ரிஸ்வி முப்தி அவர்களின் தம்புள்ளை பள்ளி விவகார விட்டுக்கொடுத்தலுக்கான அழைப்பு வன்முறைக்கு அடிபணிவதாகவும் சமூகத்தை விற்பதாகவும் அமைந்துள்ளது
அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் M.I.M ரிஸ்வி முப்தி அவர்கள் கடந்த 04 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் தம்புள்ள மஸ்ஜிதுல் ஹைரியாத் பள்ளிவாயல் தொடர்பாக ஆற்றிய உரை இலங்கை முஸ்லிம் சமூக மட்டங்களில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. ஒரு கணம் நான் சகோதரர் ரிஸ்வி முப்தி வன்முறை மதகுரு இனாமுளுவ சுமங்கள தேரரின் பள்ளி தகர்ப்பு நோக்கத்தை நிறைவேற்றும் பிரச்சாரத்துக்காக ரியாத் நகர் அனுப்பப்பட்டாரோ என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்.
அவரது பேச்சு ஜித்தாவை மையமாக கொண்டு இயங்கும் அரப் நியூஸ் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட பின்னர் இலங்கையின் ஆங்கில தினசரிகளான டெய்லி மிரர் மற்றும் சிலோன் டுடே என்பவற்றில் மீள்பிரசுரம் செய்யப்பட்டிருந்தது. அவரது உரையில் வன்முறை மூலம் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மீது திணிக்கப்பட்ட தம்புள்ளை பிரச்சினை சகிப்புத்தன்மை மற்றும் விட்டுக்கொடுத்தல் மூலம் சுமுகமாக தீர்க்கப்படல் வேண்டும் என்று கோரியிருந்தார்.
அவரது இக்கோரிக்கையை நியாயப்படுத்தும் முகமாக கண்டி லைன் பள்ளிவாயல் சமூக அபிவிருத்தி திட்டம் ஒன்றுக்காக அழிக்கப்பட்டதாகவும் மற்றும் பம்பலப்பிட்டியில் நாமல் வீதியில் அமைந்திருந்த பள்ளிவாயல் வீதி விஸ்தரிப்பு திட்டம் ஒன்றுக்காக நீண்ட தொலைவுக்கு நகர்த்தப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இது மக்களை பிழையாக வழி நடாத்த எத்தனிக்கும் ஒரு கூற்றாகும். கண்டி வாழ் முஸ்லிம்கள் அவ்வாறான ஒரு சம்பவம் நடைபெறவில்ல என்று கூறுகிறார்கள். அத்துடன் லைன் பள்ளி உட்பட எந்தவொரு பள்ளிவாயலும் அழிக்கப்படவோ நகர்த்தப்படவோ இல்லை என்று கூறுகிறார்கள்.
நாமல் வீதியில் அமைந்திருந்த பள்ளிவாயல் நகர்த்தப்பட்ட சந்தர்ப்பத்தில் கூட பள்ளி அமைந்திருந்த இடத்தின் உரிமையாளர்களின் கருத்துப்படி இடமாற்றம் ஒரு சில யார்கள் தொலைவுக்கே நிகழ்ந்தது என்று அறிய முடிகின்றது. அவர்களின் கருத்துப்படி பழைய பள்ளிவாயல் புகையிரதப்பாதையில் இருந்து ஒரு சில யார்கள் தொலைவில் அமைந்திருந்தது. அஹதியா வகுப்புகளை நடாத்துவதற்காக தொடர்ந்து வந்த சில வருடங்களில் பள்ளிவாயல் விரிவு படுத்தப்பட்டது. இவ்வேளையில் மரைன் டிரைவ் பாதைக்காக சில யார்கள் விட்டுக்கொடுக்கப்பட்டது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இந்நிகழ்வு மிகவும் சமாதானமான முறையில் எவ்வித காடையர் கூட்ட இடைபடுதல் இன்றி நிகழ்ந்தது.
