கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

இலங்கைத் தேர்தல் : மகிந்தா வெற்றியின் மர்மம்


வெற்றிக்கு வருத்தமும் இல்லை. தோல்விக்கு மகிழ்ச்சியும் இல்லை. இலங்கையின் அதிபர் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. மகிந்தா ராஜபக்ஷே மீண் டும் குடியரசுத் தலைவராகத் தொடரலாம் என்று பெரும்பான்மைச் சிங்களவர்கள் தங்களது சிலிர்ப்பைச் சொல்லியிருக்கிறார்கள். ''நாட்டு மக்கள் தங்கள் நன்றியை உலகுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பயங்கரவாதம் இல்லாது ஒழிந்த பின் நடத்தப் படும் முதலாவது தேர்தலில் எனக்குத்தான் மக்கள் வெற்றியை வழங்கியிருக்கிறார்கள்'' என்று மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தியிருக்கிறார் மகிந்தா.

'தோல்வி உறுதி' என்றுதான் மகிந்தா நினைத்தார். சிங்களத்தில் இருந்த சில பத்திரி கைகளும் இப்படித்தான் உறுதியாகச் சொல்லின. கருத்துக்கணிப்பு நடத்தியவர்கள் அதிகமான சதவிகிதத்தை சரத் ஃபொன்சேகாவுக்குதான் அளித்தார்கள். 'தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன், மனவருத்தம் தோய்ந்த நிலையில் அழுத முகத்துடன் புத்தக் கோயிலுக்கு வந்து பிட்சுகளிடம் வேண்டினார் மகிந்தா. 'என்னுடைய அரசியல் வாழ்க்கையை என்னுடைய தம்பிகள் கெடுத்துவிட்டார்கள். நான் தோற்கப்போகிறேன்' என்றுவருத்தப்பட்டார். புத்தபிட்சுக்கள்தான் நம்பிக்கை வார்த்தைகளைச் சொல்லி அவரை அனுப்பி வைத்தார்கள்' என்று சிங்களப் பத்திரிகைகள் கிசுகிசு வெளியிடும் அளவுக்குத்தான் நிலைமை இருந்திருக்கிறது. மகிந்தாவின் சகோதரரான கோத்தபயவுக்குத் திடீர் நெஞ்சு வலி வந்ததாகவும், சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்துச் செல்ல இருப்ப தாகவும் செய்திகள். அரசியல் சவால்கள்விடும் இன்னொரு சகோதரர் பசில், பெரிய அளவு பிரசாரங்கள் இல்லாமல் பதுங்கிவிட்டார். மகிந்தா - கோத்தபய - பசில் ஆகிய மூவர் அணியே முடங்கிப்போனதற்குப் பிறகு, உற்சாகமாக இயங்க வேறு யார்?

ஆனால், எதிர்க்கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகாவுக்குத் திரும்பிய பக்கமெல்லாம் ஆதரவுச் சக்திகள் குவிந்திருந்தன. இலங்கையின் பிரதானக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினரின் செல்வாக்கு, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் நன்மதிப்பு, தீவிர சிங்கள இனவாதக் கட்சியான ஜே.வி.பி-யின் ஆதரவு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் ஒத்துழைப்பு, ஆளுங்கட்சி மீதான அதிருப்தி என ஃபொன்சேகா பலமான படையணிகளைவைத்திருந்தார். அவருக்குத் தோல்வி குறித்த பயமே இல்லை. வெற்றிக்குப்பிறகு தாம் என்ன செய்யப்போகிறோம் என்பதையே தனது வாக்குறுதியாகச்சொல்லி வந்தார். இவ்வளவும் போதாது என்று மகிந்தாவின் கட்சியைச் சேர்ந்தவரும்அந்த நாட்டின் முக்கிய சக்தியுமான சந்திரிகா, சரத் ஃபொன்சேகாவைச் சந்தித்துக் கை கொடுத்து, 'என்னுடைய ஆதரவும் உங்களுக்குத்தான்!' என்றார். அவரது அப்பா பண்டாரநாயகா குடும்பத்துக்கு இருக்கும் செல்வாக்கு, சரத்துக்கு இன்னொரு பலமானது. மாட்சிமை தங்கிய மனிதராக தான் ஆகிவிட்டதாகவே நினைத்தார் ஃபொன்சேகா.

