கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

A.R ரஹ்மானுக்கு சவுதி அரபியாவிலுருந்து……..


சவுதி அரேபியாவுக்கு சென்ற ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஜித்தாவில் உற்சாக வரவேற்பு, ‘புனித பூமியில் பிறந்தநாள் கொண்டாடிய இசைமேதை’ என்றெல்லாம் சில தினங்களுக்கு முன் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. அதுபற்றி தெளிவுபடுத்த விரும்பியதன் விளைவே இந்த கட்டுரை.

ஆஸ்கார் விருது பெற்றபோது எல்லா புகழும் இறைவனுக்கே! என்று மிகத் தெளிவாக அறிவித்து எங்களைப் போன்றவர்களை வியப்பில் ஆழ்த்தினீர்கள்.
இஸ்லாத்தில் இசை என்பது தடுக்கப்பட்டது. ஒரு சாராயக்டையை அல்லது ஒரு விபச்சார விடுதியை நடத்தி அதன் மூலமாக வரும் கோடிக்கணக்கான வருமானத்தை ஒருவன் ஏழை எளியவர்களுக்கு தர்மம் செய்தாலும் அவன் செய்யும் வியாபாரம் ஹலாலாக ஆகிவிடாது.

தடுக்கப்பட்டதை செய்து மக்களை வழிகெடுத்ததற்கான தண்டனையை அவன் அனுபவித்தே ஆகவேண்டும் என்பது இஸ்லாமிய நியதி. உங்களது இசையும் அது போன்றதே! நீங்கள் அமைக்கும் இசையானது வெறும் இசையுடன் மட்டுமின்றி ஆபாசக்காட்சிகளுடன் வெளியிடப்படுகின்றன.
அந்நியர்களுடன் சரச சல்லாபத்தில் ஈடுபடுவதும் அங்க அவயங்களை மாற்றாருக்கு காண்பிப்பதும் இஸ்லாத்தில் மிகப்பெரும் தவறு என்பதை தாங்கள் அறியாமலிருந்தால் அதை தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகின்றேன். ஒரு தீமையை செய்ததற்காக கிடைத்த விருதை நீங்கள் பெற்றபோது ‘எல்லா புகழும் இறைவனுக்கே! என நீங்கள் விளித்தது ‘நன்மையும் தீமையும் இறைவனிடத்தில் இருந்து வருபவை’ என்ற இஸ்லாமிய கோட்பாட்டின் படி மட்டுமே சரியானது. ஆனால் தீமை செய்ததற்கான தண்டனையை மறுமையில் அனுபவித்தே ஆக வேண்டும்.
ஒருவன் பிற மதத்திலிருந்து இஸ்லாத்தை தேர்ந்தெடுத்து வந்தால் அவனது முந்தைய பாவங்கள் அனைத்தையும் இறைவன் மன்னித்து விடுகின்றான் என நமது வழிகாட்டியாகிய நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அவ்வாறு அனைத்து பாவங்களும் மன்னிக்கப்பட்ட நீங்கள் மீண்டும் தர்ஹாக்களுக்கு சென்று இணைவைப்பு எனும் பாவத்தை சம்பாதித்து வருகின்றீர்கள்.

காத்ரீனா கைஃப், ஷில்பா ஷெட்டி போன்றவர்களெல்லாம் தலையில் பூக்கூடை அணிந்தவர்களாக அஜ்மீர் தர்ஹாவுக்கு செல்கிறார்கள் என்றால் அது பிழைப்புக்காக! முஸ்லிம் ரசிகர்களும் படம் பார்க்க வரவேண்டும் என்ற நப்பாசையும் தனது படம் நிறைய நாள் ஓடவேண்டும் என்ற சுயலமும் தான் அதற்கு காரணம். அவர்களை பொறுத்தவரை அது பத்தோடு பதினொன்று. கோவிலுக்கும் செல்வார்கள், சர்ச்சுக்கும் செல்வார்கள், தர்ஹாவுக்கும் செல்வார்கள்.

