ஸ்னோடன் போட்ட புது குண்டு - மண்டை காய்கிறது அமெரிக்கா
பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உட்பட 35 நாட்டு தலைவர்களின் மொபைல் போன்களை ஒட்டு கேட்கிறது அமெரிக்க உளவுத்துறை. & இப்படி ஒரு புதிய குண்டை அமெரிக்காவின் ‘உண்மை விளம்பி’ எட்வர்ட் ஸ்னோடன் போட்டதால் இப்போது ஐரோப்பிய நாடுகளுடன் அமெரிக்காவுக்கு தர்மசங்கட நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு விஷயத்திலும் ஒத்துழைக்கும் எங்களையே சந்தேகிப்பதா? எங்கள் போன்களை ஒட்டு கேட்டு நம்பிக்கை துரோகம் செய்வதா என்று ஜெர்மனி, பிரான்ஸ் உட்பட ஐரோப்பிய நாடுகள் கேள்வி எழுப்பியுள்ளன. பதில் சொல்ல முடியாமல் அமெரிக்கா திணறுகிறது. அமெரிக்காவின் உளவு அமைப்பின் உயர் அதிகாரியாக இருந்தவர் எட்வர்ட் ஸ்னோடன். இவர் அமெரிக்கா பற்றிய ரகசியங்களை வெளியிட்டதை தொடர்ந்து நாட்டை விட்டு ஓட்டம் பிடிக்க நேரிட்டது. இப்போது ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார். பல நாடுகளிலும் அமெரிக்காவின் உளவு வேலை களை இவர் அவ்வப்போது பகிரங்கப்படுத்தி ஆதார ஆவணங்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
சமீபத்தில் ஒரு புதிய குண்டை இவர் போட்டார். ‘அமெரிக்க உளவுத்துறை 35 உலக தலைவர்களின் போன்களை ஒட்டு கேட்கிறது’ என்று அவர் வெளியிட்ட ரகசியம் லண்டன் கார்டியன் பத்திரிக்கையில் வெளியானது. ஆனால், ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாட்டு தலைவர்கள் என்று மட்டும் பொது வாக வெளியிடப்பட்டதால் இன்னும் பரபரப்பு கூடியது. இந்த விவகாரம் ஐரோப்பிய நாடுகளை பெரிதும் சீண்டி விட்டது. சிரியா விஷயத்தில் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்காவுக்கு ஒத்துழைத்ததற்கு இது தான் பரிசா என்று பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகள் பெரும் கடுப்பில் உள்ளன. ஜெர்மனி பிரதமர் ஆஞ்செலா மார்கெல் கடந்த வெள்ளியன்று, ‘என் போன் ஒட்டு கேட்கப்படுகிறது. இதற்கு அமெரிக்கா விளக்கம் தர வேண்டும்’ என்று கூறிய மறுநாள், ஸ்னோடன் ரகசிய தகவல்களை கார்டியன் வெளியிட்டது. இது ஜெர்மனிக்கு கோபத்தை அதிகப்படுத்தியது.
தாங்கள் சந்தேகித்தது போல அமெரிக்க உளவு பிரிவு, ஜெர்மனி தலைவர்கள் உட்பட முக்கிய போன்களை ஒட்டு கேட்கிறது என்பதை உறுதி படுத்துவதாக கருதியது. இதையடுத்து, பிரான்ஸ் ஜனாதிபதி பிராங்காய்ஸ் ஹாலன்ட்டும், ஜெர்மனி பிரதமர் மார்கெலும் பேச்சு நடத்தினர். அமெரிக்காவின் நம்பிக்கைக்கு எதிரான செயல்கள் பற்றி அதில் இருவரும் வருத்தப்பட்டனர். ‘இனி அமெரிக்காவை நம்ப முடியாது. நம்பிக்கை இல்லாதவர் புஷ் என்பதை சொன்னபோது, இனி பாருங்கள்; உங்கள் நம்பிக்கைக்கு முழு அளவில் அமெரிக்கா இருக்கும்’ என்று ஒபாமா கூறியிருந்தார். ஆனால் அவர் இப்படி நடந்து கொண்டதால் இனி எதிலும் நம்ப முடியாது’ என்று இருவரும் கொதிப்புடன் கூறினர். கடந்த ஒரு மாதமாகவே இந்த விவகாரம் ஐரோப்பிய நாடுகளை கவலைப்பட செய்தது. ஐரோப்பிய பார்லிமென்ட் கடந்த வாரம் கூடி, ‘அமெரிக்காவுடன் நிதி தொடர்பான தகவல் பரிமாற்றம் , உளவு தகவல்கள் பரிமாற்றம் ரத்து செய்யப்படுவதாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இது அமெரிக்காவை அதிர்ச்சி அடைய வைத்தது. தீவிரவாதிகளுக்கு நிதி நடமாட்டம் குறித்து தகவல்களை பரிமாறிக்கொள்ள ஐரோப்பிய நாடுகளுடன் அமெரிக்கா பேசியிருந்தது. ஆனால், ஐரோப்பிய நாடுகளை நம்பாமல் போன்களை ஒட்டு கேட்பது, நிதி தகவல்களை சேகரிப்பது போன்ற செயல்கள் இந்த நாடுகளை ஆத்திரமடைய வைத்தது.
