது. கடந்த 2 நாட்களாக குஜராத் மாநிலத்தை கொந்தளிக்க வைத்த இந்த கலவரத்தால் ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் பஸ், ரெயில் போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளது. இது மக்களை திணற வைத்துள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த வாரம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment