யாழ்ப்பாண சிறுவன் காத்தான்குடி சென்றமை - வெளிச்சத்திற்கு வரும் உண்மைகள்..!
அண்மையில் யாழ்ப்பாணத்திலிருந்து சிறுவன் ஒருவன் முஸ்லிம்களால் கடத்தப்பட்டு காத்தான்குடிக்கு கொண்டு சென்று கொடுமைப்படுத்தப்பட்டதாக பல இணைய தளங்களிலும், பத்திரிகைகளிலும் வெளியான செய்தி முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பிலான உண்மை நிலையை அறிந்து, அதை மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக சம்மந்தப்பட்டவர்களை சஜில் ஊடகப் பிரிவு சந்தித்தது.
இச்சம்பவத்துடன் நேரடியாக தொடர்புபட்ட காத்தான்குடியைச் சேர்ந்த நஜீம் என்பவரை சஜில் ஊடக குழு அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்தபோது, அவர் அளித்த தகவல்களை இங்கு தருகின்றோம்.
'எனது பெயர் முஹம்மது முஸ்தபா முஹம்மது நஜீம். நான் சாரதியாகத் தொழில் புரிகிறேன். எனது தொழில் நிமித்தம் மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் போன்ற இடங்களுக்கு அடிக்கடி சென்று வருகிறேன்.சுமார் ஒரு வருடத்திற்கு முன்னால், மரவவெள்ளிக் கிழங்கு சீவல்களை விற்பனை செய்யும் ஒரு வியாபாரியின் பொருட்களை எனது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தேன்.
இங்கே, குறிப்பிட்ட வியாபாரியின் பொருட்களை இறக்கிக் கொடுத்துவிட்டு எனக்கு அறிமுகமான ஒருவரின் குளிர்பானக் கடை(Cool Spot)க்கு சுமார் காலை பதினோரு மணியளவில் குளிர்பானம் அருந்துவதற்காகச் சென்றேன். குறித்த அந்தக் குளிர்பானக் கடையானது, யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்திற்கு மிகவும் அருகிலேயே அமைந்துள்ளது. நான் அக்கடைக்கு சென்றிருந்த நேரம், அக்கடையில் சுமார் பன்னிரண்டு வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் அழுக்கடைந்த பாடசாலை சீருடையில், மிகவும் கவலை தோய்ந்த முகத்துடன் காணப்பட்டான். அந்தக் கடையினை நடாத்தி வருபவர் என்னிடம் 'இந்தச் சிறுவன் நான்கைந்து நாட்களாக இங்கேதான் இருக்கிறான், வீதியோரங்களில் உறங்குகிறான், உங்களால் முடிந்தால் இச்சிறுவனுக்கு ஏதாவது உதவியை செய்யுங்கள்' என்று கூறினார்.
நான் இதனைக் கேட்டதும், அந்த சிறுவனிடம் அவனைப் பற்றி விசாரித்தேன். அச்சிறுவன், 'எனது பெயர் ரஜிராம். நான் ஒரு அநாதை. எனது தகப்பன் கடந்த இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டார். எனது தாய் மரணித்து நான்கு நாட்கள் ஆகின்றன. எனவே, எனக்கு உறவினர் யாரும் இல்லை' எனவும் கூறினான். உடனே, நான் ரஜிராம் மீது வெகுவாக அனுதாபம் கொண்டேன். அவனை யாழ்ப்பாணத்தில் நான் தங்குகின்ற எனது நண்பர் ஒருவரின் அறைக்கு அழைத்துச் சென்று குளிக்க வைத்து பகலுணவும் வாங்கிக் கொடுத்தேன். அதன் பிறகு, அவன் அணிந்திருந்த ஆடைகள் மிகவும் அழுக்காகக் காணப்பட்டமையினால், புதிதாக சில ஆடைகளும் செருப்பும் வாங்கிக் கொண்டு மீண்டும் குறிப்பிட்ட குளிர்பானக் கடைக்கு அச்சிறுவனைக் கூட்டி வந்தேன். அப்போது ரஜிராம், நான் அவன்மீது காட்டிய அரவணைப்பைக் கண்டு தனக்கிருந்த ஒரு குடும்பத்தின் தேவையினை உணர்ந்தவனாக 'என்னை உங்களோடு அழைத்துச் செல்லுங்கள்' என என்னிடம் மன்றாடினான்.
