மலாலா பாகிஸ்தானிய பெண் இல்லையா (தகவலின் நம்பகத்தன்மை) ?????????
கடந்த இரண்டு நாட்களாக சமூக தளங்களில் பல சகோதரர்கள் "மலாலா பாகிஸ்தானிய பெண் இல்லை - திடுக்கிடும் தகவல்" என்ற ஒரு பதிவை ஷேர் செய்திருந்தார்கள். இந்த கட்டுரை நதீம் பரா...ச்சா என்ற ஊடகவியாளருடையது. இந்த மனிதர் இந்த கட்டுரையை பாகிஸ்தானின் டான் ஊடகத்திற்காக எழுதினார். இதனை தான் காப்பி செய்து சகோதரர்கள் கொடுத்த தளத்தில் (lathee farook என்று தொடங்கும் லிங்க்) போட்டுள்ளார்கள்.
கட்டுரையின் உண்மை தன்மையை இப்போது காண்போம். இந்த கட்டுரை தொடங்கும் போதும் முடியும் போதும், டிஸ்கி (குறிப்பு) என்று போட்டு அதில் "இந்த கட்டுரை கேலிக்காகவும், கற்பனையாகவும் எழுதப்பட்டது" என்பதை டான் ஊடகம் தெரிவித்து விடுகின்றது. ஆனால் இந்த டிஸ்கி நம் சகோதரர்கள் கொடுத்த தளத்தில் இல்லை. இருந்திருந்தால் நம் சகோதரர்கள் இதனை ஷேர் செய்திருக்க மாட்டார்கள் என்றே எண்ணுகின்றேன்.
இவை எல்லாத்தையும் விட, அந்த கட்டுரையை முழுமையாக படித்தால் அதில் உள்ள கேலியை நாம் புரிந்துக்கொள்ளலாம். உதாரணமாக: மலாலா குறித்த உண்மையை வெளியே தெரிவித்த ISI ஏஜென்ட், தன்னை யாரும் கண்டுபிடிக்க கூடாதென்று ஸ்பைடர்மேன் உடையில் தோன்றி விளக்கமளித்தார் என்று கூறி அவர் அந்த உடையில் தோன்றும்படியான படு கிண்டலான படத்தையும் டான் வெளியிட்டிருந்தது (இத்துடன் அந்த படத்தை அட்டாச் செய்துள்ளேன்). மேலும், மலாலா சுடப்படும் போது, உண்மையை யாரும் அறியாமல் இருக்க, தக்காளி சாஸை தன் மீது தடவிக்கொண்டு ரத்தம் வருவது போல நடித்தார் என்றும் அந்த கட்டுரையில் வருகின்றது. இப்படி அந்த கட்டுரையின் கேலிகளை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.
மலாலா குறித்து எதிர்மறையான கருத்துக்கள் நிலவுவதால் அவற்றை கிண்டலடித்து இந்த கட்டுரையை எழுதியுள்ளார் நதீம். ஆகவே சகோதரர்களே, ஏதோ ஒரு தளத்தில் வெளியான செய்தியின் உண்மை தன்மையை ஆராயாமல் தயவுக்கூர்ந்து பதியாதீர்கள்/ஷேர் செய்யாதீர்கள்.
டானில் வெளியான அந்த கட்டுரை: http://dawn.com/news/1048776/
வஸ்ஸலாம்..
Aashiq Ahamed
0 comments:
Post a Comment