ஆனால், முடிவுகள் மகிந்தாவின் மகுடத்துக்குச் சிக்கல் இல்லாமல் ஆக்கிவிட் டன. சிங்களவர்கள் மனச் சஞ்சலம் இல்லாமல் தங்களது முடிவை எடுத்தார்கள். ''தமிழனைக் கொன்று குவிப்பதில் யார் சமரசம் இல்லாமல், தயவுதாட்சண்யம் பார்க்காமல் இருப்பார்களோ, அவர்களுக்குத்தான் தங்களது வாக்கு என்றுசிங்க ளவர்கள் நினைத்தார்கள். அவர்களது சிந்தனை இந்த ஒற்றை வரியில்தான் அடங்கி இருந்தது. ஃபொன்சேகாவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்ததும், சிங்களவர்கள் மத்தியில் இந்த எண்ணம் எழுந்துவிட்டது. ஒருவேளை ஃபொன்சேகாவையும் தமிழ் எம்.பி-க்கள் எதிர்த்திருந்தால், சிங்களவர் வாக்குகள் இன்னமும்சிதறி இருக்கும். சரத் ஃபொன்சேகா கூடுதலாக வாங்கியிருக்க முடியும். தமிழர்கள் முழுமையாக ஃபொன்சேகாவையும் ஆதரிக்கவில்லை. எனவே, அந்த வாக்குகளும் அவருக்குக் கிடைக்கவில்லை. எனவே, பெரும்பான்மை வாக்குகளை மகிந்தாவால் பெற முடிந்தது'' என்கிறார்கள் கொழும்புப் பத்திரிகையாளர்கள்.

ஜனதா விமுக்தி பெரமுனா போன்ற அமைப்புக்கள் எந்த இனவாதத்தை அந்த மண்ணில் விதைத்ததோ, அதன் அசைக்க முடியாத பிரதிநிதியாக மகிந்தா இன்று நினைக்கப்படுகிறார். எனவேதான் சிங்களவர் பெரும்பான்மை இருக்கும் அனைத்துப் பகுதிகளிலும் மகிந்தாவுக்கே வாக்குகள் விழுந்திருக்கின்றன.

ஆனால், சிறுபான்மை இனங்களான தமிழர், முஸ்லிம், மலையகத்தவர் ஆகிய மூவரும் மகிந்தாவுக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை, வன்னி, திரிகோணமலை எனத் தமிழர் வாழும் இடமெல்லாம் ஃபொன்சேகாதான் அதிகம் வாங்கியிருக்கிறார். மனித உரிமை, மக்கள் ஜனநாயகம் என்ற வார்த்தையை வைத்துக்கொண்டு மகிந்தாவை ஆதரித்து யாழ்ப்பாணத்தில் பல இறக்குமதி அமைப்புகள் பிரசாரம் செய்தன. ஊர்க்காவல் துறை தவிர, வேறு எங்கும் இவர்களால் தமிழர் மனதை மாற்ற முடியவில்லை. கிழக்கு மாகாணத்தில் சிங்களவர் அதிகம் வாழும் சேருவில் தொகுதி தவிர, மற்ற இடங்களில் மகிந்தா பெற்ற வாக்குகள் குறைவு. முஸ்லிம்கள் அதிகம் இருக் கும் மூதூரிலும் இதே நிலைமைதான். கருணா தன்னுடைய கோட்டையாகச் சொல்லும்மட்டக்களப்பு மாவட்டத்து மூன்று தொகுதியிலும் தோல்வியே! சிங்களவர் அதிகம் வாழும் அம்பாறையில் மட்டும் மகிந்தா வெற்றிபெற்றுள்ளார். மலையகத்தை எடுத்துக்கொண்டால், அங்குள்ள முக்கியக் கட்சிகளான இந்தியத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி இரண்டுமே மகிந்தாவை ஆதரித்தன. ஆனால், தமிழர்கள் வாழும் நுவரெலியா - மஸ்கெலியா, தொத்மலையில்ஃபொன் சேகா அதிக வாக்குகள் வாங்கியுள்ளார். அதாவது, சிங்களவர் மகிந்தாவுக்கும், சிறுபான்மை தமிழர், முஸ்லிம், மலையகத்தவர் அவரை நிராகரித்தும் வாக்களித்து உள்ளார்கள். ''இங்கு இரண்டு இனங்கள் இல்லை. ஒரே இனம்தான் இருக்கிறது'' என்று மகிந்தா அடிக்கடிசொல்வார். அதை மக்கள் தங்களது வாக்குகள் மூலமாகத் தோல்வி அடையவைத்திருக்கிறார்கள்.