தம்புள்ளை பிரச்சனைக்கு ஒரு சுமுகமான வேண்டும் என்று குரல் கொடுக்கும் ரிஸ்வி முப்தி விட்டுக்கொடுத்தலுக்கான தேவையை முவைக்கிறார். இவ்விடத்தில் இவ்விட்டுக்கொடுத்தலின் அர்த்தம் பள்ளிவாயலை தகர்ப்பது என்று இருக்குமானால் இது அடக்குமுறைக்கு தலை வணங்குவது போன்றதாகும். இங்கு அவர் தம்புள்ளை பள்ளிவாயல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் அதை அழிப்பதற்கான அறைகூவல் தம்புள்ளையில் உள்ள சிங்கள மக்களாலோ அல்லது இலங்கை பெரும்பான்மை சிங்கள இன மக்களாலோ விடப்படவில்லை என்பதை தனது உரையில் சுட்டிக்காட்ட தவறிவிட்டார். பெரும்பான்மை சிங்கள மக்கள் இந்த காவியுடை அடாவடித்தனத்தால் அவமானத்துக்கு உள்ளானதை அவர் இங்கு தெரிவித்திருக்க வேண்டும்.
எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தம்புள்ளை விவகாரம் தொடர்பில் மௌனம் சாதிக்கும் அதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச பௌத்த கோட்பாட்டுக்கும் தம்புள்ளையில் நடந்த சம்பவங்களுக்கும் யாதொரு தொடர்புமில்லை என்று கூறியுள்ள அதேவேளை சிங்கள் நடுநிலை புத்தி ஜீவிகள் தம்புள்ளை சம்பவங்களுக்கு தமது கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்ததோடு ஒரு புத்திஜீவி இந்த செயலில் ஈடுபட்டவர்களை தம்புள்ளையின் மன நலமற்ற மனிதர்கள் என்று விமர்சித்தது இங்கு குறிப்பிட தக்கது.
இந்த அடாவடித்தனம் அரச துறைகளில் செல்வாக்கு மிக்க பதவிகளில் உள்ள ஒரு சில தீவிர சிங்கள தேசிய வாதிகளின் கைங்கரியம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. LTTE அமைப்பு வெற்றி கொள்ளப்பட்டதன் பின்னர் இந்த தீவிர சிங்கள தேசியவாதிகள் முஸ்லீம்கள் மற்றும் இஸ்லாத்துக்கு எதிராக விசமத்தனமான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்பிரச்சாரங்கள் பத்து சிங்கள மொழி மூல இணையத்தளங்கள் மற்றும் ஒன்பது ஆங்கில இணையத்தளங்கள் மூலம் நடாத்தப்பட்டு வருகின்றன. இவர்கள் கூரகல என்ற இடத்தில் அமைந்துள்ள ஜெய்லானி என்ற இடம் முழுமையாக சிங்களவர்களுக்கு சொந்தமானது அதை முஸ்லீம்கள் கைப்பற்றி கொண்டார்கள் என்று தவறாக வழிநடாத்தும் ஒரு ஆவணப்படத்தையும் உருவாக்கியுள்ளனர்.
இவர்களின் மூலம் சமூக சக வாழ்வுக்கு ஏற்படும் பாதகமான சூழல் பற்றி நான் செப்டம்பர் 2011 இல் சண்டே டைம்ஸ் பத்திரிகையில் ஒரு கட்டுரையை பிரசுரித்தேன். வழமை போல் முஸ்லிம் அரசியல்வாதிகள், கொள்கைவாதிகள் உட்பட எவரும் இதை கணக்கில் எடுக்கவில்லை. அதன் பின்னர் அனுராதபுரத்தில் தர்கா தகர்ப்பு இடம்பெற்றது. இப்பொழுது தம்புள்ளை விவகாரம் அரங்கேறியுள்ளது. இங்கு வந்த குண்டர் கூட்டம் வெளியிடங்களில் இருந்து கொண்டுவரப்பட்டு தம்புள்ளை முக்கிய மத குரு ஒருவரால் இந்த அடாவடித்தனங்கள் ஒழுங்கமைக்கப்பட்டன.
சட்டத்தை கையிலெடுக்கும் இந்த கும்பல்கள் இந்த முஸ்லிம் விரோத போக்கு மூன்று தசாப்த யுத்த அழிவுகளின் பின்னர் மீட்சி பெற்றுள்ள எமது நாட்டை மீண்டும் நாசமாக்கவல்லது என்பதை உணரவில்லை.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தான் ரிஸ்வி முப்தியின் விட்டுக்கொடுத்தலுக்கான கோரிக்கை நோக்கப்படல் வேண்டும்.
