கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

மீலாத் விழா ஓர் இஸ்லாமியப் பார்வை

புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது. அவனது அருளும், சாந்தியும், நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தவர்கள், தோழர், தோழியர், இமாம்கள், நல்லடியார்கள், மற்றும் இறை விசுவாசத்தோடு உலகைப்பிரிந்து மண்ணறைகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற முஸ்லிமான சகோதர, சகோதரிகள் அனைவர்மீதும் நிலையாக உண்டாகட்டுமாக!

மதிப்புக்குரிய இஸ்லாமிய சகோதரர்களே! இஸ்லாமிய மாதங்களின் தொடரில் "ரபீவுல் அவ்வல்" மாதம் மூன்றாவது மாதமாக இடம் பெறுகின்றது, இம்மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) பிறந்து, தனது அறுபத்தி மூன்றாவது வயதில் அதே மாதத்திலேயே இவ்வுலகுக்கு விடை கொடுத்தார்கள்.

மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த தினத்தை முன்னிட்டு நமது பிரதேசங்களில் "மௌலித், மற்றும் "திக்ர்" வைபங்கள் பல ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்காக அரசியல் பிரமுகர்கள் முதல் சாதராண பிரஜை வரை அழைக்கப்பட்டு மிக விமர்சையாகக் கொண்டாடுவதை நாம் அறிவோம்.

எனவே இம்மாதத்தில் பக்திப்பரவசத்தோடு மேற்கொள்ளப்படுகின்ற, குறிப்பாக "மீலாத் விழா" விற்கும் நபிகள் நாயகம், அவர்களின் வழி முறைக்கும் இடையில் காணப்படும் தொடர்பு பற்றி "காய்தல், உவர்தல் இன்றி" நடுநிலையுடன் அல்குர்ஆன், அஸ்ஸுன்னா, மற்றும் இஸ்லாமிய வரலாற்றின் அடிப்படையில் ஆய்வு செய்வது காலத்தின் தேவையாக இருக்கின்றது.

மீலாத் கொண்டாட்டம் நபிவழியைச்சார்ந்ததா? இல்லையா? என்பதை முடிவு செய்வதற்கு முன் அல்குர்ஆனிலிருந்தும், நபிகள் நாயகம், அவர்களின் பொன் மொழிகளிலிருந்தும், இஸ்லாத்தைக் கற்றறிந்த இமாம்களின் தீர்ப்பில் இருந்தும் அடிப்படையான சில விதிகளை முன்வைக் கின்றோம். அவைகளுக்கு அமைவாக மீலாத் கொண்டாட்டம் அமையப்பெற்றிருக்கின்றதா? இல்லையா? என்பதை ஒத்துப்பாருங்கள். குழப்பங்கள் அகன்று சத்தியம் மலரும் இன்ஷா அல்லாஹ்"   
மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டுள்ளது:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது இருபத்தி மூன்று வருட நபித்துவக் காலத்தில் கழிவறை ஒழுக்கங்கள் முதல் ஆட்சி முறை வரை தமது தோழர்களுக்கு கற்றுக்கொடுக்காது இந்த உலகைப் பிரியவில்லை என்பதை பின்வரும் நபி மொழி உறுதி செய்கின்றது.

عَنْ سَلْمَانَ قَالَ قِيلَ لَهُ قَدْ عَلَّمَكُمْ نَبِيُّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلَّ شَيْءٍ حَتَّى الْخِرَاءَةَ قَالَ فَقَالَ أَجَلْ لَقَدْ نَهَانَا أَنْ نَسْتَقْبِلَ الْقِبْلَةَ لِغَائِطٍ أَوْ بَوْلٍ أَوْ أَنْ نَسْتَنْجِيَ بِالْيَمِينِ أَوْ أَنْ نَسْتَنْجِيَ بِأَقَلَّ مِنْ ثَلَاثَةِ أَحْجَارٍ أَوْ أَنْ نَسْتَنْجِيَ بِرَجِيعٍ أَوْ بِعَظْمٍ (مسلم/برقم:262)

ஒருவர் ஸல்மான் (ஸல்) அவர்களிடம்: உங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அற்பமான காரிங்களைக் கூட உங்களுக்கு கற்றுத்தந்துள்ளார்களே! என (இழிவாக) க் கேட்ட போது ஆமாம் (உண்மைதான்) நாம் மல, சலம் கழிக்கின்ற போது வலதை உபயோகிக்கக் கூடாது என்றும், மூன்று கற்களை விட குறைவானவற்றில் சுத்தம் செய்யக் கூடாது என்றும், மிருக விட்டையினாலோ, எலும்பினாலோ, சுத்தம் செய்யக் கூடாது என்றும் எமக்கு கற்றுத் தந்துள்ளனர். (அது பற்றி பெருமைப்படுகின்றோம்) என பதிலளித்தார்கள். (ஆதார நூல்: முஸ்லிம்).

இஸ்லாத்தில் எவரும் தமது விருப்பு, வெறுப் புக்களை புகுத்தி விடாத வண்ணம் கழிவறை ஒழுக்கங்களையே கற்றுக் கொடுத்த நபி (ஸல்) அவர்கள் மீலாத் விழா பற்றி தனது தோழர்களுக்குக் கற்றுக் கொடுக்காது மௌனமாக இருந்திருப்பார்களா? அவ்வாறு கற்றுக்கொடுக்கப்பட்டிருக்குமாயின் மனிதர்களால் அசிங்கமாகக் கருதப்படும் கழிவறை ஒழுக்கங்கள் பற்றி அறிவித்த நபித்தோழர்கள் மீலாத் விழா பற்றி அறிவிக்காதிருந்திருப்பார்களா? என சிந்திக்க வேண்டும். அரஃபாத் திடலில் நபித்தோழர்களை ஒன்று சேர்த்து உரையாற்றிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்

ألا هل بلغت
கவனியுங்கள்! எனது தூதுத்துவப்பணியை உங்களுக்கு அறிவித்து விட்டேனா? எனக் கேட்ட போது, "ஆம் அல்லாஹ்வின் தூதரே! என ஒட்டு மொத்த நபித்தோழர்களும் பதில் கூறினர்" (புகாரி).
நபியின் அங்கீகாரமற்ற செயல்கள் நிராகரிக்கப்படும்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வணக்கங்களை அதன் அமைப்பிற்கும், முறைக்கும் மாற்றமாகச் செய்வது மார்க்கம் அங்கீகரிக்காத செயலாகும். இதனை விளக்கும் பல நபி மொழிகள் ஹதீஸ் கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا يَصُومَنَّ أَحَدُكُمْ يَوْمَ الْجُمُعَةِ إِلَّا يَوْمًا قَبْلَهُ أَوْ بَعْدَهُ (بخاري/1985)

ஜும்ஆத் தினத்திற்கு முன்னுள்ள நாளில், அல்லது அதற்கு பின்னுள்ள நாளில் நோன்பு நோற்காது அத்தினத்தில் நோன்பு நோற்க வேண்டாம். என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை தான் செவிமடுத்த தாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதார நூல்: புகாரி. ஹதீஸ் இல: 1985).

عَنْ جُوَيْرِيَةَ بِنْتِ الْحَارِثِ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَيْهَا يَوْمَ الْجُمُعَةِ وَهِيَ صَائِمَةٌ فَقَالَ أَصُمْتِ أَمْسِ قَالَتْ لَا قَالَ تُرِيدِينَ أَنْ تَصُومِي غَدًا قَالَتْ لَا قَالَ فَأَفْطِرِي وَقَالَ حَمَّادُ بْنُ الْجَعْدِ سَمِعَ قَتَادَةَ حَدَّثَنِي أَبُو أَيُّوبَ أَنَّ جُوَيْرِيَةَ حَدَّثَتْهُ فَأَمَرَهَا فَأَفْطَرَتْ (بخاري/1986)

இதற்கு மாற்றமாக நபியின் மனைவியரில் ஒருவரான அன்னை ஜுவைரியா (ரழி) அவர்கள் நோன்பு நோற்றிருந்த நிலையில் அவர்களின் (வீட்டில்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நுழைந்தார்கள். நேற்றய தினம் நோன்பு நோற்றிருந்தாயா? என்று கேட்க இல்லை. எனப்பதில் கூறினார்கள். நாளை நோன்பு நோற்பாயா? என்றதும் இல்லை. என்றார்கள். அப்படியானால் நோன்பை விட்டு விடு எனக் கூறினார்கள். (புகாரி. 1986). மற்றொரு அறிவிப்பில் "நோன்பை விட்டுவிடும்படி கூறவே அவர்கள் அதனை விட்டுவிட்டார்கள்" என இடம் பெற்றுள்ளது.

நோன்பு வணக்க வழிபாடுகளுடன் தொடர்புடைய கடமை என்பதை நாம் அறிவோம். வெள்ளிக்கிழமை தினத்தை விஷேச தினமாகக் கருதி நோற்கப்பட்ட காரணத்தால் நபி (ஸல்) அவர்கள் அதற்கு அங்கீகாரம் வழங்கவில்லையெனில், நபியின் காலத்தில் இல்லாத ஒரு புதிய கொண்டாட்டத்திற்கு எந்த வகையில் அங்கீகாரம் கிடைக்கும் என சிந்திக்கக் வேண்டும்.

நபியை நேசிப்பதன் அளவுகோல்:
நபியை ஒருவர் நேசிப்பதற்கான அளவு கோலாக அவர்களின் வழி நடப்பதையே அல்குர்ஆனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன் மொழிகளும் எடுத்துக்கூறுகின்றன.

قل إن كنتم تحبون الله فاتبعوني (آل عمران: 31)

"
நீங்கள் அல்லாஹ்வை நேசிப்போராக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள் என (முஹம்மதே) கூறுவீராக! (அத்:3.வச:31). என அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ دَعُونِي مَا تَرَكْتُكُمْ إِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِسُؤَالِهِمْ وَاخْتِلَافِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ فَإِذَا نَهَيْتُكُمْ عَنْ شَيْءٍ فَاجْتَنِبُوهُ وَإِذَا أَمَرْتُكُمْ بِأَمْرٍ فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ. (خ/برقم 7288)

நான் உங்களுக்கு விட்டுச் செல்லும் வழியைப்பற்றி நில்லுங்கள். உங்களுக்கு முன்வாழ்ந்தோர் (பயனற்ற) கேள்விகளாலும், தமது நபிமார்கள் மீது முரண்பட்டுக் கொண்டதாலுமே அழிந்தனர். நான் ஏதாவது ஒரு விஷயத்தை தடுத்தால் அதனை முழுமையாக தடுத்துக் கொள்ளுங்கள். ஏதாவது ஒரு கட்டளை பிறப்பித்தால் அதிலிருந்து முடியுமான அளவு எடுத்து நடவுங்கள் எனக் கூறினார்கள். (ஆதார நூல்: புகாரி. ஹதீஸ் இல: 7288 மேற்படி ஹதீஸின் கருத்தில் அமைந்த பல நபிமொழிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேசிப்பதன் அளவு கோலாக அவர்களின் வழி நடப்பதையே வேண்டி நிற்கின்றன.

நபி (ஸல்) அவர்கள் தனது பிறந்த தினத்தில் எவ்வாறு நடந்து கொண்டார்கள்?
நபி (ஸல்) அவர்கள் பிரதி திங்கள் தோறும் நோன்பு நோற்கும் வழக்குமுடையோராக இருந்தார்கள் அது பற்றி நபித்தோழர்கள் வினவிய போது:

عن أبي قتادة الأنصاري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم الاثنين فقال فيه ولدت وفيه أنزل علي (مسلم)

அந்நாளில் நான் பிறந்தேன், அதில்தான் என் மீது (அல்குர்ஆன்) இறக்கப்பட்டது எனப்பதில் கூறினார்கள். (முஸ்லிம்) . முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் "அந்நாளில் நான் நபியாக அனுப்பப்பட்டேன் எனக் கூறியதாகவும், திர்மிதியில் இடம் பெறும் அறிவிப்பில் "பிரதி வியாழன், திங்கட் கிழமைகளில் அடியார்களின் அமல்கள் அல்லாஹ்விடம் எடுத் துக்காட்டப்படுகின்றன. எனது அமல்கள் நான் நோன்பு நோற்றிருக்கும் நிலையில் அவனிடம் எடுத்துக்காட்டப்பட விரும்புகின்றேன் என மற்றொரு காரணம் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் தனது பிறந்ததினத்தில் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதை அவர்களின் பிறந்த தினத்தை கொண்டாடுவோர் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

திங்கட்கிழமை அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக்காட்டப்படுகின்ற காரணத்தாலும், மேலும் அத்தினத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுள்ளதாலும் நபியைப் போன்று நோன்பு நோற்பது அவர்களை நேசிப்பதற்கான அடையாளமாகும். அவர்கள் தனது பிறந்த நாளைக் கொண்டாடவில்லை என்பதற்கு இந்த ஹதீஸை விட ஆணித்தரமான வேறு சான்று வேண்டியதில்லை. மீலாத் தினத்தை கொண்டாடும் சகோதரர்கள் சிந்திப்பார்களா?

عَنْ أَنَسٍ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ (بخاري/برقم:15)

உங்கள் ஒருவரின் பெற்றோர், அவரது குழந்தை, உலக மக்கள் அனைவரயும் விட உங்களுக்கு நான் நேசமுள்ளவனாக ஆகும்வரை உங்களில் ஒருவர் கூட பூரண விசுவாசியாக முடியாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி.)

நபியை உண்மையாக நேசிப்பதாக வாதிடுவோர் தாங்களே சுயமாக கண்டுபிடித்த புதியவழிகளை கடைப்பிடிப்பதை விட்டுவிட வேண்டுமல்லவா?

நபித்தோழர்களும் மீலாத் விழாவும்:
இரண்டாம் கலீஃபா உமர் (ரலி) அவர்களின் காலத்தில் இஸ்லாமிய ஆண்டை நபியின் பிறந்த நாளில் இருந்து கணிக்காது அவர்களின் "ஹிஜ்ரத்" பயணத்தை கவனத்தில் கொண்டு ஹிஜ்ரி ஆண்டை நிர்ணயம் செய்த நிகழ்வும், நபித்தோழர்களில் காலத்தில் மீலாத் தின கொண்டாட்டங்கள் இடம் பெறாததும், அவர்கள் மத்தியில் மீலாத் தினம் முக்கிய இடத்தைப் பெறவில்லை என்பதை உணர்த்தப் போதுமான சான்றாகும்.

ஃபாதிமய்யாக்கள் என்ற ஷீஆப்பிரிவினரே மௌலிதுகளை உருவாக்கினர்:
மீலாத் தின கொண்டாட்டங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலம் முதல் ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டு வரை இஸ்லாமிய மார்க்கத்தில் இருந்திருக்கவில்லை. ஃபாதிமிய்யாக்கள் (ஃபாதிமா (ரழி) அவர்களின் பரம்பரையில் வந்தவர்கள்.) என தமக்கு பொய் நாமம் சூட்டிக் கொண்ட "பனுஉபைத்" கூட்டத்தினர் பக்தாதிலுள்ள அப்பாஸியர் ஆட்சியை எதிர்த்து எகிப்தில் கிளர்ச்சி செய்து, அங்கு ஆட்சியைக் கைப்பற்றினர்.

தமது நிர்வாகத்தில் மக்களுக்கு ஏற்படும் அதிருப்தியை சமாளிப்பதற்காகவும், தமதாட்சியை தக்கவைத்துக் கொள்ளவும், மக்கள் தமக்கெதிராக புரட்சியில் ஈடுபடாமலிருக்கவும், மக்களின் கவனத்தை தம்பக்கம் ஈர்ப்பதற்காகவும் "மவ்லிதுன் நபி" "மவ்லிது அலி" "மவ்லிது ஹஸன்" "மவ்லிது ஹுஸைன்" "மவ்லிது ஃபாத்திமா" "மவ்லிது கலீபதில் ஹாழிர்" (ஷீஆக்களின் நம்பிக்கைப்படி ஹிஜ்ரி 230 ற்குப் பின் பிறந்து 1200 ற்கும் மேற்பட்ட வருடங்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் மஹ்தி) என ஆறு மவ்லித்கள் சுன்னத் வல் ஜமாஅத் முஸ்லிம்களை அக்காலத்தில் கருவறுத்த "அல்முயிஸ் லிதீனில்லா ஹில் உபைதி" என்றழைக்கப்படும் ஆட்சியாளனால் ஹிஜ்ரி 362-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.

இவனே பாங்கின் அமைப்பில் "ஹய்ய அலாகைரில் அமல்" என முதல் முதலில் மாற்றம் செய்தவன் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இவனைத் தொடர்ந்து "அல்முயிஸ்" என அழைக்கப்படும் இவனது மகன் அதனைப் பேணி வந்தான். இவனது ஆதரவாளர்கள் இவனை பிற்காலத்தில் வெளிவரவிருந்த மஹ்தி என்றும் கூறிவந்தனர். இவர்களுக்குப் பின் ஆட்சியில் அமர்ந்த "சுன்னத் வல்ஜமாஅத்" ஆதாரவாளரான "அல் அஃப்ழல் அமீருல்ஜுயூஷ் பின் பத்ர் அல்ஜமாலி" என்பவரால் நடை முறையில் இருந்து வந்த மவ்லித் ஹிஜ்ரி 448 ல் ஒழிக்கப்பட்டது.

பின்னர், "ஷீஆ" ஆதரவாளரான "அல்ஆமிர் பிஆஹ்காமில்லாஹ்" என்பவரால் ஹிஜ்ரி 524 ம் ஆண்டு மீண்டும் புத்துயிரூட்டப்பட்டது. (இதுவே மவ்லிதின் சுருக்கமான வராலாறு).

மேற்படி தகவல்களை ஷாஃபி மத்ஹப் பேரறிஞர் இமாம் அபூஷாமா அல்மக்திஸி (ரஹ்) அவர்கள் தனது "அர்ரவ்ழதைன் ஃபீ அக்பாரித்தவ்லதைன்" என்ற நூலில் பாகம்:1, பக்கம்: 201-ல் தொகுத்து வழங்கியுள்ளார்கள்.

மவ்லித் பற்றிய உண்மை நிலையை விளக்கும் இமாம் தாஜுத்தீன் அல்பாகிஹானி (ரஹ்) அவர்கள்:

لا أعلم لهذا المولد أصلا في كتاب، ولا سنة، ولا ينقل عمله عن أحد من علماء الأمة الذين هم القدوة في الدين المتمسكون بآثار المتقدمين بل هو بدعة أحدثها البطالون، وشهوة نفسى اعتنى بها الأكالون. انظر : المورد في عمل المولد للفاكهاني صفحة: 20-21 أو الحاوي للفتاوى: (1/189)

இந்த மவ்லிதிற்கு அல்குர்ஆனிலோ, நபியின் வழிமுறையிலோ, எவ்வித அடிப்படையையும் நான் அறியேன். மேலும் முன்னோர்கள் வழி நடக்கும் மார்க்கத்தின் முன்மாதிரிகளான, இந்த சமூத்தின் அறிஞர்கள் அதைச் செய்ததற்கான எந்த ஒரு செய்தியும் இடம் பெறவில்லை. வீணர்களும், (நபுஸ்) மோகம் பிடித்தவர்களுமே அதனை புதிதாக உருவாக்கினர். உணவில் அதிக நாட்டம் உடையோர் அதற்கு முன்னுரிமை வழங்கி, கட்டிக் காத்தனர், எனக் குறிப்பிட்டுள்ளார்கள். பார்க்க: அல்மவ்ரித் ஃபீ அமலில் மவ்லித். பக்: 20- 21). அல்லது(அல்ஹாவி: பாகம்:1, பக்கம்:189).