நானும் ரஜிராமுடைய நிலைமையினை உணர்ந்து அவன் மீது அனுதாபம் கொண்டு, பிற்பகல் சுமார் ஆறு மணியளவில் அவனை என்னோடு எனது வாகனத்தில் காத்தான்குடிக்கு அழைத்து வந்தேன்.
என்னுடைய வீட்டில் நான், எனது மனைவி, இரண்டு மகள்மார் (13வயது, 07வயது) மற்றும் ஒன்றரை வயதுடைய ஒரு கைக் குழந்தை. ஆக மொத்தம் ஐந்து பேரைக் கொண்ட ஒரு குடும்பம். எனது வீட்டில், ரஜிராம் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக அமையப் பெற்றான்.
ரஜிராமிற்கு புதிய இடம், புதிய வாழ்க்கை, புதிய நண்பர்கள் என சுமார் ஒன்றரை மாதங்கள் கழிந்தன. இடையிடையே நான் ரஜிராமுடைய புதிய மனநிலையினை விசாரித்தறிந்து கொண்டேன். தனக்கு, புதிய சூழல் நன்கு பிடித்திருப்பதை தனது சந்தோஷத்தின் மூலம் ரஜிராம் எனது குடும்பத்திற்கு வெளிப்படுத்தினான். முஸ்லிம் சிறுவர்களின் நட்பு, அவர்களின் பழக்க வழக்கங்கள், குடும்ப அமைப்பு, உணவு முறை, வழிபாட்டு முறைகள் என்பவற்றால் ரஜிராம் வெகுவாகக் கவரப் பட்டான். எனது குடும்பத்தில் தானும் ஒரு முஸ்லிமாக வாழவேண்டுமென்று விரும்பி, அதை தன் வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்தினான்.
ரஜிராமுடைய விருப்பத்தைக் கண்டு மகிழ்ந்த நான், ரஜிராம் தனது வீட்டிற்கு அழைத்து வரப்பட்டு சுமார் ஒன்றரை மாதங்கள் கழிந்த பின்னர் முஸ்லிம்களுக்குரிய மார்க்கக் கடமைகளில் ஒன்றான 'சுன்னத்' (ஹத்னா) கடமையினை நிறைவேற்றினேன். சுன்னத் செய்யப்பட்டால், இரண்டு நாட்களுக்கு கட்டிலில் ஓய்வு தேவைப்படும். அந்த நாட்களில் கூட, ரஜிராமை எனது சொந்தப் பிள்ளையினைப் போன்றே நான் பராமரித்தேன். அதன் பிறகு ரஜிராமிற்கு 'அன்வர் ஹசன்' என பெயரை மாற்றியமைத்தேன்.
அன்வர் ஹசன் என்னோடு அருகிலிருக்கும் பள்ளிவாயிலுக்குச் சென்று ஐவேளை தொழுகைகளிலும் அனைவருடனும் கூட்டாகக் கலந்துகொண்டான்.
மூன்று மாதங்கள் கழிந்ததன் பின்னர், நான் ரஜிராமை காத்தான்குடி மட்/அந்நாசர் வித்தியாலயத்தில் கல்வி கற்பதற்காகச் சேர்த்தேன். ரஜிராமிடம் பிறப்பத்தாட்சிப் பத்திரம் மற்றும் ஏற்கனவே கல்வி பயின்ற பாடசாலையின் விடுகைப் பத்திரம் போன்ற ஆவணங்கள் எதுவும் இல்லாததன் காரணத்தால், மட்/அந்நாசர் வித்தியாலயத்தில் பதிவு நடவடிக்கைகள் எதுவும் இல்லாமல் கல்வி கற்று வந்தான்.
இஸ்லாமிய வேத நூலான புனித குர்ஆன் மற்றும் மார்க்க ஒழுக்கவிழுமியங்களை, நன்னடத்தைகளை போதிக்கின்ற இஸ்லாமிய மதரசாவிலும் அவனை சேர்த்தேன்.காலையில் பாடசாலைக்கும் பிற்பகல் குர்ஆன் கல்விக்கும் என மிகவும் ஆர்வத்துடன் அன்வர் ஹசன் சென்று வந்தான்.
