கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

புனித பூமிக்கு ‘புனிதம்’ எங்கிருந்து வருகிறது?

உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
தலைவர் , இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி: புனித பூமி, புனிதமானது. ஒரு மதத்தின் கௌரவங்களில் ஒன்றாக அது திகழ்கிறது. அதனைப் பாதுகாப்பதும் அதன் மரபுரிமையை கௌரவிப்பதும் அம்மத்தை சேர்ந்தவர்களது மட்டுமல்ல அனைத்து மக்களதும் கடப்பாடாகும். இந்த விடயத்தில் இஸ்லாத்தை மார்க்கமாகக் கொண்ட எமக்கு புரிந்துணர்வு இருக்கிறது. காரணம் இஸ்லாம் மார்க்கமும் தனக்குரிய புனித பூமிகளை பிரகடனம் செய்திருக்கிறது. அது பிரகடனம் செய்திருக்கும் புனித பூமிகளைப் பாதுகாப்பது உலக முஸ்லிம்களது கடமையாகும்.

அந்தப் பூமிகள் ஒரு நாட்டுக்கு மட்டுமல்ல முழு முஸ்லிம் உலகுக்கும் சொந்தமானவைகளாகும். அந்தப் புனித பூமிகளில் முஸ்லிம்கள் நுழைவதை புனித பூமிகளை நிர்வகிக்கும் நாடுகள் தடுக்க முடியாது. சஊதி அரேபியா அரசு அங்கிருக்கும் முஸ்லிம்களின் இரண்டு புனித பூமிகளைத் தரிசிப்பதற்காக வழங்கும் விசாக்களுக்குப் பணம் அறவிடாதிருப்பதற்குக் காரணம் அதுதான். ‘புனித பூமித் தரிசன விசா’ என்று ஒரு தனியான வீஸா நடைமுறையை இந்த நோக்கில் அமுலில் வைத்திருக்கிறது சஊதி அரசு. அது மட்டுமல்ல, இவ்வாறான இலவச அனுமதியைப் பயன்படுத்தி புனித பூமியில் நுழைவதற்கும் புனித பூமியின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு மாற்றமாக செயல்படுவதற்கும் வாய்ப்புக்களை வழங்கா வண்ணம் முஸ்லிமல்லாதவர்களை புனித பூமியின் எல்லைகளுக்குள் நுழைவதற்கு அவ்வரசுகள் அனுமதிப்பதில்லை. இத்தகைய நடைமுறைகள் இஸ்லாத்தில் இருப்பதனால் மற்றொரு மதத்தின் புனித பூமிகளை மதிப்பதற்கும் அங்குள்ள கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்வதற்குமான புரிந்துணர்வு முஸ்லிம்களிடம் ஏற்கனவே இருக்கிறது. தம்புள்ளை புனித பூமி விவகாரத்தையும் அதன் பெயரால் அங்கு முஸ்லிம்களது வணக்கஸ்தலம் தாக்கப்பட்ட சம்பவத்தையும் இந்தப் பின்னணியில்தான் நாம் நோக்குகிறோம்.

எமது பிரச்சினை, மற்றறொரு மதத்தின் புனித பூமியை விளங்கிக் கொள்ள முடியாதிருப்பதல்ல. மாறாக புனித பூமி என்பதற்குரிய வரைவிலக்கணம் என்ன? .அதனை யார் தீர்மானிப்பது? எப்போது தீர்மானிப்பது? அதனைப் பிரகடனம் செய்வதற்கான உலகம் ஏற்றுக்கொள்ளத்தக்க நடைமுறை எது?
நாம் ஏன் இவ்வினாக்களை எழுப்புகிறோம் எனின், இஸ்லாத்தில் இக்கேள்விகளுக்குத் தெளிவான பதில்கள் இருக்கின்றன. இஸ்லாத்திற்குரிய புனித பூமிகளை எவரும் தாம் நினைத்தவாறு பிரகடனம் செய்ய முடியாது. அந்த அதிகாரம் அல்லாஹ்வுக்கும் அவனது தூதர் முஹம்மத் (ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கும் மட்டுமே உரித்தானதாகும். இஸ்லாத்திற்குரிய புனித பூமிகள் உலகம் முழுவதிலும் மூன்று மட்டுமே இருக்கின்றன. 1. மக்கா 2. மதீனா 3. ஜெரூஸதில் இருக்கும் ‘பைதுல் முக்திஸ்’ பிரதேசம் இவைகளைப் புனித பூமிகளாக இறுதி நபி முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் பிரகடனம் செய்திருகிறார்கள். அவர்களுக்குப் பின் நான்காவது ஒரு இடத்தை புனித பூமியாக பிரகடனம் செய்யும் அதிகாரம் முஸ்லிம் சமூகத்தில் இன்றுவரை எவருக்குமில்லை. எவரும் நான்காவது ஒரு இடத்தை இன்றுவரை புனித பூமியாக பிரகடனம் செய்ததுமில்லை. உலகம் முழுவதும் இஸ்லாத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தாலும் நான்காவது ஒரு இடத்தை எத்தகைய காரணங்களுக்காகவும் ஒருவர் இஸ்லாத்தின் புனித பூமியாகப் பிரகடனம் செய்யவும் முடியாது.

