தமிழ் பேசும் மக்கள் வாக்களித்தார்கள் என்பதற்காக சிங்கள மக்கள் மத்தியில் இனவாதம் பரப்பப்படுகிறது- ஜெனரல் பொன்சேகா குற்றச்சாட்டு
வடக்கு கிழக்கு உள்ளிட்ட பிரதேசங்களில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் எனக்கு வாக்களித்தார்கள் என்பதை மாத்திரமே காரணம் காட்டி, நாட்டில் அரசாங்கம் இனவாதத்தைப் பரப்பிக்கொண்டிருக்கிறது.வடக்கு கிழக்குப் பிரிவினைக்காக பிரபாகரன் நடவடிக்கைகளை மேற்கொண்டதைப் போன்று, தற்போது தெற்கில் பிரிவினையை ஏற்படுத்துவதற்கு துரோகத்தனமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று கூட்டுப்படைகளின் முன்னாள் தலைமையதிகாரியும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட்டவருமான ஜெனரல் சரத் பொன்சேகா குற்றம் சாட்டினார்.தேர்தலில் தோல்வியடைந்தமை குறித்து நாம் கவலை அடையவில்லை. ஆனால், உண்மையான மாற்றத்திற்காகவும், நிரந்தரமான சுதந்திரத்திற்காகவும் அளிக்கப்பட்ட வாக்குகள் அப்பட்டமான முறையில் பறித்தெடுக்கப்பட்டுள்ளன. எம்மீது மக்கள் வைத்த நம்பிக்கையை நிறைவேற்றமுடியாமல் போனதையிட்டே நாம் கவலை அடைகிறோம்.இன்று நாட்டில் சட்டம், ஒழுங்கு இல்லை. தேர்தலுக்கு முன்னர் இருந்த சிறிதளவான ஜனநாயகம் கூட அற்றுப்போயுள்ளது. இருப்பினும், மக்களின் வெற்றியை அவர்களுக்கு மீண்டும் பெற்றுக்கொடுப்போம் என்றும் அவர் கூறினார்.மோசடியான தேர்தலுக்கு எதிராக மக்களை அணிதிரட்டுவோம் எனும் தலைப்பின் கீழ், எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஏற்பாடு செய்திருந்த விசேட செய்தியாளர் மாநாடு நேற்று திங்கட்கிழமை கோட்டே சோலிஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே ஜெனரல் பொன்சேகா மேற்கண்ட வாறு தெரிவித்தார்.இந்தச் செய்தியாளர் மாநாட்டில் ஐ.தே.க.வின் பிரதித் தலைவர் கரு ஜெயசூரிய, ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், மற்றும் ஸ்ரீல.சு.கட்சி மக்கள் பிரிவு ஏற்பாட்டாளர் மங்கள சமரவீர ஆகியோரும் சமுகமளித்திருந்தனர். இங்கு ஜெனரல் பொன்சேகா தொடர்ந்தும் கூறுகையில்,நாம் எமது வெற்றியை மக்களின் வெற்றியாகவே கருதுகிறோம். நடந்து முடிந்த தேர்தல் தொடர்பிலான முடிவுகளை மக்கள் நம்புவதற்குத் தயாரில்லை. மக்களின் வெற்றி மக்களுக்குக் கொடுக்கப்படவில்லை. இலங்கையின் தேர்தல் வரலாற்றில் முதல் தடவையாகவே இவ்வாறான மக்கள் எதிர்ப்பு எழுந்துள்ளது. அத்துடன், இந்த வெற்றி கொள்ளையடிக்கப்பட்டு விட்டதாகவும் மக்களால் கருதப்படுகின்றது. மக்கள் எம்மை நிராகரித்து, அதன்மூலம் நாம் தோற்கடிக்கப்பட்டிருந்தால் பரவாயில்லை. ஆனால், இங்கு நடந்திருப்பது தலைகீழானதாகும். மக்கள் பாரிய எதிர் பார்ப்புகளைக் கொண்டிருந்தனர். மாற்றம் ஒன்று வேண்டுமென முழுநாடும் காத்துக்கொண்டிருந்தது. அந்த மாற்றம் நிகழவில்லையே என்று மக்கள் கவலை தோய்ந்த வண்ணம் வேதனையுடன் உள்ளனர். இந்தத் தேர்தல் முடிவு தொடர்பில் நாம் கருத்திற்கொள்ளாதிருப்பதாகக் கூறமுடியாது. சகல விடயங்களும் ஆராயப்பட்டு வருகின்றன. மக்களால் எதிர்பார்க்கப்பட்ட வெற்றியையும், அவர்களது எதிர் பார்ப்பையும் நிச்சயமாக அவர்களுக்குப் பெற்றுக்கொடுப்போம். அந்த நிலைப் பாட்டில் மாற்றமில்லை.ஜனநாயக நாட்டில் நடைபெறுகின்ற தேர்தல் ஒன்றின் வெற்றி உறுதியாகி விட்டதன் பின்னர் மாற்றுத் தரப்பினரைத் தாக்கவோ அல்லது அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதற்கோ முயற்சிக்கக் கூடாது. ஆனாலும், இன்று அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் பலவகையிலும் பழிவாங்கப்படுகின்றனர்.எமது ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்ற அதேவேளை, ஊடக அடக்குமுறைகளும், கருத்துச் சுதந்திரத்திற்கு இடையூறுகளும் ஏற்படுத்தப்படுகின்றன. அது மட்டுமல்லாது, எனது பாதுகாப்பு முற்றாக நீக்கப்பட்டுள்ளது. எனக்கு ஆதரவாகச் செயற்பட்ட இராணுவ உயரதிகாரிகளின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.மேலும், பல அதிகாரிகள் பதவி இறக்கப்பட்டுள்ளனர். இன்னும் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது இவ்வாறிருக்க, எனது பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு உத்தியோத்தர்கள், எனது அலுவலகப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அத்துடன், எனது அலுவலகத்திலுள்ள கணினிகள் மற்றும் அலுவலக உபகரணங்கள் பலவந்தமாக எடுத்துச்செல்லப்பட்டுள்ளதுடன், அலுவலகத்திற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. இவை மிகமோசமான, அராஜகம் நிறைந்த செயற்பாடுகளாகும்.