அவ்வேளையில் அன்வர் ஹசன் கல்வி கற்று வந்த மட்/அந்நாசர் வித்தியாலயத்தில் மாணவர் முன்னேற்ற அறிக்கை தயாரிப்பதற்கும், வகுப்பேற்றுவதற்கும் மாணவர்களின் பிறப்பத்தாட்சிப் பத்திரம் தேவை என என்னிடம் ஆசிரியர்கள் வலியுறுத்தினார்கள்.
பல வேலைப் பழுக்களுக்கும் மத்தியில் இருந்த எனக்கு, அன்வர் ஹசனை மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு கூட்டிச் சென்று பிறப்பத்தாட்சிப் பத்திரத்தை எடுத்து வருவதற்கு சற்று கால தாமதமாகியது.
அதன் பிறகு பிறப்பத்தாட்சிப் பத்திரத்தை எடுத்து வருவதற்காக கடந்த வாரம் நான் எனது நண்பர் ஒருவரின் துணையோடு அன்வர் ஹசனை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைத்தேன். அன்வர் ஹசன் யாழ்ப்பாணத்தில் எனது நண்பரினது துணிக்கடையில் இருக்கும்போது, அங்கே வந்த அன்வர் ஹசனின் உறவினர் ஒருவர் பொலிசாருக்கு கொடுத்த தகவல் மூலம், அவன் பொலிசாரினால் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டான்.' இவ்வாறு ரஜிராம் தொடர்பான விடயங்களை நஜீம் எம்மிடம் தெளிவாக எடுத்துக் கூறினார்.
இது இவ்வாறிருக்க ஒரு சில தமிழ் இணையத்தள ஊடகங்கள் உண்மை நிலை என்னவென்பதில் சற்றேனும் கவனம் செலுத்தாமல், நாட்டில் நிலவுகின்ற இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை நலினப்படுத்தும் போக்கில் சில தகவல்களை திரிபுபடுத்தி வெளியிட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கப் படவேண்டிய ஒரு விடயமாகும்.
ஊடகங்களின் மெத்தனம்.
மேற்குறித்த விடயம் தொடர்பில் இணையத்தள ஊடகங்களும், அச்சூடகங்களும் பலவாறான திரிபுபடுத்தப்பட்ட தவறான தகவல்களை செய்திகளாகப் பிரசுரித்துள்ளன.
முப்பது வருட கொடிய யுத்தத்தின் பிடிக்குள் இருந்து விடுபட்டு, இப்போது நாடெங்கிலும் சுதந்திரக் காற்றை சுவாசிக்கின்ற இச்சூழலில், ஊடகங்கள் இவ்வாறான மேலெழுந்தவாரியான ஊகங்களை தங்களின் இணையத் தளங்களிலும் செய்தித் தாள்களிலும் வெளியிடுவதானது, நாட்டின் ஜனநாயக மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லுறவைக் கட்டி எழுப்புதல் போன்ற செயற்றிட்டங்களை வீழ்ச்சிப் பாதைக்கே இட்டுச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை.
ஒரு ஜனநாயக நாட்டின் சீரான கட்டமைப்பிற்கும் அதன் சீர்குலைவிற்கும் ஊடகங்களின் பங்கு மிகவும் இன்றியமையாததாகும். ஊடகங்கள் தங்களின் நடுநிலைத் தன்மையினை மறந்து, நடந்த சம்பவத்தின் உண்மை நிலை என்னவென்பதை சரிவர அறிந்துகொள்ளாமல் வெளியிடுகின்ற இவ்வாறான தகவல்களே, இனங்களுக்கிடையில் முறுகல் ஏற்படுவதற்கு முக்கிய காரணியாக அமைகின்றது.
மேற்குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட செய்திகளில் பிரபல இணையத்தள ஊடகங்கள் வெளியிட்ட உண்மைக்கு புறம்பான செய்திகளின் உண்மைத்தன்மையினை இங்கு தருகிறோம்.
யாழில் 12 வயது சிறுவன் முஸ்லிம்களால் கடத்தல்..