எனவே, ‘புனித பூமி’ என்பது ஒரு மதத்தின் அடிப்படை அம்சங்களுள் ஒன்றாகும். அதனால் அது அம்மதத்தின் மூலாதார நூல்களினூடாகவும் அம்மதத்தின் காரண கர்த்தாக்களினாலும் பிரகடனம் செய்யப்படல் வேண்டும். நினைத்த மாத்திரத்தில் ஒரு தனி நபரோ, ஒரு குழுவோ, ஒரு அரசோ பிரகடனம் செய்யும் ஒன்றாக அது இருக்க முடியாது. ‘புனித பூமி’ விடயத்தில் அவ்வாறனதொரு நடைமுறை பின்பற்றப்படுமானால் மட்டுமே அது குழப்பங்களையும் மதத் தீவிரவாதத்தையும் மதத்தின் பெயரால் மற்றறொரு இனத்தின் மீது பழி தீர்க்கும் வாய்ப்புக்களையும் இல்லாமல் செய்ய உதவும்.

ஒரு மதத்தைப் பின்பற்றுபவர்கள் தாம் விரும்பும் வேளைகளில் தாம் விரும்பும் பிரதேசங்களைப் புனித பூமிகளாகப் பிரகடனம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டால் அதற்கு யார் முற்றுப்புள்ளி வைப்பது?இன்று ஒரு பிரதேசம், நாளை மற்றறொரு பிரதேசம் என புனித பூமிகள் பெருகிக் கொண்டே செல்லும், அவ்வாறு செல்லச் செல்ல அங்கிருக்கிருக்கும் ஏனைய மதத்தவர்களின் வணக்கஸ்தலங்களையும் உடைத்துக் கொண்டே செல்ல வேண்டியிருக்கும். சில போது ஒரு சமூகத்திற்கெதிராக செயற்படும் நோக்கிலும் புனித பூமிப் பிரகடனத்தை ஒரு சிலர் பயன்படுத்த முடியும். அது குறிப்பிட்ட மதத்தின் பெயரால் கட்டவிழ்த்துவிடும் அநீதியாக இருக்குமே தவிர அந்த மதத்தின் கௌரவத்தைப் பாதுகாப்பதாக அது ஒருபோதும் இருக்காது.

மதத்தின் பெயரால் அரங்கேற்றப்படும் அநீதிகள் இஸ்லாத்தின் பெயரால் கட்டவிழ்த்துவிடப்படுவதை தடுக்கும் வகையில்தான் புனித பூமிகளைப் பிரகடனம் செய்யும் அதிகாரத்தை முஸ்லிம்களின் கைக்கு வழங்க மறுத்தார்கள் மாநபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள். அதுமட்டுமல்ல, புனித பூமிக்குரிய நடைமுறைகள், மரபுரிமைகள், பழக்கவழக்கங்கள், அங்கு செய்யக்கூடாதவைகள் என்பவற்றையும் நபியவர்களே வறையறை செய்திருக்கிறார்கள். இவற்றையும் நபிக்குப் பிறகு எந்த ஒருவரும் தான் நினைத்தவாறு மாற்றியமைக்க முடியாது. ஆக, இஸ்லாத்தின் புனித பூமிகளும் அவற்றின் நடைமுறைகளும் 1400 ஆண்டுகளாக எதுவித மாற்றங்களுக்கும் உட்படாமல் அமுலில் இருக்கின்றன. இதனால் புனித பூமி என்ற பெயரால் முஸ்லிம்கள் பிற மதத்தவர்களை துன்புறுத்தும் அல்லது பிற மதத்தவர்களுக்கு அநீயிழைக்கும் வாயிலை நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்றே மூடிவிட்டார்கள்.

நபிகளாரின் பின் இரண்டாவது ஆட்சித் தலைவராக கடமை புரிந்த கலீபா உமர் (ரழியல்லாஹுஅன்ஹு) அவர்கள் ஜெரூஸலத்துக்குச் சென்றவேளை கிறிஸ்தவர்களோடு ஒரு தேவாலயத்தில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது தொழுகை நேரம் வந்துவிட்டது. தேவாலயத்தின் பிதா கலீபா உமரை அங்கேயே தொழும்படி வேண்டிக் கொண்டார். அதனை ஏற்க மறுத்த கலீபா உமர் (ரழியல்லாஹுஅன்ஹு) அவர்கள் வெளியே சென்று மற்றுமொரு இடத்தில் தொழுதார்கள். அதற்கு அவர்கள் கூறிய காரணம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. மதத்தின் பெயரால் ஒரு அநீதி நடப்பதையல்ல. நாளை நடைபெறுவதற்கான வாய்ப்பைக் கூட வழங்க மாட்டேன் என்பதாகவே அவரது பதில் அமைந்திருந்தது. சொன்னார்கள். ‘‘இரண்டாவது கலீபா உமர் (ரழியல்லாஹுஅன்ஹு) அவர்கள் தொழுத இடம் இது என்ற காரணத்தைக் கூறி உங்களது தேவாலயத்தை உடைத்து முஸ்லிம்கள் தங்களது அறியாமையால் பள்ளியொன்றைக் கட்டிவிடுவதற்கான வாய்ப்பை நான் வழங்க விரும்பவில்லை.’’ எனவேதான் நான் வெளியே சென்று தொழுதேன்.’’ இங்கு இரண்டாம் கலீபா உமர் தனது பெயரால் ஓரிடம் புனிதப்படுத்தப்படக்கூடாது என்பதில் எத்துனை கரிசனையுடன் நடந்து கொண்டார்கள் என்பதையே பார்க்கிறோம்.