இறைவனைத் தவிர வேறு எவராலும் நமக்கு எதையும் தந்திட முடியாது என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை. ‘எம்மதமும் சம்மதம்’ என்று சொல்பவன் ஏக இறைவனை வணங்கக் கூடியவனாக இருக்க முடியாது. பல தெய்வ கொள்கைகளை தகர்த்து ஏக தெய்வ கொள்கையை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

அப்படியிருக்க கல், மண், கப்ரு, மகான் என்பனவற்றிற்கு சக்தி எங்கிருந்து வரும். அவைகளால் திரைப்படம் அதிக நாள் ஓடும் என நீங்கள் நம்பினால் நீங்கள் இஸ்லாத்திலிருந்து விலகி விட்டீர்கள் என்றே அர்த்தம். உங்களை ஒரு இஸ்லாமியராக உலகம் பார்ப்பதால் தர்ஹாக்களுக்கு நீங்கள் செல்வதை இஸ்லாமிய வழிபாட்டில் ஒரு பகுதியாக சிலர் எண்ணும் வாய்ப்புகளுண்டு. அது களையப்பட வேண்டும்.

ஆனால் இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், உங்களை ஜித்தாவில் வரவேற்றவர்கள் இசை என்பது ஹராமென்றோ, தர்ஹாக்களிடம் கையேந்துவது மிகக் கொடிய பாவம் என்றோ தங்களுக்கு ஏன் சொல்லவில்லை என்பது தான். உங்களை வரவேற்ற முஸ்லிம் பெயர்தாங்கிகள் அனைவருமே ஒரு பிரபலத்துடன் போஸ் கொடுக்க வேண்டும் என்ற நினைப்புடன் நடந்துள்ளார்கள் என்பது இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

மக்காவில் உம்ரா செய்ய வேண்டுமென்று வந்ததாகவும் அந்த புண்ணிய பூமியில் தங்களது பிறந்தநாளை கொண்டாட வேண்டுமென்றும் விரும்பியதாக தாங்கள் பேட்டியளித்துள்ளீர்கள். அஜ்மீர் தர்ஹா, கடப்பா தர்ஹாவிற்கு சென்று பிரார்த்திப்பது போன்றதல்ல மக்காவுக்கு செல்வது என்பதை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்
.
எண்ணப்படி தான் செயல்கள் அமையும் என்பது புகாரி ஹதீஸ் புத்தகத்தில் வரும் முதலாவது ஹதீஸ். இதுவரை நீங்கள் படிக்காமலிருந்தால் இன்றே அதை புரட்டுங்கள். ஒருவன் தனது நாட்டை, குடும்பத்தை, செல்வத்தை விட்டு அடுத்த நாட்டுக்கு ஹிஜ்ரத் செய்யும் போது அங்கே இருக்கும் அழகான பெண்களைதிருமணம் செய்ய வேண்டும் என எண்ணி இருந்தால் அது நிறைவேறும். ஆனால் இறைவனின் பொருத்தத்தை அடைய முடியாது என்பது அந்த ஹதீஸின் அர்த்தம்.

பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்ற அர்த்தத்தில் நீங்கள் வந்திருந்தால் அது நிறைவேறிவிட்டது, உம்ரா இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்பது சந்தேகமானதே! அதை இறைவன் ஒருவனே அறிவான்.
பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது இஸ்லாத்தில் இல்லை, நாம் போற்றும் நபிகளார் பெருமானார் (ஸல்) அவர்கள் தனது எந்த பிறந்தநாளுக்கும் கேக் வெட்டியதில்லை, இன்று என்னுடைய பிறந்தநாள், எனவே விழா எடுங்கள் என்றோ சொன்னதில்லை, அவர்களது காலத்தில் பாசத்திற்குரிய குழந்தைளுக்கும் அன்பிற்குரிய மனைவிகளுக்கும் நேசத்திற்குரிய தோழர்களுக்கும் பிறந்தநாள் கொண்டாடியதில்லை, அதை அனுமதிக்கவுமில்லை.