பொதுவாகக் கடத்தல் என்பது ஒருவரின் விருப்பத்திற்கு மாறாக அவரை வேறொரு இடத்திற்குக் கொண்டு செல்வதையே குறிக்கும். இதுவே கடத்தல் என்ற சொல்லுக்குரிய சுருக்கமான வரைவிலக்கணமாகும். ஆனால், நஜீம் செய்ததோ கடத்தல் அல்ல. மாறாக, ஒரு சிறுவனின் விருப்பத்திற்கும், வேண்டுதலுக்கும் இணங்கவே தன்னுடைய வீட்டிற்கு அவன் அழைத்துச் செல்லப்பட்டான். இதில் அச்சிறுவனுக்கு தேவையாக இருந்த ஒரு குடும்பத்தின் தேவைப்பாட்டை அவன் மீது கொண்ட ஒரு அனுதாபத்தின் காரணமாக நஜீம் நிறைவேற்றினார்.
யாழ் நகருக்கு தொழில் நிமித்தம் அடிக்கடி சென்றுவரும் ஒருவர், அந்நகரிலேயே, பொது இடத்தில் வைத்து, பட்டப் பகலில் தன்னிடம் எந்தவொரு பக்கபலமும் இல்லாமல், தனியே ஒரு பன்னிரண்டு வயது சிறுவனைக் கடத்துவதென்பது முடியாத ஒரு காரியமாகும். அத்தோடு, சிறுவன் காலையில் நஜீமை சந்தித்தது முதல், மாலை ஆறு மணி வரைக்கும் அதே இடத்திலேயே நஜீமோடுதான் இருந்திருக்கிறான் என்பதற்கு, குளிர்பானக் கடையினை நடாத்தி வருபவர் சாட்சியாக இருக்கிறார். எனவே, ஒரு சிறுவனைக் கடத்திவிட்டு பின் அதே சிறுவனோடு அதே நகரில் சுமார் எழு மணித்தியாலங்கள் வரையில் தரித்திருப்பதென்பது அறிவு பூர்வமற்ற ஒரு விடயமாகும்;.
பல ஆசை வார்த்தைகள் கூறி சிறுவன் அழைத்துச் செல்லப்பட்டான். ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் செல்வதற்குரிய வயதெல்லைக்குள் சிறுவன் இல்லை. பன்னிரண்டு வயதுள்ள ஒரு சிறுவன், மாற்றுமதத்தைச் சேர்ந்த ஒருவரின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி அவரோடு காத்தான்குடி வரைக்கும் சென்று, சுமார் ஒருவருடத்தின் பின்னர், தான் கடத்தப்பட்ட அதே இடத்தில் மீட்கப்பட்டான் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விடயம்.
வலுக்கட்டாயமாகவோ அல்லது ஆசை வார்த்தைகளின் மூலமோ ஒரு சிறுவனை கடத்திச் செல்கின்ற ஒரு நபர், மறுபடியும் அவனை அதே நகரத்திலுள்ள ஒரு துணிக்கடையில் தொழில் புரிவதற்காக அழைத்து வருவதென்பது, ஒரு சாதாரண அறிவு உள்ள எவரும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விடயமாகும். ஆனால், இது விடயத்தில் போதிய ஆய்வை மேற்கொள்ளாத ஊடகங்களின் மெத்தனப் போக்கு கண்டிக்கப் படவேண்டியது.
தமிழ் சிறுவனை கடத்தி முஸ்லீமாக மாற்றி கொடுமைப்படுத்திய முஸ்லீம்கள்! அதிர்ச்சியில் தமிழ் மக்கள்... முஸ்லிம்களின் மதமான இஸ்லாத்தைப் பொறுத்தவரையில், எந்தவொரு மதத்தினை சேர்ந்த ஒருவரையும் கட்டாயமாத மதமாற்றம் செய்ய அதில் அனுமதி இல்லை. அவ்வாறு செய்யவும் இயலாது. மத நம்பிக்கைகள் என்பது அந்தந்த மதங்கள் மேலுள்ள சுய விருப்பங்களினால் ஏற்படுவதே. மாறாக, எந்தவொரு மதக் கோட்பாட்டையும் யாராலும் யாருக்கும் திணிக்க முடியாது.