காரணம் ஓரிடத்தை தனது விருப்பப்படி புனித பூமியாக மாற்றவும் கூடாது, தனது பெயரால் பிற்காலத்தில் அந்த இடம் அபகரிக்கப்படவும் கூடாது என்பதே. புனித பூமி என்பது, அல்லாஹ்வினாலும் அவனது தூதராலும் பிரகடனம் செய்யப்பட்டதால் பிற சமூகங்களுக்கு ஏற்பட்ட நன்மைதான் அது. இதே போன்று புத்த மதத்தில் புத்தர் பெருமானால் பிரகடனம் செய்யப்பட்ட புனித பிரதேசங்கள் இருக்கலாம். அப்பிரதேசங்களின் நடைமுறைகளும் அவரால் அறிமுகம் செய்யப்பட்டிருக்கலாம். அவ்வாறிருந்தால் அவற்றின் மரபுரிமைகளை மதிப்பது பௌத்தர்கள் மீது மட்டுமல்ல அது எம்மீதுமுள்ள கடமையாகும். இவ்வகையில், அவ்வாறான பிரதேசங்கள் புத்தர் பெருமானால் பிரகடனம் செய்யப்பட்டு வரையறுக்கப்பட்டிருந்தால் அங்கிருந்து எமது வணக்கஸ்தலங்ளை அகற்றுவதோ வேறு இடங்களில் அவற்றை அமைத்துக் கொள்வதோ எமக்குப் பிரச்சினையல்ல. எமது பிரச்சினை ‘புனித பூமிகளை’ பிரகடனம் செய்பவர்கள் யார்? அவர்கள் எந்த எல்லை வரை புனித பூமிப் பிரகடனங்களை விஸ்தரித்துச் செல்வர்? புனித பூமிப் பிரகடனம் எங்கு போய் முடியும்? இலங்கை புத்தர் பெருமானின் தேசம்? என்ற வாசகங்கள் இன்று நாடெங்கும் விளம்பரம் செய்யப்படுகின்றன. நாளை இலங்கை முழுவதும் புனித பூமி என்று பிரகடனம் செய்யப்படுமா? அவ்வாறு பிரகடனம் செய்யப்பட்டால் அது புத்தர் பெருமானுக்கும் பௌத்த மதத்துக்கும் வழங்கப்படும் கௌரவம் என பௌத்த மக்கள் நினைக்கிறார்களா?

‘புனித பூமி’ எது? புனித பூமிக்குப் ‘புனிதம்’ எப்படி வருகிறது? இதனைத்தான் பௌத்த மக்களிடம் நாம் கேட்க விளைகிறோம். அவர்களது புனிதங்களின் மரபுரிமைகளை நாங்கள் மறுப்பவர்களல்லர். ஏனெனில், எமக்கும் புனிதத்தலங்களும் அவற்றிற்கான நடைமுறைகளும் இருக்கின்றன. 150 கோடிக்கும் அதிகமாக வாழும் 56க்கும் மேற்பட்ட நாடுகளைக் கொண்ட உலகின் மிகப் பெரிய சமூகங்களில் ஒன்றுதான் முஸ்லிம் சமூகம். அத்தகைய ஒரு சமூகத்திற்கு உலகம் முழுவதும் மூன்று புனித பூமிகள் மாத்திரமே இருக்கின்றன. கடந்த 1400 ஆண்டுகளுக்கு மேலாக நான்காவது ஒரு புனித பூமியை முஸ்லிம்கள் பிரகடனம் செய்யவில்லை என்பது… இங்கு ஈண்டு குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல சுமார் 10 நூற்றாண்டுகள் இஸ்லாம் உலகின் வல்லரசாக இருந்துள்ளது. இக்காலப்பகுதியில் உலகமெல்லாம் முஸ்லிம்கள் புனித பூமிகளைப் பிரகடனம் செய்திருந்தால் நிலைமை எப்படியிருந்திருக்கும்? என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். படிப்பினை பெறுவோருக்கு இது ஒரு சிறந்த முன்மாதிரியாகும்.

உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
அமீர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி

0 comments:

Post a Comment