ஆனால் அறியாமையால் நீங்கள் கேக் வெட்ட முனைந்த போது தங்களுடன் இருந்த எவருமே தடுக்காதது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும். அந்த இடத்தில் அது தவறு என்பதை தங்களுக்கு அவர்கள் உணர்த்தி இருந்தால் தாங்களும் அதை உணர்ந்து அந்த தவறை செய்யாமல் இருந்திருப்பீர்கள். அதன் மூலமாக தமிழ் முஸ்லிம்களிடத்தில் அது பற்றிய ஒரு விழிப்புணர்வும் ஏற்பட்டிருக்கும். தாங்கள் செய்த அச்செயல் இன்று ஒரு முன்னுதாரணமாக மாறிவிடுமோ என்ற கவலையே என்னுள் எழுகின்றது.

பிறந்தநாளுக்கு கேக் வெட்டுவது இஸ்லாமிய கலாச்சாரமல்ல! அதுவும் சவுதி அரேபியாவில் அதை அனுமதித்த ஜித்தா நண்பர்கள் மிகப்பெறும் தவறிழைத்துவிட்டார்கள். அவர்கள் தங்களை இஸ்லாமியனாக பார்க்கவில்லை. உடன் நின்று போட்டோ எடுக்கும் பிரபலமாகத் தான் பார்த்திருக்கின்றார்கள். இல்லையேல் உம்ரா செய்யும் போது மொட்டை அடிப்பது தான் சிறந்தது என்பதை சொல்லி தந்திருப்பார்கள்.

ஏனெனில் உம்ரா செய்துவிட்டு முடிகளை விரலளவு களைவதை இஸ்லாம் கற்றுத்தரவில்லை. மொட்டையடிப்பதை சிறந்ததாக கூறுகிறது. மொட்டையடித்தவர்களுக்காக நபிகள் பெருமானார் மூன்று முறை பிரார்த்தனை செய்துள்ளார்கள் என்பதை உங்களது வழிகாட்டிகள் உங்களுக்கு சொல்லித்தரவில்லை. அவர்களுக்கும் தெரிந்திருக்குமோ என்பதும் சந்தேகமே!

சரி! தங்களது பிறந்தநாளில் என்ன வித்தியாசத்தை நீங்கள் பார்த்தீர்கள். வயதை அளவிடும் ஒரு நாளே தவிர எந்த சிறப்பும் அதற்கு இல்லை. ஆண்டுக்கொருமுறை தான் பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்பதை எதன் அடிப்படையில் தீர்மானித்தீர்கள். வருடத்திற்கொருமுறை ஏன் அந்த நாளை கொண்டாட வேண்டும். மாதத்திற்கொரு முறை கொண்டாடலாமே? ஒவ்வொரு மாதமும் 6ம் தேதி கொண்டாடலாமே? ஏன்? கிழமையை கணக்கிட்டு வாரத்திற்கொருமுறை கூட கொண்டாடலாமே? நீங்கள் பிறந்தது திங்கள்கிழமை என்றால் இன்று அது வியாழக்கிழமை! பின் எவ்வாறு பிறந்தநாள் கொண்டாட முடியும். எனவே சிந்தியுங்கள்!

நம்மை பொறுத்தவரை வாழ்க்கை என்பது இந்த உலகத்துடன் முடிந்து விடுவதில்லை. மறுமை உலகம் என்ற மாபெரும் பேறு நமக்காக காத்திருக்கின்றது. அதில் நாம் வெற்றியடைய வேண்டுமாயின் அதற்கான தேர்வுக்கூடம் தான் இது. உங்களை புகழ்ந்து கொண்டும் உங்களுடன் போட்டோவுக்கு போஸ் கொடுப்பவர்களும் மறுமையில் உங்களுக்கு துணையாக வரமாட்டார்கள். மறுமை நாளிலே இந்த கூட்டமெல்லாம் உங்களை வரவேற்க வராது, உதவிகள் செய்யாது. நீங்கள் மட்டும் தனித்து விடப்படுவீர்கள். மரணிக்குமுன் நீங்கள் தவறுகளுக்காக இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்டுவிட்டால் அவன் நாடினால் மன்னித்துவிடுவான்.
இறுதியாக, தமிழகத்திலோ அல்லது வடமாநிலங்களிலோ இந்த பிறந்தநாளை நீங்கள் கொண்டாட திட்டமிட்டிருந்தால் திரையுலகமும் ஆட்சியாளர்களும் திரண்டு ஊரே கோலாகலமாக இருந்திருக்கும்.