அரபுப் பாடல்கள் வணக்கமாகுமா?
மௌலித் ஓர் அரபுப்பாடலாகும். அதனை வணக்கமாகக்கருதிப் பாடுவதற்கு முன்னர் அரபுப்பாடல்கள் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாட்டினை ஒருவர் அறிந்து கொள்வதால் "மௌலித்" எந்த தரத்தில் மதிக்கப்பட வேண்டும் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

அல்குர்ஆன் கவிஞர்கள் பற்றிக்குறிப்பிடும் போது:

وَالْشُّعَرَاءُ يَتَّبِعُهُمُ الْغَاوُوْنَ.ألَمْ تَرَ أنَّهُمْ فِيْ كُلِّ وَادٍ يَّهِيْمُوْنَ وَأنَّهُمْ يَقُوْلُوْنَ مَا لاَ يَفْعَلُوْنَ. (اَلشُّعَرَاءُ:224-226)

கவிஞர்களை வீணர்களே பின்பற்றுவார்கள். அவர்கள் ஒவ்வோரு பள்ளத்தாக்கிலும் தட்டழிந்து திரிவதை (முஹம்மதே) நீர் பார்க்கவில்லiயா? மேலும் அவர்கள் செய்யாததையே சொல்கின்றனர். (அஷ்ஷுரா: வச: 224 -226) . என்றும்,
 
وَمَا عَلَّمْنَاهُ الْشِّعْرَ وَمَا يَنْبَغِيْ لَهُ.(يس: 69 )

நாம் கவிதையை அவருக்குக் (முஹம்மதுக்கு) கற்றுக் கொடுக்கவுமில்லை, அது அவருக்கு அவசியமும் இல்லை. (யாசீன்: 69) என்றும் குறிப்பிடுகின்றது.

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ بَيْنَا نَحْنُ نَسِيرُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْعَرْجِ إِذْ عَرَضَ شَاعِرٌ يُنْشِدُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ خُذُوا الشَّيْطَانَ أَوْ أَمْسِكُوا الشَّيْطَانَ لَأَنْ يَمْتَلِئَ جَوْفُ رَجُلٍ قَيْحًا خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَمْتَلِئَ شِعْرًا (مسلم/2267)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் "அர்ஜ்" என்ற இடத்தில் நாம் இருந்து கொண்டிருந்த போது, ஒரு கவிஞர் கவிபாட ஆரம்பித்தார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த ஷைய்த்தானைப் பிடித்து நிறுத்துங்கள். எனக் கூறி விட்டு, உங்களில் ஒருவரின் வயிறு கவியால் நிரம்பி இருப்பதை விட சீழால் நிரம்பிக்காணப்படுவது மேலானது எனக் கூறினார்கள். (ஆதார நூல்: முஸ்லிம்). இதன் மூலம் கவிதைக்கும் இஸ்லாமிய வணக்க முறைகளுக்கும் இடையில் காணப்படும் உறவைப்புரிந்து கொள்ளலாம்.

ஐயமும் தெளிவும்:
ஐயம்: ஹஸ்ஸான் பின் தாபித் (ரலி) அவர்களிடம் இணைவப்பாளர்களை எதிர்த்துக் கவிபாட அனுமதித்தது மவ்லித் பாடலுக்கான அங்கீகாரம்தானே!

தெளிவு: குரைஷியர், முஷ்ரிகீன்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கவிதையால் நிந்திப்போராக இருந்தனர். அவர்களுக்கு கவிதையால் பதில் அளிக்க முடியாத நபி (ஸல்) அவர்கள் கவித்துறையில் சிறப்பு தேற்சி பெற்றிருந்த ஹஸ்ஸான் (ரலி) அவர்களை கவிதையிலேயே அவர்களுக்கு பதிலடி கொடுக்கும்படி பணித்தார்கள். அதனால் அவர்கள் நபியை உயர்த்தியும், எதிரிகளைத் இகழ்ந்தும் கவி பாடினார்கள்.