நஜீமுக்கும் அவ்வாறான ஒரு நிர்ப்பந்தம் கிடையாது. நஜீமுக்கு முஸ்லிம் சிறுவன் ஒருவன் தேவைஎன்றால், கிழக்கு மாகாணத்திலேயே நஜீம் வசிக்கின்ற ஊரான காத்தான்குடியில்தான் முஸ்லிம் அநாதை சிறுவர்களை பராமாரிக்கின்ற 'அனாதைகள் இல்லம்' உள்ளது. அங்கே சென்று அவர்களின் நிபந்தனையின் அடிப்படையில் ஒரு சிறுவனைப் பெற்றுக்கொள்வதில் நஜீமுக்கு எதுவித சிரமமும் இல்லை.
யாழ்குடா நாட்டில் இன்றைய சூழ்நிலையினைப் பொறுத்தவரையில் கொலை, கற்பழிப்பு, போதை வஸ்த்துப் பாவனை, வழிப்பறி, விபச்சாரம், ஆட்கடத்தல் என்பன நாளுக்கு நாள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றில் அதிகமானவைகள் முஸ்லிம் அல்லாதவர்களாலேயே நிகழ்கின்றன. அவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் எவரையும் அவர்கள் சார்ந்துள்ள மதத்தின் பெயரை பயன்படுத்தி எந்தவொரு ஊடகமும் செய்திகளை வெளியிடுவதில்லை.
ஆனால், முஸ்லிம்களால் மேற்கொள்ளப்படுகின்ற சில விடயங்கள் தவறாக நோக்கப்பட்டு அதனை அவர்கள் சார்ந்துள்ள மதத்தினையும் வசிக்கின்ற பிரதேசத்தினையும் குறிப்பிட்டு செய்திகளை பெரிதுபடுத்தி வெளியிடுவதானது, ஒரு சகோதர இனத்தின் மீதான அப்பட்டமான காழ்ப்புணர்வின் வெளிப்பாட்டினையே பறைசாற்றுகிறது.
கொடுமைப்படுத்திய முஸ்லீம்கள்!
இங்கே ஊடகங்கள் சிறுவனை கொடுமைப் படுத்தியதாகக் கூற முற்படுவது, இஸ்லாமிய மார்க்கக் கடமைகளில் ஒன்றான, விருத்த சேதனத் (சுன்னத்) தையாகும். விருத்த சேதனம் எனப்படுவது, இன்று முஸ்லிம்களால் மேற்கொள்ளப்படும் ஒரு காரியமாக இருந்தாலும், ஆரம்பகால அரேபிய மக்களிடம் இருந்து வந்த ஒரு பாரம்பரிய நடைமுறையாகும். ஏன் இயேசு கிறிஸ்துவுக்கே விருத்த சேதனம் செய்யப்பட்டிருந்ததாக பைபிள் கூறுகிறது. இன்னும் பைபிளில் வலியுறுத்தப்பட்ட ஒன்றாகவும் இவ்விருத்த சேதனம் காணப்படுகின்றது. இஸ்லாமிய மார்க்கமும் இதனை வலியுறுத்துகிறது.
நமது நாட்டில் முந்தைய காலங்களில் முஸ்லிம்கள் தங்களின் பிள்ளைகளுக்கு ஆறு வயதை அடைந்ததன் பின்னரே விருத்த சேதனம் செய்வார்கள். ஆனால், இப்போது குழந்தைகள் பிறந்து வெறும் பத்து அல்லது இருபது நாட்கள் மாத்திரம் கடந்திருக்கும் போதே, இவ் விருத்த சேதனம் செய்யப்படுகிறது. அத்தோடு முன்னர், விருத்த சேதனம் செய்விப்பதற்கென்று அதில் தேர்ச்சிபெற்ற முஸ்லிம்கள் இருந்தார்கள். அனால், இப்போது இலங்கையில் வைத்தியர்களினாலேயே, அது நவீன முறைகளைக் கொண்டு மகவும் இலகுவான முறையில் மேற்கொள்ளப் படுவதால், இஸ்லாம் அல்லாத மக்கள் கூட, தூய்மை கருதி பெருமளவில் விருத்த சேதனம் செய்கிறார்கள்.