ஆனால் அதைவிட புனித பூமியான மக்காவிற்கு செல்வதை நீங்கள் சிறந்ததாக கருதியதிலிருந்து அந்த புகழாரத்தை விட மக்காவின் அமைதியை நீங்கள் விரும்பியுள்ளீர்கள் என்பது தெளிவாகின்றது. எனவே தங்களை சுற்றியுள்ள கூட்டமே தங்களை முழுமையாக இஸ்லாத்தில் நுழையவிடாமல் தடுக்கின்றன என்பதை என்னால் உணர முடிகின்றது.
ரசிகர்கள் கூட்டத்தை கண்டு புளகாங்கிதம் அடையாமல் மறுமையை பற்றிய தேடுதலை அதிகப்படுத்துங்கள். அப்போது மிகப்பெரிய மாற்றத்தை காண்பீர்கள். உங்களது தேடுதலில் இறைவனை பற்றிய அறிவை நீங்கள் பெற்றுவிட்டால் கல்லை, கபரை, மனிதனை வணங்க கூடாது என நீங்கள் முடிவெடுத்து விடுவீர்கள். ஆனால் அதை அறிவித்து விட்டால் நீங்கள் தனித்து விடப்படுவீர்கள்.

எதிர்ப்புக்கு உள்ளாக நேரிடும். இசை, பாடல்களின் மூலம் கிடைத்த புகழாரம் மற்றும் வருமானம் நின்று போகும். உங்களின் இசை, ஆடல், பாடல்களை ரசித்து உங்களை சுற்றிலும் இருப்பவர்கள் உங்களை வெறுக்க ஆரம்பித்து விடுவர். நீங்கள் தனித்து விடப்படுவீர்கள். இந்த விளைவுகளுக்கு நீங்கள் தயாராக இருந்தால் இன்றே தங்களது தேடுதலை துவக்குங்கள்.
அன்பிற்குரிய ரஹ்மான்!

நீங்கள் இஸ்லாத்தை ஏற்றதும் அனைத்து பாவங்களும் மன்னிக்கப்பட்டதை போல இணைவைப்பிலிருந்து விலகி தவ்பா செய்தால் மீண்டும் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்களாக மாறுவீர்கள், மாறவேண்டும் என்பதே எனது அவா. ஏனெனில் மறுமை நன்மைக்காகத் தான் நீங்கள் உம்ராவுக்கும் வந்தீர்கள்.
மதீனாவிலிருந்து ஜித்தா செல்ல பிளைட்டுக்கு நேரமாவதைக் கூட உணராமல் பிரார்த்தனையில் லயித்ததாகவும் அதனால் பிளைட்டை தவற விட்டுவிட்டு காரில் ஜித்தா செல்லும் நிலை எற்பட்டதாகவும் செய்தி அறிந்தேன்.

பிரார்த்தனையில் இத்தனை நிகழ்வுகள் நிகழும் போது மறுமையில் கேள்விக்கணக்கு நாளில் நமது நிலை என்னவாக இருக்கும்! அங்கு தனித்து விடப்படுவதை காட்டிலும் இவ்வுலகில் தனித்து விடப்படுவது துன்பம் தரும் விஷயமல்ல. மரணத்திற்கு பின் இருப்பதே நிலையான வாழ்க்கை!!!

குளோபல் இஸ்லாம் பேஸ்புக் பக்கம் -

0 comments:

Post a Comment