கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

'ஐ.தே.க.வில் போட்டியிட்டால் கொலை செய்யப்படுவாய்..":முஜிபுருக்கு கொலை அச்சுறுத்தல்


ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை வேட்பாளர் முஜிபுர் ரஹ்மானுக்கு தொலைபேசி ஊடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
 
இன்று வெள்ளிக்கிழமை  இரவு 8.30 மணியளவிலேயே தொலைபேசியூடாக சிங்கள மொழியில் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாக மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் செயற்பட கூடாது என்றும் அவ்வாறு செயற்பட்டால் படுகொலை செய்யப்படுவதாகவும் மறுமுனையிலிருந்து சிங்கள மொழியில் பேசிய இனந்தெரியாத நபர் அச்சுறுத்தலும் மிரட்டலும் விடுக்கப்பட்டதாக முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். இதேவேளை கடுமையான கெட்டவார்த்தைகளிலும் திட்டிதீர்த்த மேற்படி நபர் உடனடியாக அழைப்பை துண்டித்ததாகவும் மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டில் குறிப்பிட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
 
இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
 
மேல் மாகாண சபை தேர்தலுக்கான பிரசார பணிகளை முன்னெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கட்சி முக்கியஸ்தர்களுடன் மாளிகாவத்தை அலுவலகத்தில் கலந்தாலோசனையொன்றில் ஈடுபட்டுக்கொண்டிருந்தேன். அந்த சந்தர்ப்பத்தில் அநாமதேய தொலைபேசிகளிலிருந்து எனது கையடக்க தொலைபேசிக்கு அழைப்பொன்று வந்தது.
 
அழைப்பையேற்று பேசிய போது மறுமுனையில் இருந்து பேசியவர் சிங்கள மொழியில் பேசினார். மந்திரியாக பேசுகிறீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு ஆம் என்றேன். அப்படியானால் நீங்கள் ஐக்கிய தேசியக் கட்சியிலா போட்டியிடுகின்றீர்கள் என்றும் கேட்கப்பட்டது. அதற்கும் ஆம் என பதிலளித்தேன். பின்னர் வேட்பாளர் இலக்கம் கிடைக்கப்பெற்று விட்டதா? உங்களுடைய இலக்கம் என அந்த நபரிடமிருந்து கேள்வி வந்தது. இதற்கு பதிலளித்த நான் இலக்கம் கிடைக்கப்பெறவில்லை எனவும் திங்கட் கிழமை பின்னரே அதுபற்றி தெரியவரும் என்றும் கூறினேன். இதனை கேட்டுக்கொண்ட அவர் உடனடியாகவே சிங்கள மொழியில் கெட்ட வார்த்தைகளை கூறி திட்டியதுடன் ஐக்கிய தேசியக் கட்சியில் நீ போட்டியிடக் கூடாது என்றும் அத்துடன் தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபடக்கூடாது என்றும் அவ்வாறு ஈடுபட்டால் நீ படுகொலை செய்யப்படுவாய் என்றும் அவர் கூறி தொடர்பையும் துண்டித்துக்கொண்டார்.
 
இதுதொடர்பில் மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருக்கின்றேன். எனது முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட பொலிஸ் அதிகாரிகள் வரும் திங்கட்கிழமை இவ்விடயத்தை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதாக உறுதியளித்துள்ளனர் என்றார்.
 
virakesari

0 comments:

Post a Comment