இன்றைய நாட்களில் ஒரு குழந்தைக்கோ, ஒரு சிறுவனுக்கோ விருத்த சேதனம் செய்வதற்கு சுமார் ஐயாயிரம் ரூபா வரையில் செலவாகின்றது. ஒரு சிறுவனை யாழ்ப்பாணத்திலிருந்து கடத்திவந்து காத்தான்குடியில் வைத்து ஐயாயிரம் ரூபா செலவழித்து கொடுமைப்படுத்த வேண்டிய எந்தவொரு நிர்ப்பந்தமும் நஜீமுக்கு கிடையாது. எனவே, அவர் அச்சிறுவனை தனது குடும்பத்திலுள்ள ஒரு குழந்தையாக நினைத்ததன் விளைவாகவே இதனை மேற்கொண்டார்.
எனவே, அறிவியல் ரீதியாக மிகச் சிறந்த நடைமுறை என அனுமதிக்கப்பட்ட ஒரு மத அனுஷ்டானத்தை சிறுவர்களைக் கொடுமைப்படுத்தல் என வர்ணிப்பதானது சகோதர மதமொன்றின் மேலுள்ள காழ்ப்புணர்வின் வெளிப்பாடாகவே நோக்கப்படுகின்றது.
அதிர்ச்சியில் தமிழ் மக்கள்...
தம் இனத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் அல்லது ஒரு யுவதி மாற்று மதத்தவர்களால் கடத்தப்பட்ட செய்தியை அறிந்ததும், அம்மக்கள் அதிர்ச்சியடைவே தொன்றும் ஆச்சரியமான விடயமல்ல.நாட்டில் தமிழ் முஸ்லிம் உறவுகள் மீளக்கட்டமைக்கப் பட்டுக்கொண்டிருக்கின்ற இவ்வேளையில், முஸ்லிம்களால் இக்கடத்தல் மேற்கொள்ளப் பட்டுள்ளது என தங்களை பிரபல்யப்படுத்திக் கொள்வதற்காக, முந்தியடித்துக் கொண்டு ஊடகங்கள் வெளியிட்ட செய்தியே மக்களை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
இவ்வாறான மெருகூட்டப்பட தகவல்கள் எதிர்காலத்தில் தமிழ், முஸ்லிம் உறவுகள் கேள்விக்குறியாவது குறித்து, இவ்வூடகங்கள் ஏனோ சிந்திக்க மறந்துவிட்டன.
சிறுவனுக்கு அன்வர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
குறித்த சிறுவன் கடத்தப்பட்டு கொடுமைப் படுத்தப்பட்டான், என்பது ஊடகங்களின் வாதம். கடத்தப்பட்டு கொடுமைப் படுத்துவதற்கு, பெயர் மாற்றம் அவசியம் இல்லை. ஆனால், நஜீமின் குடும்பத்தில் ஒரு அங்கத்தவனாக மாறுவதற்கு, அவனுக்கு முஸ்லிம் பெயர் ஒன்று அவசியமாக இருந்தது. முஸ்லிம்கள் செறிந்து வாழக்கூடிய ஒரு பிரதேசமான காத்தான்குடியில், ரஜிராம் என்ற பெயரை வைத்துக்கொண்டு அச்சிறுவனால் முஸ்லிம்கள் மத்தியில் ஒன்றரக் கலந்து வாழ முடியாது. எனவே, அவன் அன்வர் ஹசன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டான். இதில் ஊடகங்கள் ஊதிப் பெருப்பித்த அளவிற்கு விடயங்கள் ஏதுமில்லை.
ஒரு வீட்டில் தங்கவைக்கப்பட்டு அந்த வீட்டிலிருந்த சிறுமியர்களை பாடசாலைக்கு அழைத்துச் செல்வது, கடைக்குச் சென்று பொருட்கள் வாங்குவது என வீட்டு வேலைகளை செய்யுமாறு கொடுமைப் படுத்தப்பட்டான்.
இச்செய்தி முதன் முதலாக ஒரு ஊடகத்தில் வெளியானதும், உடனே மற்றைய ஊடகங்களும் அச்செய்தியை பிரதியெடுத்தே சில சில மாற்றங்களை செய்து தங்களின் பங்குக்கு வெளியிட்டன. ஆனால், உண்மை நிலை என்னவென்பதனை ஆராய்வதற்கு அனைத்து ஊடகங்களும் தவறிவிட்டன.
