கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

புத்தளத்திலும் எமது கிராமத்தின் பெயரை பதியவைத்த மௌலவி யஹ்யா ஹஸ்ரத்!

Puttalam Online இணையத்தில் இருந்து.....

நம்மவர்களில்… இன்றியமையாதவர்கள்…!
இப்பகுதி எமது பிரதேசத்தில் வாழும் விஷேட ஆற்றல்மிக்கவர்கள், எமது சமூகத்திற்கு பிரத்தியேகமான சேவைகளை வழங்கிவரும் தனித்துவமானவர்கள் எனக்குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர்களை சமூகத்திற்கு அறிமுகப்படுத்தும் முயற்சியாகும். இம்முயற்சி,பிறர் புகழ்பாடும் நோக்கமல்லாது அல்லாஹ் வழங்கிய ஆற்றல்களையும் அருட்கொடைகளையும் பயன்படுத்தி சமூகப்பணி புரிபவர்களை முன்னுதராணமாக காட்டி, எம்மில் பலரையும் இச்சமூகப் பணிக்காகத் தூண்டுவதாகும்.
இந்த வகையில் மண்ணின் மைந்தர்கள் பகுதியில் இம்முறை சமூகத்தை நெறிப்படுத்தும் பணியில்  ஆலிமாக, பல நூறு உலமாக்களை உருவாகிவிட்ட உஸ்தாத்தாக,  ஊரின் தலைமை  பள்ளிவாசல் இமாமாக கதீப்பாக, ஆசிரியாராக, தன்னை நாடி வரும் பலரின் தனிப்பட்ட குடும்ப பிரச்சனைகளுக்கு மார்கத்தின் ஒளியில்  வழிகாட்டிய ஹசரத்தாக திகழ்ந்து இன்று நோய்வாய்ப்பட்ட நிலையில் இருக்கும்  மௌலவி யஹ்யா ஹஸ்ரத் அவர்களை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்க விரும்புகின்றோம்.
புத்தளத்தின் பிரிக்க முடியாத ஆளுமை மௌலவி யஹ்யா ஹஸ்ரத்!
(ஸாரா)
Yahya Moulaviபுத்தளம் பெரியப்பள்ளி, காஸிமிய்யா அரபுக் கல்லூரி, சாஹிரா தேசியக் கல்லூரி என்றதுமே உடனடியாக நினைவுக்கு வருபவர்களில் ஒருவர்தான் மௌலவி யஹ்யா ஹஸ்ரத். வயது மூப்பின் காரணத்தாலும், நோய்க் காரணத்தாலும் அவர் நான்கு சுவர்களுக்குள் தனது வாழ்வை அல்லாஹ்வின் ஏற்பாட்டில் கழித்து வருகிறார்.
 
கம்பஹா மாவட்டம் கஹோட்டவிட்ட கிராமத்தில் 1944.04.22 இல் பிறந்த அவர், கஹோட்டவிட்ட முஸ்லிம் வித்தியாலயத்தில் 7 ஆம் வகுப்புக்கு 1956 இல் சித்தியடைந்த போது அவரின் தந்தை ஹாமித் லெப்பை முஹம்மது இப்றாஹீம் ஆலிம் (ஜமாலி) காலமானார். 1957 இல் தனது சிறிய தந்தையின் மகன் மர்ஹூம் அன்சாரி ஆசிரியரின் துணையுடன் புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியில் இணைந்து கொண்டார்.
1965 டிசம்பர் 22 இல் அங்கு மௌலவி பட்டம் பெற்றார். அப்போதைய அதிபர் ஹஸ்ரத் மஹ்மூத் ஆலிம் அவர்களின் ஆலோசனைக்கமைய 1968 ஆம் ஆண்டு வரை காஸிமிய்யா அரபுக் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றினார். அக்காலப்பிரிவில் மஸ்ஜிதுல் ஹைராத் பள்ளியில் பேஸ்இமாமாக பணியாற்றியதோடு, முதியோருக்கான குர்ஆன் வகுப்புக்களையும் நடத்தினார்.
 
