கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

பிறைப் பிரச்சினை - குற்றம் யார் மீது?



பல ஊர்கள் வியாழன் பெருநாள் கொண்டாடுவதாக தீர்மானித்து விட்டன. நோன்பு பிடிப்பது ஹராம் என்ற பத்வாக்கள் மின்னல் வேகத்தில் பரவியிருந்தன. விமர்சனங்களும் கேள்விக்கணைகளும் ஓய்வதாகத் தெரியவில்லை.

இவற்றையெல்லாம் சரிகண்ட நிலையில் நான் இதனை எழுதவில்லை. எனினும் சமூகத்தின் நிலை வியாழன் பிற்பகல் ஒரு மணிவரை இவ்வாறு தான் இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.

இதற்கு யார் காரணம்?
பக்கச்சார்போடு குறைகளை ஒருபக்கம் வைத்துப் பேசி விடாமல் படிப்பினை பெறும் நோக்கில் நடுநிலையாக சிந்தித்தால் நடந்துமுடிந்த குழப்பத்துக்கான பொறுப்பின் பங்குகளை உரியவர்கள் ஏற்றுத்தான் ஆக வேண்டும். இனியும் இப்படியொரு குழப்பம் சமூகத்தில் வரக்கூடாது என்ற ரீதியில் இதுபற்றி சிந்திப்பது சமூகத்தின் பொறுப்பாளர்களது தார்மீகக் கடமையாகும்.

..........பிறை விவகாரம் அவ்வாறானதல்ல. அது ஒரு நாளோடு முடிவடைந்து விடுகிறது. அத்துடன் முடிவு அவசராமாகத் தேவைப்படும் விவகாரமும் கூட. அதுமட்டுமல்ல நோன்பு நோற்பது ஹராமா? பெருநாள் கொண்டாடுவது ஹராமா? என்று சிந்தனையைக் குழப்பும் சீரியஸான ஒரு மார்க்கப்பிரச்சினையுமாகும். இதனை ஆற - அமர விட்டுத் தீர்க்க முடியாது. 'இரண்டு மணித்தியாலங்கள் நாம் இதற்காக செலவிட்டோம்' என ஜம்இய்யதுல் உலமா கூறுவதை குறைத்து மதிப்பிடாவிட்டாலும் இன்னும் சில மணித்தியாலங்கள் செலவிட்டு சமூகம் குழம்பாமல் தடுக்க முடிந்திருந்தால் அதனைப் பிழை என்று யார் கூறுவார்கள்?

சமூகத்தைக் கட்டுப்படுத்த விரும்பும் தலைவர்கள் சமூகத்தைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகளை அறிந்திருக்க வேண்டும்.

“பிறை விடயத்தில் இத்தகையதொரு தெளிவான விளக்கம் சமூகத்திற்கு ஏற்கனவே கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். எனினும் வியாழன் பிற்பகல் ஒரு மணிக்குத் தான் சமூகத்திற்குப் பிறை தொடர்பான இத்தகையதொரு விளக்கம் கிடைக்கிறது முக்கால் நாள் சமூகம் விளக்கமின்றி குழப்பத்தில் சிக்கித்தவித்ததன் பின்னர்...

விளக்கம் சொல்ல வேண்டியவர்கள் அதுவரை சமூகத்தை அதன் போக்கில் விட்டிருந்தார்களோ அல்லது சமூகம் விளக்கமின்றியே கட்டுப்படுமென்று எதிர்பார்த்தார்களோ தெரியவில்லை. சமூகத்தை யார் யாரோ வழிநடாத்தி தீர்மானங்களை எடுத்து கருமமாற்றி முடிந்ததன் பிறகு... பெருநாள் கொண்டாடியவர்கள் பெருநாள் கொண்டாடியதன் பிறகு... நோன்பை விட்டவர்கள் நோன்பை விட்டதன் பிறகு... விமர்சனங்கள் செய்தவர்கள் முடிந்தமட்டும் விமர்சனம் செய்த பிறகு சமூகத்திற்கு விளக்கம் கிடைத்தது.

நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல ஒரு பத்வாவையும் ஒரு வினாவுக்கான விடையையும் தவிர விளக்கம் உண்மையில் திருப்திகரமாகவே இருந்தது.

வினா இது தான்: வானவியல் நுட்பங்களை அறிந்த சர்வதேச மற்றும் உள்ளுர் நிபுணர்களின் வழிகாட்டலுக்கேற்ப இலங்கையில் புதன் மாலை வெற்றுக்கண்களுக்கு பிறை தெரிவதற்கான வாய்ப்பே இல்லாதிருந்தால் பிறை தீர்மானிக்கும் மாநாட்டை அன்று ஏன் கூட்ட வேண்டும்? பிறை பார்க்குமாறும் பிறை கண்டால் அறியத்தருமாறும் மக்களுக்கு ஏன் வேண்டுகோள் விடுக்க வேண்டும்?

இதனைவிட புதன் மாலை மாநாட்டைக் கூட்டி வியாழன் பிற்பகல் ஒரு மணிக்குக் கொடுத்த விளக்கத்தை அப்போது கொடுத்திருக்கலாமல்லவா. அல்லது செவ்வாய் பின்னேரம் மாநாட்டைக் கூட்டி இந்த விளக்கத்தைக் கொடுத்த பின் புதன் மாலை பிறை தீர்மானிக்கும் மாநாடு நடைபெறமாட்டாது என்பதை அறிவித்திருக்கலாமல்லவா? அப்போது ஊர் மட்டங்களில் தீரமானமெடுக்கும் பொறுப்புதாரிகள் ஜம்இய்யதுல் உலமாவின் முடிவுடன் பெரும்பாலும் உடன்பட்டுச் செல்லும் நிலை ஏற்பட்டிருக்கலாம். சமூகத்தில் ஏற்பட்ட குழப்பங்களையும் தவிர்த்திருக்கலாம்.

தலைப்பிறையைப் பிரகடனம் செய்ய வேண்டிய பொறுப்பாளர்கள் தேவையான விளக்கத்தை ஏற்கனவே கொடுக்காமல் வியாழன் பிற்பகல் ஒரு மணி வரை காத்திருந்து விட்டு சமூகத்தை மாத்திரம் குறை சொல்வது முறையல்ல.

அந்த விளக்கமின்மையால் நோன்பை விட்டவர்களில் பலர் வருந்தினார்கள். அந்த வருத்தத்துக்கு நாமும் காரணம் என்பதை உணர்ந்து பிறை தீர்மானித்த பொறுப்பாளர்கள் தவ்பா செய்யாமல் நோன்பை விட்டவர்களைப் பாவிகளாக்கி அவர்கள் தவ்பா செய்து நோன்பையும் கழா செய்ய வேண்டும் என்று பத்வாக் கொடுப்பது ஷரீஆ தர்மத்துக்கு எந்தவகையிலும் பொறுத்தமானதல்ல.

....................................இருப்பினும் மேற்குறிப்பிட்ட பத்வாவும் மேலே கேட்கப்பட்ட விடையில்லாத வினாவும் கேட்போருக்கு உணர்த்திய உண்மை யாதெனில்,

'சமூகம் நூறு வீதம் குற்றவாளிகள். பொறுப்பாளர்கள் நூறு வீதம் தூய்மையானவர்கள். எனவே சமூகம் தவ்பா செய்ய வேண்டும்.'

சமூகத்தலைவர்களின் மனப்பாங்கு இத்திசையில் தொடர்ந்தும் செல்லுமானால் ஒற்றுமைக் கோஷம் வாய்க்கும் வார்த்தைக்கும் இனிமையாக இருக்கலாம். சமூகம் எப்போதும் பிரச்சினைகளில் சிக்கிய வண்ணமே இருக்கும்.

முகநூல் மூலம்
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களது கருத்தின் சில பகுதிகள்
 

0 comments:

Post a Comment