நபியின் அங்கீகாரம் பெற்ற ஹஸ்ஸான் (ரலி) அவர்களின் கவியை நாம் பிரதி வெள்ளிக் கிழமைகளில் "அல்கஹ்ஃப்" அத்தியாயத்தை ஓதி வருவது போன்று நபித்தோழர்கள் வருடா வருடம் ரபீவுல் அவ்வல் மாதத்தில் மஸ்ஜிதுன் நபவியில், அல்லது மதீனாவிலுள்ள வீடுகளில் ஓதி வந்தனரா? என்றால் இல்லை.

நபி (ஸல்) அவர்களை உலகப்பயங்கரவாதத்திற்கு வித்திட்டவர் என அமெரிக்காவில் உள்ள ஒருவன் நவீன காலத்தில் காழ்ப்புணர்வுடன் சாடிப் பேசியதை நீங்கள் அறிவீர்கள். இந்நிலையில் இவன் போன்ற ஷைய்த்தான்களை எதிர்த்தும், நமது நபியை உயர்த்தியும் பாடுவதையும், எழுதுவதையுமே இந்த ஹதீஸ் விளக்குகின்றது.

அது ஒரு புறமிருக்க "சுன்னத் வல் ஜமாஅத்" அறிஞர்கள் தாம் இந்த மவ்லிதை உருவாக்கினார்களா? என்றால் இல்லை. நபித்தோழர்களின் விரோதிகளான "ஷீஆ"க்களாளே இதனை உருவாக்கினர்.

ஷீஆக்களின் நம்பிக்கைகள் சில:
(1)
நபிகள் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு அலி (ரலி) அவர்களும், அவர்களின் பரம்பரையில் வந்த (ஷீஆக்களின் நம்பிக்கைப்படி) பன்னிரெண்டு இமாம்களுமே ஆட்சி செய்யத் தகுதியானோர் என்பதும்.

(2)
அல்குர்ஆனில் அலி (ரலி) அவர்களின் ஆட்சியை அறிவுறுத்தும் வகையில் அமைந்த "அல்விலாயா" என்ற அத்தியாயத்தை? குர்ஆனை ஒன்று சேர்த்த போது நபித்தோழர்கள் -குறிப்பாக- அபூபகர் (ரலி), உமர் (ரலி) ஆகியோர் திட்டமிட்டே இருட்டடிப்புச் செய்துள்ளனர் என்பதும்.

(3)
பன்னிரெண்டு சொச்சம் நபித்தோழர்களைத் தவிர ஏனெய அனைவர்களும் இஸ்லாத்தை விட்டும் மதம் மாறினர். என்பதும்.

(4)
அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் தகாத நடத்தையுடைய பெண் என்பதும்.

(5)
நபியின் மரணத்தின் பின்னால் அலி (ரலி) அவர்களுக்கு கைமாற வேண்டிய ஆட்சியை அபூபகர் (ரலி) உமர் (ரலி) ஆகியோர் தமது தந்திர புத்தியால் தமதாக்கிக் கொண்டனர் என்பதும்.

(6)
நபித்தோழர்களும், அவர்கள் வழிவந்த இமாம்களும், நபிவழி நடக்கும் சுன்னத் வல்ஜமாஅத்தினரும், காபிர்கள் என்பதும். ஷீஆக்களின் நம்பிக்கை கோட்பாட்டு சாக்கடையில் இருந்து சில சொட்டுக்களாகும்.

இதன் பின்னரும் மவ்லித் ஓதப்பிரியப்படுவோர் ஷீஆக்களை மறைமுகமாக ஆதிப்போரா? என சந்தேகிக்க வேண்டியுள்ளது.
 


ஐயம்: மவ்லித் நபியின் காலத்தில் இல்லாததாக இருந்தாலும் சுன்னத்தான ஒன்றாகாதா?

தெளிவு: முஸ்லிம் உலகில் அங்கீகரிக்கப்பட்ட இஸ்லாமிய அறிஞர்களுள் ஒருவரான இமாம் "இப்னுஸ்ஸலாஹ்" (ரஹ்) அவர்கள் சுன்னா(நபியின் வழி முறையை) ஹதீஸ்களின் துணை கொண்டு இரண்டாக வகுக்கின்றார்கள்.

