மோசடித் தேர்தலுக்காக ஜனாதிபதிக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும்: மனோ கணேசன்
இலங்கை வரலாற்றிலேயே எப்போதும் இடம்பெற்றிராத வகையில் மிக மோசமான தேர்தலை நடத்திய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு மோசடித் தேர்தலுக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளைப் பகிஷ்கரிப்பதாகக் கூறி எதிர்க்கட்சிகள் நடத்தியா ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.அவர் தொடர்ந்து கூறுகையில், “வாக்குகள் எண்ணப்படும் நிலையங்களுக்கு எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் எவரும் அனுமதிக்கப்படவில்லை. தேர்தல் வாக்களிப்பு முடிவடைந்த பின்னர் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிடப்பட்ட வாக்களிப்பு வீதங்களுக்கு மாறாகவே மறுநாள் கூறப்பட்டன. முதல்நாள் 70 வீதமாக இருந்த வாக்களிப்புகள் மறுநாள் 80 வீதமாக மாறியது எவ்வாறு?தேர்தல் தினத்தன்று காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை சிறுசிறு செயல்களில் ஈடுபட்டிருந்த ஜனாதிபதி அன்றைய தினம் இரவு பாரிய வேலைகளில் ஈடுபட்டு நாட்டு மக்களின் தீர்மானத்தை மாற்றியமைத்துள்ளார்.இது நமக்குக் கிடைத்த வெற்றி. அது பறிக்கப்பட்டமைக்கு நாங்கள் கடுமையான எதிர்ப்பினை தெரிவிக்கிறோம். இதற்கு உரிய பாடத்தை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நாம் கற்பிப்போம்." என்றார்.மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க உரையாற்றுகையில், "நாம் வெவ்வேறு கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள். வெவ்வேறு கொள்கைகளையுடையவர்கள். நாட்டில் அராஜகத்தை ஒழித்து ஜனநாயகத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஒன்று சேர்ந்திருக்கின்றோம்" என்றார். என்றார்.ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் உட்பட அரசியல் பிரமுகர்கள் பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிட்ட புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்
0 comments:
Post a Comment