டமாஸ்கஸ் ராணுவ பில்டிங்கில் குண்டுவெடிப்பு! ஒரே தாக்குதலில் 4 ஜெனரல்கள் பலி?

சிரியா தலைநகர் டமாஸ்கஸ்ஸில் நேற்றிரவு (ஞாயிறு) நடந்த குண்டுவெடிப்பு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம், இந்த குண்டுவெடிப்பில், சிரிய ராணுவத்தின் மிக முக்கியமான 4 ஜெனரல்கள் ஒரே நேரத்தில் கொல்லப்பட்டதாக தகவல்கள் அடிபடுகின்றன. இந்த விஷயத்தில் சிரியா அரசு, கனத்த மௌனம் சாதிப்பதும், சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டமாஸ்கஸின் புறநகரப் பகுதியில் உள்ள ராணுவ பில்டிங் ஒன்றிலேயே குண்டு வெடித்ததாக தெரிகிறது.
இதில் ராணுவத்தைச் சேர்ந்த 31 பேர் கொல்லப்பட்டனர் என்று ஒரு தகவல் உண்டு. இந்த பில்டிங் எதற்காக உபயோகிக்கப்பட்டது என்ற தகவல் அதிகாரபூர்வமாக இல்லை. ஆனால், சிரியாவில் நடக்கும் உள்நாட்டு யுத்தத்தின் ராணுவத் திட்டமிடல், இந்த பில்டிங்கில் இருந்தே நடந்ததாக சொல்கிறார்கள்.
தலைநகர் டமாஸ்கஸின் வடகிழக்கே ஹராஸ்டா என்ற இடத்தில் இந்த பில்டிங் அமைந்திருந்தது.
குண்டுவெடிப்பு நடந்தபோது, இந்த பில்டிங்கில் 3 ஜெனரல்கள், ஒரு பிரிகேடியர் ஜெனரல் மற்றும், அவர்களது பாடிகார்டுகள் மட்டும் இருந்ததாக தெரியவருகிறது. கொல்லப்பட்டதாக கூறப்படும் 31 பேரும், இவர்கள்தான்.
ஒரு ராணுவத்தின் 3 ஜெனரல்கள், மற்றும் ஒரு பிரிகேடியர் ஜெனரல் ஆகியோர் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் ஒரேயிடத்தில் சந்தித்தால், அது முக்கிய ராணுவ திட்டமிடல் சந்திப்பாக இருக்கலாம் என்றே ஊகிக்கப்படுகிறது.
அந்த இடம்தான், குண்டுவைத்து தகர்க்கப்பட்டுள்ளது.
இங்குள்ள முக்கிய கேள்வியே, தலைநகருக்கு வெளியேயுள்ள இந்த பில்டிங்கில் இவர்கள் சந்திக்கப் போகிறார்கள் என்பது குண்டு வைத்தவர்களுக்கு எப்படி தெரியவந்தது?
மற்றொரு விஷயம், தகர்க்கப்பட்ட பில்டிங்கின் தரையடி பேஸ்மென்ட்டில்தான் குண்டு வைக்கப்பட்டு, வெடிக்க வைக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.
அதன் அர்த்தம், குண்டு வைத்தவர்களால் இந்த ராணுவ பில்டிங்குக்கு உள்ளே ஊடுருவி செல்ல முடிந்திருக்கிறது. யாரும் அறியாமல், வெடிகுண்டுகளை கொண்டுபோய் பொருத்தி வைக்கவும் முடிந்திருக்கிறது.
பெரிய அளவில் குண்டுவெடிப்பு நடந்தது என, அங்குள்ள மக்கள் கூறியதாக சுயாதீன மீடியா செய்திகள் வெளியாகியுள்ளன. குண்டுவெடிப்பு நடந்து சுமார் 24 மணிநேரம் ஆன நிலையிலும், கொல்லப்பட்டவர்கள் யார் என்பது பற்றி அரசு மீடியாக்கள் செய்தி எதையும் வெளியிடவில்லை.
கொல்லப்பட்டவர்களின் அடையாளத்தை விடுங்கள், குண்டுவெடிப்பு நடந்தது என்ற செய்தியே, அரசு மீடியாக்களால் வெளியிடப்படவில்லை. குண்டுவெடிப்பு தொடர்பாக சுயாதீன மீடியாக்கள் வெளியிட்ட செய்திக்கு மறுப்புகூட அரசு தரப்பிடம் இருந்து வெளியாகவில்லை என்பதே, சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டமாஸ்கஸ்ஸை சுற்றியுள்ள பகுதிகள் சிலவற்றை போராளிப் படையினரிடம் இருந்து மீட்பதற்காக, ராணுவம் கடும் யுத்தம் புரிந்து கொண்டிருக்கும் நேரத்தில், இந்த தாக்குதல் நடந்திருக்கிறது.
இவர்கள் குறிப்பிடுவதுபோல நிஜமாகவே 4 ஜெனரல்கள் இதில் கொல்லப்பட்டிருந்தால், அந்த யுத்தத்தில், ராணுவத்துக்கு பெரும் பின்னடைவு ஏற்படலாம்.
கைபர்தளம்
0 comments:
Post a Comment