1968 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் அரபு ஆசிரியராக அரச பாடசாலையில் நியமனம் பெற்ற அவர் 1991 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன்  அரச பாடசாலையில் இருந்து ஓய்வு பெற்றார். இக்காலப்பிரிவில் வல்பொதுவௌ அரசினர்; முஸ்லிம் பாடசாலை, அகட்டுமுள்ள முஸ்லிம் வித்தியாலயம், சிலாபம் நஸ்ரியா முஸ்லிம் மஹாவித்தியாலயம், புத்தளம் சாஹிரா கல்லூரி ஆகியவற்றில் சேவையாற்றியுள்ளார்.
 
இதில் புத்தளம் சாஹிரா கல்லூரியில் 16 வருடங்களும் 11 மாதங்களும் சேவையாற்றியமை குறிப்பிடத்தக்கது. அரச பாடசாலையில் சேவையாற்றிய போது வட்டாரக் கல்வி அதிகாரியின் அனுசரனையுடன் தவணைப் பரீட்சைக்குரிய வினாத்தாள்களைத் தயாரித்து விநியோகிக்கும் பொறுப்பை  ஏற்று திறம்பட நடத்தியுள்ளார்.
 
1974 ஆம் ஆண்டு புத்தளம் சாஹிரா கல்லூரிக்கு இடமாற்றமாகி வந்தது முதல் புத்தளம் பெரியப்பள்ளியில் கதீபாவும், பேஸ்இமாமாகவும் பணியாற்றத் தொடங்கினார். பெரியப்பள்ளியில் ஜமாஅதே இஸ்லாமியின் அனுசரனையுடன் 5 வருடங்களாக குர்ஆன் வகுப்புக்களையும் நடத்தினார். பெரியப்பள்ளியின் அனுசரனையுடன் சிறு பிள்ளைகளுக்காக மாலை நேர குர்ஆன் வகுப்புக்களையும், வாராந்த ஹதீஸ், பிக்ஹு வகுப்புக்களையும் நடத்தினார். முதியோருக்கான அறபு வகுப்புக்களையும் நடத்தினார்.
 
Yahya Mou.
 
புத்தளம் காதி நீதிமன்றத்தில் 2½ வருடங்கள் ஜுரியாக பணியாற்றினார். புத்தளம் ஜம்மியத்துல் உலமாவில் மர்ஹூம் புஆத் மௌலவி அவர்கள் தலைவராக இருந்த காலத்தில் பத்வாக் குழுச் செயலாளராகவும், பெரியப் பள்ளியில் நடை பெற்ற இணக்கச் சபையில் மார்க்க விடயம் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வு கூறும் ஆலேசகராகவும் இருந்துள்ளார்.
இதர  ஜும்ஆப் பள்ளிகளில் வாராந்த குத்பாக்களை நிகழ்த்தியதோடு, எமது ஊரில் பல திருமணங்களையும்  நடத்தி வைத்துள்ளார். காஸிமிய்யா அரபுக் கல்லூரியில் 1966-1968 வரை முழு நேர ஆசிரியராகவும், 1974-1990 வரை பகுதி நேர ஆசிரியராகவும், 1991-2006 வரை முழு நேர ஆசிரியராகவும், உப அதிபராகவும் கடமையாற்றினார்.
 
இத்தகைய மகத்தான சேவைகளை ஆற்றிய மௌலவி யஹ்யா ஹஸ்ரத் உயர்ந்த நற்குணங்களுடன் வாழ்ந்தவர். நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பவர்.
அவருடைய பாடசாலை மாணவர்களும், மத்ரஸா மாணவர்களும் ஏராளம். அதுபோல அவரது சமய.சமூகப் பணிகளினால் பயன் பெற்ற பொதுமக்களும் எண்ணிலடங்கா.
எனவே வாழும் போதே அன்னாருக்காக பிரார்த்திப்போம்! அவருக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமைகளை செய்வோம்!
 
சுருங்கக் கூறின் மௌலவி யஹ்யா ஹஸ்ரத் புத்தளத்தின் பிரிக்க முடியாத ஆளுமையாகும்.!

0 comments:

Post a Comment