(1)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்து காட்டியவை. உதாரணமாக: ஸிவாக் (மிஸ்வாக்) செய்தல், தர்மம் கொடுத்தல், உண்ணுதல், பருகுதல், சிகை அலங்காரம் செய்தல் போன்றவை.

(2)
செய்யாது விட்டவை.

உதாரணமாக: ஐங்காலத் தொழுகை முடிந்ததும் கூட்டாகப்பிரார்த்திக்காது தனிமையாக திக்ர் செய்தமை, பெருநாள் தொழுகைகளை பாங்கு, இகாமத் இன்றி நடாத்தியமை, பாங்கின் முன் ஸலவாத் இன்றி பாங்கைக் கற்றுத்தந்தமை போன்றவற்றைக் குறிப்பிட முடியும். (ஆதார நூல்: ஸியானது ஸஹீஹ் முஸ்லிம். பக்கம்: 2-5)

அடுத்ததாக நபியின் காலத்தில் இல்லாத ஒரு வழி முறையை தொழுகை, மற்றும் இதர வணக்கங்கள் போலாக்கி ஓதி வருவதை, கொண்டாடுவதை உலகில் அங்கீகரித்தவர்கள் யார்? நபித்தோழர்கள் முதல் அவர்களின் வழி வந்த எந்த இமாம்மும் அதனை அங்கீகரிக்கவில்லையே! மவ்லிதைப் பாடுவோர் அறிவால் விளக்கத்தால் முன்னோர்களான நபித்தோழர்கள், இமாம்களை விடவும்சிறந்தவர்களா? இதனால்தான் இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள்:

وما لم يكن يومئذ دينا فلا يكون اليوم دينا ( الاعتصام للشاطبي )

அந்தக்காலத்தில் மார்க்கமாக இல்லாமல் இருந்தது இந்தக்காலத்திலும் மார்க்கமாக இருக்க முடியாது. எனக் கூறினார்கள். (அல் இஃதிஸாம்).

அன்பான அழைப்பு:

மவ்லிதை ஓதி, மீலாத் விழா நடத்தும் சகோதரர்களே! முதலாவதாக உங்கள் நடைமுறையால் நபி (ஸல்) அவர்களை நேசியுங்கள். எப்படித் தொழுதார்கள்? எவ்வாறு திருமணம் செய்தார்கள்? அல்லது எப்படி திருமணம் செய்யச் சொன்னார்கள்? எவ்வாறு ஆடை அணியச் சொன்னார்கள்? எவ்வாறு இல்லற வாழ்வில் ஈடுபடும்படி கூறினார்கள்.? குழந்தைகளை எவ்வாறு வளர்த்தார்கள்? அண்டை அயலவர்கள், ஏழைகள் விருந்தினர்கள், எதிரிகள், குழந்தைகள், மனைவியர் ஆகியோருடன் எவ்வாறு நடந்து கொண்டார்கள்? தாடி எவ்வாறு வளர்த்தார்கள்? மீசை எவ்வாறு வைத்திருந்தார்கள்? எவ்வாறு உறங்கினார்கள்? உணவருந்தினார்கள்? நீர் பருகினார்கள்? காலை, மாலையில் என்ன ஃதிக்ர்" பிரார்த்தனை ஓதினார்கள். என்பன போன்ற நூற்றுக்கணக்கான நபியின் உண்ணத நடைமுறையை உங்கள் அன்றாட வாழ்வில் கடைப்பிடியுங்கள். அப்படி செய்தால், உங்கள் வாழ்வில் நடக்கும் பெரிய மீலாத் விழா வேறொன்றுமில்லை.

2 comments:

ALI said...

kahatowita yilum 'Thaw' Naaikalin wishamam thalai wiritthu aduthey. Iwanukalukku azhiwu weku thooratthil illai.

Unknown said...

ithai sonnal avn wahabi inraya lk muslim galil pure muslim howmany enividalam biduhath elam naragil irhai ulama sabai ninaithal adtha nimdam nirthalam mufthigal allahviku payapada vilaya

Post a Comment