ஈரான்- பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பயங்கர நிலநடுக்கம். நூற்றுக்கணக்கானோர் பலி?
இரானின் தென்கிழக்குப் பகுதியில்,பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் இன்று மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி மாலை 4.14 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ஈரானை கடுமையாகத் தாக்கியது. அரபு நாடுகள் மற்றும் இந்தியாவின் வடக்கு பகுதிகளும் தப்பவில்லை.
ஈரானில் இரண்டு முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டன. இது ரிக்டர் அளவு கோலில் 8 மற்றும் 7.8 ஆக பதிவாகியிருந்தது. வீடுகள், அலுவலகங்கள் பயங்கரமாக குலுங்கியதால் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். கட்டிடங்கள் இடிந்து விழுந்து, 40 பேர் வரை இறந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. நூற்றுக்கணக்கானோர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தொலை தூரத்திலுள்ள சிஸ்டான் பலூச்சிஸ்தான் மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 7.8 அளவுக்கு இருந்ததை தாங்கள் பதிவு செய்துள்ளதாக, அமெரிக்க நிலவியல் ஆய்வு மையத் தெரிவித்துள்ளது.
துபாயில் இந்த நிலநடுக்கத்தின் அளவு 6.5 ரிக்டராக பதிவாகியிருந்தது. இதேபோல் பக்ரைன், குவைத், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தானில் குவெட்டா, பெஷாவர், ஐதராபாத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது. பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். பலுசிஸ்தான் பகுதியில் 5 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் உத்தர பிரதேசம், பஞ்சாப், அரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதால் பொதுமக்கள் பயத்தில் வீடுகளை விட்டு வெளியேறி திறந்த வெளியில் தஞ்சம் அடைந்தனர். ஆனால் இந்தியாவில் நிலநடுக்க பாதிப்புகள் குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
0 comments:
Post a Comment