தம்புள்ளை விவகாரத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் கொள்கைவாதிகள் தலையிடும் முன்பு முஸ்லிம் சமூகம் இப்பிரச்சினையை ஒரு அமைதியான மற்றும் கௌரவமான முறையிலேயே அணுகினர். சமூகங்களுக்கு இடையான சகவாழ்வு என்பதே அவர்களின் சுலோகமாக இருந்தது.
எனினும் இந்த பிரச்சினையில் ரிஸ்வி முப்தியினால் கூறப்படும் விட்டுக்கொடுப்பு சட்டத்தை மதிக்காத தன்மையை ஏற்றுக்கொள்வதாகவே அமையும். இப்பிரச்சினை நடந்தவுடன் பிரதமர் அலுவலகம் குறித்த பள்ளிவாயலை நிர்மூலமாக்க உத்தரவிட்டது இங்கு நினைவூட்டத்தக்கது. அத்துடன் இவ்விட்டுக்கொடுப்பு ஒரு தவறான முன்னுதாரணத்தையும் பயங்கர பின்விளைவுகளையும் ஏற்படுத்தவல்லது. சமூகங்களுக்கு இடையான இவ்வாறான பிளவுகள் நாகரிகமான முறையில் நாட்டின் நிலங்கள் தொடர்பான சட்டங்களின் மூலம் தீர்க்கப்படல் வேண்டுமேயன்றி காடையர் கூட்ட அடாவடிகளின் மூலம் தீர்க்கப்படல் கூடாது என்பதே முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்த பற்றியெரியும் பிரச்சினை ஆறு மாத காலத்துக்குள் தீர்க்கப்பட வேண்டும் என்று முற்று முழுதாக சிங்கள அரச அதிகாரிகளால் நடாத்தப்பட்ட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் எந்த வித முஸ்லிம் பிரதிநிதித்துவமும் இருக்கவில்லை. இவ்வாறான ஒரு நிலையில் மக்களுக்கு இப்பிரச்சினை சம்பந்தமான யதார்த்தமான தகவல்களையே ரிஸ்வி முப்தி விளக்கியிருக்க வேண்டும். மாறாக இப்பிரச்சினைக்கு முஸ்லிம்களின் உரிமைகளை தாரை வார்த்து எட்டப்படக்கூடிய தீர்வு ஒன்றையே அவர் தெரிவித்துள்ளார்.
இவ்விடத்தில் ரிஸ்வி முப்தி தனது வரையறைகளை கடந்து செயற்பட்டுள்ளார் என்றே தோன்றுகின்றது. உலமா சபை தலைவராக மார்க்க விழுமியங்களின் பிரகாரம் சமூகத்தை வழி நடாத்துவதே இவரின் பொறுப்பாக உள்ளது. எனினும் இவர் தனது வரையறைகளை மீறி வர்த்தகமயப்படுத்தப்பட்ட மற்றும் சமூக விரோதிகளால் நடாத்தப்படுகின்ற அரசியலுக்குள் இவர் நுழைந்துள்ளார். உலமா சபையின் செயற்பாடுகள் மார்க்கம் சம்பந்தமான ஒரு அமைப்பாக அதன் நடவடிக்கைகள் வரையறுக்கப்பட வேண்டும் என்ற கருத்து பரவலாக முஸ்லிம் சமூகத்தில் நிலவும் இந்த சந்தர்ப்பத்தில் இவரின் அரசியல் பிரவேசம் பாதகமான விளைவுகளியே உருவாக்கும்.
அதே வேளை முஸ்லிம் சமூகம் சம்பந்தமான முடிவுகளை ஜம்இய்யதுல் உலமா எடுக்குமுன்னர் சமூகத்தை கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் சமூகம் எதிர்பார்க்குகின்றது.
இந்த பொறுப்பற்ற பேச்சு சம்பந்தமான விளக்கத்தை சமூகத்துக்கு அளிக்கும் தார்மீக கடமை ரிஸ்வி முப்தி அவர்களுக்கு உள்ளது.
- By Latheef Farook / தமிழாக்கம் காத்தான்குடி இன்போ -
0 comments:
Post a Comment