துட்டகைமுனுவின் வாளை வைத்திருந்தால் ஆயுள் முழுவதும் ஆளலாம் என நம்புகிறார்கள்: அநுரகுமார
தேசிய நூதனசாலையிலிருந்து புராதன வாள்கள் காணாமல் போன சம்பவமானது, புராணக்கதைகளையும் மூடநம்பிக்கைளையும் நம்பும் தலைமைத்துவத்தை நாடு கொண்டுள்ளதன் விளைவாகும் என ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் நேற்று கூறினார்.
துட்டகைமுனுவின் வாளை வைத்திருப்பவர் ஆயுள் முழுவதும் ஆட்சி செய்ய முடியும் என புராதன நம்பிக்கை உள்ளதாகவும் அவர் கூறினார்.
'இத்தகைய நம்பிக்கைகள்தான் நூதனசாலையிலிருந்து புராதன வாள்களும் மோதிரங்களும் மர்மமாக காணாமல் போவதற்கு வித்திட்டதாகத் தோன்றுகிறது. மக்களைவிட சோதிட சக்தியை நம்பும் அரசியல் தலைமை உள்ளபோது இவ்வாறு நேரிடுகிறது. அவர்கள் தேடும் வாளை மாத்திரம் வைத்துக்கொண்டு ஏனைய பொருட்களையாவது நூதனசாலையிடம் ஒப்படைக்குமாறு நாம் கோருகிறோம்' என அநுரகுமார திசாநாயக்க கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சியும் இதேபோன் குற்றச்சாட்டை முன்வைத்தது.
எனினும் ஐ.தே.க. ஆட்சிக்காலத்தில் மன்னர் ஒருவர் பயன்படுத்திய புராதன சிங்காசனமும் மன்னர் ஒருவரின் முடியும் காணாமல் போனதாக கலாசார அமைச்சர் ரி.பி. ஏக்கநாயக்க கூறினார்.
'இப்போது நீங்கள் வாள் காணாமல் போனமை குறித்து நீங்கள் பேசுகிறீர்கள். ஆனால், சிங்காசனம் காணாமல் போன அரசியல் வரலாற்றை நாம் கொண்டுள்ளோம்' என்றார்.
0 comments:
Post a Comment