கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

முஸ்லிம் சமூகத்தின் மீது பெளத்த பேரினவாதத்தின் மற்றுமொரு அடக்குமுறை !!

நவமணி வாரப்பத்திரிகையில் இன்று வெளியாகியுள்ள செய்தி இங்கு தருகிறோம்: சுமார் நான்கு வருடங்களுக்கு மேலாக குருநாகல் ஆரியசிங்கள வத்தையில் இயங்கும அல் குர்ஆன் மத்ரஸாவில் தொழுகை நடத்தக் கூடாதென விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் பிரதேசத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
குருநாகல், புத்தளம் வீதியில் சுமார் 100 மீட்டர் உள்ளாக அமைந்துள்ள சுமார் 70 முஸ்லிம் குடும்பங்கள் வாழும் ஆரியசிங்கள கிராமத்தில் இருக்கும் மத்ரஸாவில் ஐவேளை தொழுகையை நடத்தி வந்துள்ளனர். கடந்த திங்களன்று குருநாகலிலுள்ள அத்கந்த ரஜமஹா விஹாரையில் நடந்த கூட்டம் ஒன்றுக்கு இந்த ஊர் முஸ்லிம்களை அழைத்து மத்ரஸாவில் தொழுகை நடத்தக் கூடாதென கடிதம் ஒன்றில் கைச்சாத்திட்டு பெற்றுள்ளனர்.
இது தொடர்பாக இக்கூட்டத்தில் கலந்து கொண்ட இக்கிராமத்தைச் சேர்ந்த ஏ.ஜே.எம். நிஸார் தெரிவித்ததாவது,
கடந்த திங்களன்று பத்தினி தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமேயான ஹேமந்த பண்டார ஹேரத் அத்கந்த ரஜமஹா விஹாரையில் நடைபெறும் கூட்டம் ஒன்றுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அப்போது ஊரிலிருந்து நாம் ஐவர் அங்கு சென்றோம். சிறிய ஒரு கலந்துரையாடலுக்கு வருமாறு கேட்டார்கள். நாம் அங்கு போய்ப் பார்த்ததும் வர்த்தகச்சங்க பிரதிநிதிகள். அரசியல் பிரமுகர்கள், மத்தியஸ்த சபை அங்கத்தவர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனப் பலதரப்பட்டோர் இருந்தனர்.
அப்போது எமது மத்ரஸா பற்றிய விபரங்களைக் கேட்டனர். இது நான்கு வருட காலமாக இயங்குவதாகத் தெரிவித்தோம். அப்போது அங்கிருந்த சத்கந்த ரஜமஹா விஹாரை அதிபதி மஹசேன்கம பஞ்ஞானந்த தேரர், புதிதாக வழிபாட்டுத் தலங்கள் அமைக்கக் கூடாதென அரசு விடுத்துள்ளதாகத் தெரிவித்தார். இந்த மத்ரஸாவினை மாணவர்களுக்கு சமயம் போதிக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும் யாரும் தொழக் கூடாது எனத் தெரிவித்தனர்.
நாம் இந்த மத்ரஸா உருவாக்கப்பட்ட முறை பற்றியும் அதில குர்ஆன் போதனை நடப்பதாகவும் தொழுகை நடைபெறுவதாகவும் தெரிவித்தோம்.
ஊர் சகோதரர் ஒருவர் வக்பு செய்யப்பட்ட இரு அறைகைளக் கொண்ட இடத்திலே மத்ரஸா இங்குவதாகவும் முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களத்தில் பதிவு செய்துள்ளதாகவும் கூறினோம்.
அங்கு சென்ற எமக்கு ஒரு கடிதம் ஒன்றை எழுதி இதில் கையொப்பமிடுமாறு கேட்கப்பட்டோம். கையொப்பமிடாவிடின் தம்புள்ளையில் நடந்தது போன்று நடக்கலாம் என்றும் கூறினார்கள். இந்த நிலையிலே நாம் கையொப்பமிட நிர்ப்பந்திக்கப்பட்டோம்.
இது தொடர்பாக சிங்களப் பத்திரிகை ஒன்றில் கடந்த புதனன்று வெளியான செய்தி எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த செய்தி வருமாறு,
குருநாகல் புத்தளம் வீதியில் பௌத்த மக்கள் வாழும் பகுதியில் முஸ்லிம் மத்ரஸா ஒன்றை ஆரம்பிக்க முற்பட்டதனால் ஏற்பட்ட மக்கள் அமைதியின்மையை பௌத்த, முஸ்லிம் சமயப் பிரதிநிதிகள் சேர்ந்து சமாதானமாகத் தீர்த்து வைத்தனர். குருநாகல் ஆரியசிங்களவத்தை என்ற இடத்தில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் மத்ரஸ நிலையத்துக்கே பௌத்த மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்கள்.
இது தொடர்பாக ஆரியசிங்களவத்தை பௌத்த மக்கள் குருநாகல் பிரதேசத்தின் பிரதான விஹாரையின் அத்கந்த ரஜமஹா விஹாரையதிபதி மஹசேன்கம புஞ்ஞானந்த தேரருக்கு முறைப்பாடு செய்தபின் பிரதேச பௌத்த சிவில் முஸ்லிம் சமயப் பிரநிதிகளை அழைத்து கலந்துரையாடப்பட்டது.
வரலாற்றுப் புகழ் வில்பாவ பத்தினி தேவாலய பஸ்நாயக்க நிலமே ஹேமந்த பண்டார ஹேரத் குருநாகல் மத்தியஸ்த சபையின் தலைவர் ஜே.எம்.எம்.பி. ஜயசுந்தர முஸ்லிம் மத நிலைய பொறுப்பாளர் ஏ.ஜே. நஸார் அதன் பிரதிநிதிகளான எம்.எஸ். சித்திக், ஜே.எம். தாஹிர், மில்லவ தர்மவிஹாராதிபதி ஓபாத தம்மஜான அஸ்வத்தும அபிநவராமாதிபதி வெலிவிடிகம சோமாநந்த தேரர் ஆகியோர் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.
இக்கலந்துரையாடலின் பின் இரு தரப்பினரும் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டின்படி முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றை நிர்மாணிப்பதில்லையென்றும் முஸ்லிம் தர்ம பாடசாலை ஒன்றை மட்டும் நடத்துவதற்கு வாக்குறுத் அளிப்பதாகவும் சட்டத்தரணிகள் முன் கையொப்பமிட்டு முஸ்லிம் பிரதிநிதிகள் உறுதியளித்தனர்.
மேற்குறிப்பிட்ட செய்தியின்படி நாம் அவ்வாறு கையொப்பமிட்டபோதும் அதன் பிரதியொன்றும் கூட எமக்கு தரப்படவில்லை என்றும் நான்கு வருட காலமாக மத்ரஸா இயங்கி வந்தபோதும் அயலிலுள்ள சிங்கள சகோதரர்கள் எவரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்றும் வெளியிலிருந்து வந்த சிலரது தூண்டுதலாலே இது நடந்ததாகவும் நிஸார் தெரிவித்தார்.
எமது மத்ரஸாவை இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் வந்து பார்த்துச் சென்ற 15 நிமிடங்களின் பின் எமக்கு மேற்குறிப்பிட்ட கூட்டத்திற்கு வருமாறு கேட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார் .- 

0 comments:

Post a Comment