நஜீமுடைய குடும்பத்தைப் பற்றி நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். நஜீமுடைய பிள்ளைகளில் முதல் இரண்டு பிள்ளைகள் மாத்திரமே பாடசாலையில் கல்வி கற்பவர்கள். முதலாவது மகள் தரம் ஏழிலும், இரண்டாவது மகன் தரம் இரண்டிலும் கல்வி கற்கிறார்கள். இவர்கள் செல்கின்ற பாடசாலையான மட்/அஷ்ஷுஹதா வித்தியாலயம் நஜீமின் வீட்டிலிருந்து வெறும் நூறு மீட்டர் தொலைவிலேயே உள்ளது. எனவே, வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒரு பாடசாலைக்கு பதிமூன்று வயது சிறுமியை அழைத்துச் செல்வதற்கு துணை ஒன்றும் தேவையில்லை. அவர்கள் தாமாகவே பாடசாலைக்கு சென்று வருபவர்கள். அத்தோடு இதில் மிக முக்கியமான ஒரு விடயத்தை சகல ஊடகங்களும் தங்களின் மெத்தனப்போக்கால், இருட்டடிப்புச் செய்துவிட்டன.
அதாவது, சிறுவன் ரஜிராம் காத்தான்குடி மட்/அந்நாசர் வித்தியாலயத்தில் தரம் ஏழில் சுமார் ஆறு மாதங்கள் வரையில் கல்வி கற்று வந்தான். பாடசாலை செல்வதற்காக நஜீமினால் ரஜிராமிற்கு சைக்கிள் ஒன்றும் வாங்கிக் கொடுக்கப் பட்டிருந்தது. அங்கே ரஜிராமின் வகுப்பாசிரியராக ஒரு தமிழ் ஆசிரியையே கடமை புரிந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ரஜிராமின் பிறப்பத்தாட்சிப் பத்திரம் இல்லாததன் காரணமாகவேதான் அதை எடுத்துச் செல்வதற்காக மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
ஒரு வருடத்தின் பின் தாயாரினால் சிறுவன் அடையாளம் காணபட்டான்...
குறித்த சிறுவனுக்கு மனிதாபிமான நோக்கத்தில் ஒரு முஸ்லிம் சகோதரரால் அடைக்கலம் கொடுக்கப்பட்டதை, ஆட்கடத்தல் என்று கூக்குரலிடுகின்ற தமிழ் ஊடகங்கள், தமிழர் நல அமைப்புக்கள், அச்சிறுவன் யாழ்ப்பாணத்தின் பிரதான வீதிகளில் நாட்கணக்கில் அனாதரவாக அலைந்து திரிந்த போது, தங்களின் உதவிக்கரத்தினை நீட்டி உதவி செய்ய முன்வராததன் மர்மம்தான் என்ன?
எனவே, இவ்வாறான திரிபுபடுத்தப்பட்ட செய்திகளை வெளியிடுகின்ற ஊடகங்கள் நாட்டில் நிலவுகின்ற இன நல்லுறவிற்கான தங்களின் கடப்பாட்டினை உணர்ந்து எதிர்காலத்தில் இது போன்ற செயற்பாடுகளிலிருந்து முற்றாகத் தவிர்ந்து கொள்ளவேண்டும்.
'எந்தவொரு மனிதன் அநியாயமாக ஒரு உயிரை கொலை செய்கிறானோ அவன் முழு மனித சமுதாயத்தினையும் கொலை செய்தவனைப் போலாவான். எந்தவொரு மனிதன் ஒரு உயிரை வாழ வைத்தானோ அவன் முழு மனித சமூகத்தினையும் வாழ வைத்தவன் போலாவான்.' (அல் குர்ஆன் 05:32)
கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சிறுவன் ரஜிராம், மட்/அந்நாசர் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் போது, தன் கைப்பட எழுதிய அப்பியாசக் கொப்பிகளின் பிரதி.
முஹம்மது நியாஸ்
0 comments:
Post a Comment