மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்டில் அரைசதம் அடித்து விளையாடி வந்த சச்சின் டெண்டுல்கர் 74 ரன்கள் எடுத்த போது ஆட்டம் இழந்தார். சச்சின் டெண்டுல்கர் கடைசி டெஸ்ட் போட்டியில் சதம் அடிக்க விரும்பிய ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்டில் முதல் நாளில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸ்சில் 34 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்திருந்தது. சச்சின் 73 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 38, புஜாரா 49 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், ரசிகர்களின் பெரும் ஆரவாரத்துக்கு இடையே போட்டியின் இரண்டாவது நாளில் தனது ஆட்டத்தைத் தொடர்ந்தார் சச்சின். சச்சின் பேட்டிங்கின் ஒவ்வொரு அசைவுக்கும் ரசிகர்கள் ஆனந்தக் குரல் எழுப்பினர். அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை விளாசியபோது வான்கடேவில் உற்சாக வெள்ளம் கரைபுரண்டோடியது.பின்னர், சச்சின் டெண்டுல்கர்கள் 91 பந்துகளில் அரைசதத்தை (52*) எட்டியபோது ரசிகர்களின் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது.
 
74 ரன்களில் அவுட்:
இந்நிலையில், நரசிங் டியோனரின் வீசிய பந்தை சச்சின் விளாச அதனை லாவகமாக பிடித்தார் டேரன் சாமி. பந்தை பிடித்த சாமியின் முகத்தில் மகிழ்ச்சியும், கவலையும் சேர்ந்தே இருந்ததாக கமன்டேட்டர்கள் வர்ணித்தனர். அந்த ஒரு கனம் ரசிகர்கள் அனைவரும் ஏமாற்றத்தில் கதறினர். அரங்கில் இருந்து அனைவரும் எழுந்து நின்று, சச்சினுக்கு விடை கொடுத்தனர்.118 பந்துகளில் 74 ரன் களை சச்சின் எடுத்துள்ளார். இவற்றில் 12 பவுண்டரிகளும் உள்ளடக்கம்.