இலங்கை ஜம்மியத்துல் உலமா விவகாரம் சொல்லும் உண்மைகள்!!
அப்பிள் போன்களை ஏந்த துடிக்கும் கரங்கள், கலக்க்ஷி கனவுகளில் மிதக்கும் உள்ளங்கள். லப்டொப்களை தோளில் சுமக்க ஏங்கும் தோள்கள் இப்படி இலங்கையின் படித்த முஸ்லிம்களை பற்றி நிறையவே சொல்லலாம். விஜய்யின் படத்திற்காக ஏங்கும் கூட்டம், கத்த வீட்டு தம்புரியாணிக்கா ஊறும் நாவுகள், தொலைக்காட்சியில் வாழ்க்கையை தொலைக்கும் மனசுகள் இப்படி இலங்கையின் கிராஸ் டூட் லெவல் முஸ்லிம்களை பற்றியும் நிறையவே சொல்லலாம். இப்போது இவர்கள் எல்லோரும் முரண்படுவதும அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவுடன். அதன் தலைவருடன்.
ரமழானின் நோன்பு பெருநாள் விவகாரத்தில் ஜம்மியத்துல் உலமா தெரிந்து கொண்டே மனமுரண்பாடாக ஒரு பெரிய தவறை செய்துள்ளது. போதாதென்று செய்த தவறை சரியென வாதம் செய்து ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் முட்டாளாக்கப் பார்க்கிறது.
அதன் தலைவர் ரிஸ்வி முப்தியை பற்றிய விமர்சனங்கள் அனல் பறக்கின்றன. ஸலபி கொள்கை பிரிவின் லோக்கல் ஹீரோ ஒரு படி மேலே போய் ஜம்மியத்துல் உலமாவை “அஹ்லுல் பித்ஆ” என பெருநாள் பிரசங்கத்தில் பிரகடனம் செய்துள்ளார்.
ஜம்மியத்துல் உலமாவிற்கு எதிராக இறுதி யுத்தத்திற்கு தயார் என்ற பாணியில் S.L.T.J. கச்சை கட்டி மல்லுக்கு நிற்க தயாராகிறது. கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என தப்லீக் ஜமாத்தையும், ஜம்மியத்துல் உலமாவையும் சிக்ஸர் அடிப்பதில் தங்கள் மிம்பர்களை பேட்டிங் பிச்களாக மாற்றி வருகின்றனர் A.C.T.J. பிரச்சாரகர்கள்.
இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் இலங்கை ஜமா அதே இஸ்லாமியின் அமீர் ஹஜ்ஜுல் அக்பர் ஜம்மியத்துல் உலமாவின் தலைமைத்துவம் பற்றி கேள்வி எழுப்பியதுடன் நேரடி தாக்குதலையும் ஆரம்பித்துள்ளார். இலங்கை வாழ் புத்திஜீவித்துவம் உள்ள முஸ்லிம்களை கவர் பண்ணும் விதத்தில் அவரது அறிக்கை பொறி வெளியாகியுள்ளது. இலங்கை முஸ்லிம்களின் இக்கட்டான வரலாற்று தருணங்களில் மௌனம் காத்த இவர் இப்போது சடுதியாக அறிக்கை விட்டுள்ளார். குட்டைமிங் சொட் பிளேய்ட் பை உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர்.
ஜம்மியத்துல் உலமாவின் தலைமையை கவிழ்த்து, தப்லீக் ஆதிக்கத்தை ஓரம்கட்டி “நளீமிகளின்” தலைமைத்துவத்தை நிறுவும் புரட்சியின் ஆரம்ப படிகள் இவை. மிலிட்டரி கூஃ போல இது மொலவி கூஃ.
இந்த விடயத்தில் ஜமா அதே இஸ்லாமியின் ஜம்மியத்துல் உலமாவில் பிரதி தலைமை வகிக்கும் அகார் முஹம்மட் மௌனம் காக்கிறார் (அவர் பிறதேசம் சென்றுள்ளாரானாலும் கூட), கொழும்பு மாவட்ட ஜம்மியத்துல் உலமாவின் தலைவர், தப்லீஃ ஜமாத்தின் லேத்தல் வெப்பன் யூசுப் முப்தி மௌனம் காக்கிறார். தவ்ஹீத்திற்காக ஜம்மியத்துல் உலமாவிற்காக இருக்கும் இரண்டு பெரிய தலைகள் மௌனம் காக்கின்றன. இரை வரும் போது வேட்டையாட.
எல்லாமே சந்தர்ப்பவா சிந்தனைகளையும், சுயநல இலாபங்களை கொண்டனவாகவும் இருப்பதுதான் இங்கு வேதனையான விடயம்.