சிரியா விஷயத்தில் அமெரிக்காவின் முடிவை ஜெர்மனி எதிர்த்தது. ஆனால், பிரான்ஸ் ஆதரித்தது. பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் ஆதரித்தாலும், பிரிட்டன் பார்லிமென்ட் நிராகரித்து விட்டதால் அமெரிக்காவுக்கு ஆதரவு கிடைக்கவில்லை. மேலும், ரஷ்யா தலையிட்டு, சிரியா விஷயத்தில் போரை தவிர்க்க வேண்டும் என்று கூறியதை தொடர்ந்து, ஒபாமாவும் ஒப்புக்கொள்ள வேண்டியதாகி விட்டது. இப்படி குழப்பமான நிலையிலும் ஒத்துழைப்பு தந்த ஐரோப்பிய நாடுகளையே அமெரிக்கா சந்தேகித்து விட்டதே என்று அந்த நாடுகளுக்கு எரிச்சல் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் பிரான்சில் உள்ள அமெரிக்க தூதர் சார்லஸ் ரிவ்கின், ஜெர்மனியில் உள்ள அமெரிக்க தூதர் ஜான் எமர்சென் ஆகியோரை அந்தந்த நாட்டு வெளியுறவு அமைச்சகம் அழைத்து தங்கள் கண்டனத்தை வெளியிட்டன.
2006 முதல் ‘டேப்பிங்’
ஸ்னோடன் வெளியிட்ட ரகசிய ஆவணங்களின் படி, 2006 ல் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஏஜென்சிக்கு 200 போன் நம்பர்கள் அடங்கிய பட்டியல் தரப்பட்டது. அதை உளவு அதிகாரிகள் தொடர்ந்து ஒட்டு கேட்டு வருகின்றனர் என்று உறுதியாகிறது. இது பற்றி வெள்ளை மாளிகை அதிகாரிகள் மறுக்கவில்லை. ஆனால், எதிர்காலத்தில் இப்படி நடக்காது’ என்று மட்டும் கூறியுள்ளது தான் ஐரோப்பிய நாடுகள் கோபத்தை அதிகரித்துள்ளது.
ஒட்டு கேட்பதை நிறுத்த முடியாது
ஒபாமாவின் செய்தி தொடர்பாளர் ஜே கார்னி கூறுகையில்,‘ ஜெர்மனி பிரதமர் மார்கெல் போன் ஒட்டு கேட்கப்பட்டதா என்று உறுதி கூற முடியாது. ஆனால், தலைவர்களின் போன் ஒட்டு கேட்கும் விஷயத்தில் எந்த தவறும் நடக்காது. உலக பாதுகாப்புக்கான நடைமுறையை தான் அமெரிக்கா பின்பற்றுகிறது. இதனால் எல்லாருக்கும் தான் நல்லது. போன் ஒட்டு கேட்கும் விஷயத்தில் எந்த மாற்றமும் இல்லை. அது நீடிக்கும்’ என்று கூறினார். இது ஐரோப்பிய நாட்டு தலைவர்களை கவலையடைய செய்துள்ளது.
Jaffna Muslim
0 comments:
Post a Comment