கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

புதிய அடையாள அட்டை விவகாரம்: இஸ்லாமா? சட்டமா?




அடுத்த வருடம் ஜூன் மாதம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையில் முஸ்லிம் ஆண்கள் தொப்பி அணியமுடியாதெனவும், பெண்கள் பர்தா அணியமுடியாதெனவும் ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான குரோதச் செயல்கள் அரங்கேறிவரும் சூழ்நிலையில் அரசாங்கம் இவ்வாறானதொரு அறிவித்தலை வெளியிட்டுள்ளமையானது பல சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

புதிய இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையின் புகைப்படத்தில் எந்தவொரு மதத்தையோ அல்லது சமூகத்தின் கலாசாரத்தையோ பிரதிபலிக்கும் வகையிலான எந்தவொரு அடையாளமும் இருக்கமுடியாதென அரச பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் ஆட்பதிவுத் திணைக்களத்தினுடைய பொது ஆணையாளர் ஆர்.எம்.எஸ். சரத்குமார அறிவித்துள்ளார்.
 
முஸ்லிம் ஆண்கள் தொப்பி அணியாமல் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதில் பெரியளவிலான சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லிம் பெண்கள் கட்டாயம் தங்களது தலையை மறைக்கவேண்டும். இதற்காகவே அவர்கள் பர்தா அணிந்துகொள்கிறார்கள். ஆனால், அரசாங்கம் கொண்டுவரும் புதிய சட்டத்தின் பிரகாரம் எந்தவொரு முஸ்லிம் பெண்களும் பர்தாவைக் கழற்றிவிட்டு புதிய அடையாள அட்டையைப் பெற்றக்கொள்ள மாட்டார்கள்.
 
ஒரு முஸ்லிம் பெண்மணி பர்தா இல்லாமல் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். சோதனைச் சாவடியில் அவள் பர்தா அணிந்து தலையை மறைத்துக்கொண்டு சென்றால், பொலிஸார் நடுவீதியில் வைத்து அவளது பர்தாவை கழற்றச் சொல்வார்கள். இதை அவர்கள் ஒருகாலமும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இஸ்லாமா அல்லது நாட்டுச் சட்டமா என்று வரும்போது முஸ்லிம்கள் எக்காரணம் கொண்டும் இஸ்லாத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
 
இந்த புதிய நடைமுறை அமுலுக்கு வந்தால், எந்தவொரு முஸ்லிம் பெண்ணும் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள மாட்டார். அடையாள அட்டை இல்லாமல் அவர்கள் பல நெருக்கடிக்கு உள்ளாவார்கள். நாட்டின் பிரஜைகள் அந்நாட்டு அடையாள அட்டையை பகிஷ்கரிக்கும்போது விவகாரம் விஸ்வரூபமெடுத்து சர்வதேச மட்டம்வரை பேசப்படும். இறுதியில் சொந்தச் செலவில் சூனியம் வைத்த கதையாக மாறும்.
 
இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கருவறுக்கத் துடித்துக் கொண்டிருக்கும் பேரினவாத இயக்கங்கள் முஸ்லிம் பெண்களின் ஆடைகளுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், இஸ்லாமிய கலாசார ஆடைகளை அணிந்த பெண்கள் பல இடங்களில் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். ஒருசில பாடசாலைகளில் கூட பர்தா அணியமுடியாதென தடைகள் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடுவதைத்தான் (நிகாப்) எதிர்க்கிறோம். தலையை மூடுவதை (பர்தா) அல்ல என்று பொதுபல சேனா பிரசாரம் கூறிவந்தது. இந்த நிலையிலேயே பர்தா அணிவது தற்போது தேசியப் பிரச்சினையாக்கப்பட்டுள்ளது. இதற்கு அனுசரணை வழங்குவதுபோல அரசாங்கம் வெளியிட்டுள்ள இந்தி புதிய அறிவிப்பானது முஸ்லிம்களிடையே பலத்த விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
 
ஒருநாட்டின் கலாசார ஆடைகளுக்கும் தேசிய அடையாள அட்டைக்கும் எவ்விதத் தொடர்புகளும் இல்லை. அடையாள அட்டையில் முஸ்லிம்கள் தலையை மறைத்திருப்பதால் அடையாளம் காண்பதில் பல சிரமங்கள் உள்ளன. சோதனையின்போதே இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், எதிர்வரும் காலங்களில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய சட்டத்தை மாற்றவோ அல்லது திருத்தங்களை மேற்கொள்ளவோ தனக்கு எவ்விதமான அதிகாரங்களையும் இல்லையென ஆட்பதிவுத் திணைக்களத்தின் பொது ஆணையாளர் அடித்துக் கூறியுள்ளார். அப்படியானால் முஸ்லிம்களின் கலாசார ஆடையை அரசாங்கம் நேரடியாகவே எதிர்க்கிறதா என்ற கேள்விதான் எழத்தான் செய்கிறது.
 