ஜம்மியத்துல் உலமாவை பலவீனப்படுத்துவது என்பது எதிர்கால இலங்கை முஸ்லிம்களின் சமூக பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் வாய்ப்புக்களை அதிகம் கொண்டுள்ளது. ஜம்மியத்துல் உலமாவை மௌனிக்க வைத்தால் அதற்கு பகரமாக இவர்களிடம் எந்த மாற்று அமைப்பும் கிடையாது அகில இலங்கை ரீதியில் ஒரே தருணத்தில் கட்டளைகளை செயற்படுத்த.
நாம் ரிஸ்வி முப்தி என்ற மனிதனிற்காக பரிந்து பேசவில்லை. கடந்த பெப்ரவரியில் இலங்கை சுதந்திர கொண்டாட்டங்களின் போதே “மஸ்ஜித்களில் தேசியகொடி நாட்டச் சொல்லி இலாஹியத்தை கேள்விக்குறியாக்கிய” மனிதர். அப்போதே அவர் மரணித்து விட்டார்.
குப்பாரிற்கு இலாஹியத்தை சரியாக சொல்ல வக்கில்லாத மனிதர்கள் தங்கள் சமூக நலன்களிற்காக அவர்களை திருப்திப்படுத்தும் பாதையை தெரிவு செய்ததன் விளைவுகளை இலங்கை முஸ்லிம்கள் அனுபவிக்க வேண்டும் என்பதே விதி.
S.L.B.C.யில் ஒரு நாட்டு தலைவரின் தேசிய உரை போல ரிஸ்வி முப்தி மீண்டும் மீண்டும் பேசும் போதே இதற்கு பின்னால் இருக்கும் பின்புலங்கள் பற்றிய கேள்விகள் எழுகின்றன. பிறை விடயத்தில் இவ்வளவு பேசினால் என்னவாகும் என்பது தெரியாத குழந்தையல்ல ரிஸ்வி முப்தி.
ஷாபிஃ கடலில் ஹனபி கப்பலை செலுத்தும் தந்திரமான மீகான் அவர். இருந்தும் அவர் இதை செய்துள்ளார் என்றால் இதன் பின்னால் உள்ள அழுத்தங்கள் பற்றி யோசிக்க வேண்டியுள்ளது.
இலங்கை முஸ்லிம்களை பௌத்த இனவாத அலைகளில் இருந்து காத்து நிற்கும் ஒரே அரண் இன்றைய நிலையில் ஜம்மியத்துல் உலமா மட்டுமே (அவர்கள் மீது தவக்கல் வைத்து இதனை சொல்லவில்லை). அதை தகர்ப்பது நம் வீட்டின் நடு அறையில் பொது பல சேனாவிற்கு படுக்கை விரிப்பதற்கு சமன். எம் புதைகுழிகளை நாமே வெட்டிக்கொள்ள கூடாது.
ரிஸ்வி முப்தி உட்பட அவரிற்கு இந்த விவகாரங்களில் துணை போனவர்களை வெளியேற்றி ஒரு திடமான கூட்டு அணி தலைமைத்துவத்தை கையேற்ற கூடிய போராட்டம் ஜம்மியத்துல் உலமாவிற்குள் சத்தியத்திற்காக இயங்கும் மொலவிகளால் முன்னெடுக்கப்படல் வேண்டும். அது ஜம்மியத்துல் உலமாவின் சுவர்களை தாண்டி தெருக்களில் வந்து விட்டால் அதன் விதியை எழுத எல்லோரும் தயாராவார்கள்.
நோயாளிக்கு வந்தது கேன்சர் என்றால் அந்த கட்டி வெட்டி அகற்றப்படல் ஏற்புடையதே. இங்கு பிரச்சனை அதனை செய்ய கத்தியை யார் பிடிப்பது என்பது தான். வைத்தியர் பிடித்தால் சேர்ஜரி செய்வார். பாபர் பிடித்தால் சிரைத்து விடுவார். அது நோயாளியின் எல்லா ஓகன்களையும் வெட்டி துண்டாடி விடும். SLTJ ஜம்மியத்துல் உலமாவை நோக்கி எடுக்கும் நிலைப்பாடுகள் இதனையே உணர்த்தி நிற்கின்றன.
மியன்மார் களங்களின் அச்சங்களை இதயங்களில் சுமந்துள்ள எமக்கு இந்த நிகழ்வுகள் பெரும் வேதனைமிக்கதாக அமைகின்றன. பிரச்சனைகளை இதயங்களால் அனுகாமல் மூளைகளால் அனுகும் பக்குவம் இன்னும் எமக்கு நிறையவே தேவை.
-கைபர் தளம்
0 comments:
Post a Comment