மகிந்தாவின் இந்த வெற்றியே மோசடியானது என்று ஃபொன்சேகா சொல்லியிருக்கிறார். பாம்பின் கால் பாம்பறியும். ''நான் 14 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுவிட்டேன். ஆனால், அதை மாற்றித் திருத்தி, தான் வென்றதாக மகிந்தா அறிவித்துவிட்டார்'' என்கிறார் ஃபொன்சேகா. ''தேர்தல் ஆணையரால் எதிர்பார்த்த அளவுக்குப் பணிகளை முன்னெடுக்க முடியவில்லை. உண்மையில், அவருக்கு ஏதோ நெருக்கடி ஏற்பட்டு உள்ளது'' என்கிறார், முன்னாள் பிரதமர் ரணில். மகிந்தாவின் பழைய நண்பர் மங்கள சமரவீரா, ''தேர்தல் ஆணையரைத் துப்பாக்கி முனையில் மிரட்டியுள்ளார். ஃபொன்சேகாவுக்குத் தேர்தல் வேலை பார்த்த பலரும் மதியத்துக்குப் பிறகு மிரட்டித் துரத்தப்பட்டுள்ளனர்'' என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க பதவி விலகப்போவதாக வதந்தி கிளம்பியிருக்கிறது. உச்ச நீதிமன்றத் தின் அனுமதி இல்லாமல்அவரால் பதவி விலக முடியாது. இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு மாதத்தில் நடக்க இருப்பதால், தேர்தல் ஆணையரைப் பதவி விலகவிட மாட்டார்கள். இந்தக் குழப்பங்கள் கொழும்புபத்திரிகைகளில் முக்கிய இடங்களைப் பிடித்து வருவதால், தேர்தல் முடிவுகளில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்றே நினைக்கத் தோன்றுகிறது.

இதனால், மகிந்தாவுக்கு எந்த இழப்பும் இல்லை. தேர்தல், ஜனநாயகம் என்று எதைப் பேசினாலும் அங்கு நடப்பது ராணுவ ஆட்சிக்குக் கொஞ்சம் கீழே என்று மட்டும்தான் சொல்ல முடியும். எல்லாமே ஒற்றை மனிதரால் தீர்மானிக்கப்படும் நாட்டுக்கு அதுதான் பெயர். ''தமிழர்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லையே, ஏன்?'' என்று மகிந்தாவிடம் கேட்டபோது, ''ஏன் என்று எனக்கும் தெரியவில்லை'' என்று அப்பாவி முகத்துடன் பதிலளித்திருக்கிறார். தேர்தல் நாளன்று அதிகாலையில் யாழ்ப்பாணத்தில் மட்டும் 13 இடங்களில் குண்டுகள் வெடித்தன. செல் தாக்குதலும் நடந்துள்ளது. பொதுமக்களுக்குப் பாதிப்பு இல்லை என்றாலும், யார் அதைச் செய்தது என்ற தகவலும் இல்லை. 'தமிழர்கள் வெளியே வந்து வாக்களித்தால், அது ஃபொன்சேகாவுக்குச் சாதகமாகிவிடும் என்பதற்காகவே ஆளுங்கட்சி இதைச் செய் தது' என்று தகவல் பரவியது. அங்கு ராணுவம் நினைத் தால் எதையும் செய்யலாம், தட்டிக்கேட்க யாருமில்லை என்பதுதான் இதன் மூலம் தெரிகிறது.

கடந்த முறை தமிழர்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்தபோது, 'சிங்கள தேசம் தனக்கான ஜனாதிபதியைத் தானே தேர்ந்தெடுத்துக்கொள்ள தேர்தலை நடத்துகிறது. இதில் தமிழர்களுக்கு என்ன வந்தது?' என்று பதில் சொல்லப்பட்டது. இன்றைய முடிவுகளும் அதைத்தான் காட்டுகின்றன. முன்பாவது தமிழர்களின் வாக்குகளையும் வாங்கி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலை இருந்தது. இப்போது அதற்கு அவசியம் இல்லாமல் சிங்களவர் வாக்குகள் மட்டுமே போதும் என்றாகிவிட்டது.

யோசித்துப்பார்த்தால், தமிழர்களின் வாழ்க்கைக்கான எந்த நம்பிக்கையும் தெரியவில்லை. சூன்யம் சூழ்ந்த வாழ்க்கையே வரிக்கப்பட்டுள்ளது!

1 comments:

Shifan said...

”பெண்பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு பூத்தூவி மங்களகரமாக ஆன்மீகத்தின் பெயரால் அட்டகாசம் பண்ணுவதாக”
இது புதுசி, நாங்களும் கஷ்டோவிடிதான் ஆனா எங்களுக் இந்தவிசயம் இதப் படிச்சபொரகுதான் தெரியும். இது மட்டும் உண்மையாக இருந்தா செல்லிவேலில்ல இன்னங்கொஞ்சம் நாளில டீவில போர தமிழ் நாடகங்களில நடக்கிர கூத்தெல்லாம் எங்களுக்க கஷ்டோவிடில இருந்து நேரடியா பாக்கேலும் போல..

Post a Comment