கலாசார அடையாளங்கள் என்று வரும்போது, கிறிஸ்தவ மதத் தலைவர்கள் மற்றும் இந்து மதத் தலைவர்களுக்கும் இந்தப் பிரச்சினைகள் வரத்தான் போகின்றது. கத்தோலிக்க மத சகோதரிகள் தலை மறைப்பை கழற்றுவார்களா? ஐயர்கள் குடுமிகளை கத்திப்பார்களா? அப்படியாயின் பெளத்த பிக்குகள் தங்களது காவி உடைகளைத் துறந்துவிட்டு புகைப்படம் எடுப்பார்களா? மொட்டை அடித்தவர்களுக்கு என்ன கட்டுப்பாடு? இவ்வாறான குழப்பம் வந்தால் ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் சட்டத்தை மாற்றத் தேவையில்லை. பாராளுமன்றமே சட்டத்தை மாற்றும்.
 
புதிதாக வரப்போகும் அடையாள அட்டைகளில் கோட், சூட், டை அணிந்து புகைப்படம் எடுத்தால் நாம் ஆங்கிலேயரின் கலாசாரத்தைப் பின்பற்றியோர்களாக மாறிவிடுவோம் அல்லவா? எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினை எழும்போது “தலையை மறைப்பதைப் பற்றி மட்டுமே பேசினோம். கலாசார உடைகள் குறித்து நாங்கள் பேசவில்லை” என்று அரசாங்கம் பல்டி அடித்துக்கொள்ளும். மதத் தலைவர்களுக்கு கட்டுப்பாடுகள் இல்லையென அரசாங்கம் சலுகைகளை வழங்கும்.
 
இஸ்லாமியர்களின் கலாசார ஆடைகளுக்கு அங்கீகாரமற்ற தேசியரீதியான ஒரு சவாலாகவே இதனைப் பார்க்கவேண்டியுள்ளது. நாட்டில் வாழும் ஒவ்வொரு சமயத்தினருக்கும் அவரவரது மதத்தைப் பின்பற்றவும், மார்க்க அனுஷ்டானங்களை நிறைவேற்றவும், கலாசார ஆடைகளை அணியவும் உரிமை இருக்கின்றது. இந்நிலையில் இலங்கையில் கொண்டுவரப்பட்டுள்ள இப்புதிய சட்டமானது மக்களின் மதச் சுதந்திரம் மீது விதிக்கப்பட்ட ஒரு சவாலாகவே எடைபோட வேண்டியுள்ளது.
 
நாட்டின் பிரஜைகள் குறித்து சரியான பதிவுகள் இல்லை. பழைய அடையாள அட்டைகளின் நம்பகத்தன்மை குறைவு. இதை நிவர்த்தி செய்வதற்காகவே நவீன கணனி மயப்படுத்தப்பட்ட புதிய அடையாள அட்டைகளை வெளியிடப்போவதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதிலும் பிரச்சினைகள் வரும் என்று பர்தா, தொப்பி அணிவதற்கு தடை விதித்துள்ளமையானது, அவர்களது தொழில்நுட்பம் மீதே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நவீன தொழில்நுட்பம் என்று மார்தட்டிக்கொண்டாலும், அதன் மீதான நம்பகத்தன்மையைக் குறைக்கவே கலாசார உடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு தவறு இருப்பது கலாசார உடையில் அல்ல, அவர்களது தொழில்நுட்பத்தில்தான்.
அடையாள அட்டையில் முகம் தெளிவாகத் தெரியவேண்டும் என்பதற்காக மேற்குலக நாடுகளில் இந்தச் சட்டம் நடைமுறையில் இருந்தாலும் இலங்கையில் இதனைப் பின்பற்றுவதற்கு வேறுபல காரணங்கள் உள்ளன. இலங்கையில் முஸ்லிம்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இவ்வாறான புதிய பல சட்டங்கள் அமுல்படுத்துகின்றனர். முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளைப் பிரயோகித்து பரீட்சித்துப் பார்த்த பின்னர் தற்பொழுது அது சட்டரீதியில் வந்துள்ளது.
 
ஒவ்வொரு சமயத்தவரும் தங்களது கலாசார ஆடைகளை அணிவது அவரது உரிமை. பயங்கரவாதமே இல்லாத நாட்டில் இவ்வாறானதொரு புதிய சட்டத்தை கொண்டுவர அரசுக்கு என்ன தேவையுள்ளது? எனவே, அரசாங்கம் இதை உணர்ந்து உடனடியாக இச்சட்டத்தை மீள்பரிசீலனை செய்து சமயங்களை மதிக்கும் வகையில் திருத்தங்களை மேற்கொள்ள முன்வரவேண்டும்.
 
பிறவ்ஸ் முஹம்மட்
லங்காமுஸ்லிம் வெப்

0 comments:

Post a Comment