உண்மையாகவே தேர்தலில் வெற்றிபெற்றிருந்தால் இவ்வாறான செயற்பாடுகள் அவசியமற்றவை. ஆனால், இதுபோன்ற நடவடிக்கைகளே தேர்தலில் பொய் யான வெற்றிபெற்றுள்ளதை உறுதிப்படுத்துகின்றன.எம்மீதான அடக்குமுறைகள் தொடர்பில் பொலிஸாரும் பக்கச்சார்பாகவே நடந்து கொள்கின்றனர். முறைப்பாடுகளை ஏற்கவும் மறுக்கின்றனர். இதனால் இந் நாட்டில் சட்டம், ஒழுங்கு இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது. ஜனாதிபதியைக் கொலை செய்வதற்கு சூழ்ச்சித்திட்டம் தீட்டியதாக என்மீது குற்றம் சுமத்தப்பட்டது. குறித்த தினத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எமது அணியில் இருக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனேயே நான் ஹோட்டலில் தங்கியிருந்தேன்.அந்தச் சந்தர்ப்பத்தில் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அங்கிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டதாகவும் அரசாங்கத்தினால் அரச ஊடகங்களில் வெளிப் படுத்தப்பட்ட தகவல்கள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டவையாகும். அவற்றில் எந்தவிதமான உண்மைகளும் கிடையாது. இதனை பின்னணியாகக் கொண்டு நான் வெளிநாடு செல்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.இதே நிலை தான் எனது மனைவிக்கும் ஏற்பட்டுள்ளது. எனது மருமகன் மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். மொத்தத்தில் எனது குடும்பம் பழிவாங்கலுக்கு உட்பட்டுள்ளது. இன்றைய சூழ்நிலையில் நானே மக்களின் ஜனாதிபதியாக இருக்கின்றேன். கௌரவமும் நேர்மையும் இல்லாத ஒருவராக நான் இருக்கவில்லை என்பதையும் இங்கு கூறிவைக்க விரும்புகின்றேன். நான் எங்குசென்றாலும் என்னைப் பின் தொடர்கின்றனர். எனது சுதந்திரம் முற்றாகப் பறிக்கப்பட்டுள்ளதுதேர்தலுக்கு முன்பதாக அரச தொலைக் காட்சிகளில் இராணுவ ஆட்சியாளர்களை சித்திரிக்கும் திரைப்படங்கள் ஒளிபரப்பட்டன. அந்த விடயங்கள் இன்று நிஜமாக நடைமுறைப்படுத்தப் படுகின்றன.வடக்கு கிழக்கு உள்ளிட்ட பிரதேசங்களில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் எனக்கு வாக்களித்தனர். அதேபோல், சிங்களவர்களும் வாக்களித்தனர். இருப்பி னும், தமிழ்பேசும் மக்கள் எனக்கு வாக்களித்தார்கள் என்ற காரணத்தால் நான் பிரிவினைக்குத் துணைபோனதாக என்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சிங்கள மக்களிடையே ஒருவித இனவாதப்போக்கை அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டுள்ளது.வடக்கு கிழக்குப் பிரதேசங்களைப் பிரித்தெடுக்கும் நோக்கில் செயற்பட்ட பிரபாகரனே கடந்த காலங்களில் பிரிவினைவாதத்தைத் தோற்றுவித்திருந்தார். அந்தப் பிரிவினைவாதத்தை நாம் முறியடித்தோம். இருந்தாலும், இன்று தெற்கிலே பிரிவினையைத் தோற்றுவிப்பதற்கு துரோகத்தனமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றை முற்றாக நாம் நிராகரிக்கிறோம்.நடந்து முடிந்த தேர்தலில் நாம் 5.5 மில்லியன் வாக்குகளைப் பெற்றிருக்கின்றோம். அதுமட்டுமல்லாது, தமிழ் பேசும் மக்களிடமிருந்து ஒரு மில்லியன் வாக்குகளையும் பெற்றிருக்கின்றோம். அவ்வாறு பெற்ற வாக்குகள்தான் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதிலும் மக்கள் இதனைத் தான் இன்று பேசிக்கொண்டிருக்கின்றனர்.எனவே, எமது மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பற்கு நாம் சகலவிதத்திலும் நட வடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இதன் முதல் கட்டமாக, தேர்தல் முடிவுகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்டும் நடவடிக்கையை கொழும்பில் ஆரம்பிப்பதற்குத் தீர்மானித்திருக்கின்றோம். இது நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும்.ஜனாதிபதித் தேர்தலில் வாக்குகள் கொள்ளையடிக்கப்பட்டன. எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் அவ்வாறான கொள்ளை இடம்பெறுவதற்கு இடமளிக்க முடியாது. அதற்கான மாற்று நடவடிக்கைகள் அவசியமானதாகும். அத்துடன், அடுத்து வரும் தேர்தல் விருப்புவாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்கான தேர்தலாகும். எனவே, அதில் இவ்வாறான கணினி தில்லுமுல்லுகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவாகும். பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தீர்மானித்திருக்கின்றேன். இது தொடர்பில் என்னோடு இணைந்துள்ள அரசியல் கட்சிகளின் தீர்மானம் மிகவும் முக்கியமானதாகும் என்றார்
0 comments:
Post a Comment