மௌலானா மௌதூதியின் (ரஹ் ) ஜமாதே இஸ்லாமியும் , இன்றைய இலங்கை 'நியோ இஸ்லாமியும்' !!!
“இவர்கள் இஸ்லாத்தின் அரசியல் அகீதா பற்றி பேசுகிறார்கள். பின்னர் தேசிய ஜனநாயகம் பற்றி பேசுகின்றனர். ஒன்று அல்லாஹ்விற்கு விசுவாசமாக இருக்க வேண்டும். அல்லது குப்ரிய அரசிற்கு விசுவாசமாக இருக்க வேண்டும். தங்கள் இருப்பை பேணவும், தங்கள் தூய தஃவாவை பேணவும் இரண்டையும் செய்ய முற்படுவது மாபெரும் நயவஞ்சக அரசியலாகும்”
தமது முஅஸ்கர்களிலும், இஜ்திமாக்களிலும் நேற்று “இகாமதுத் தீன்” என்றம், “இலாஹியத்” என்றும், “சட்டம் இயற்றும் அதிகாரம்” என்றும் முழங்கியவர்கள் இன்று தேசிய ஜனநாயக ஒழுங்கியல்கள் பற்றி சித்தாந்தம் பேசுகிறார்கள். இவர்களது புத்தக சாலையில் மௌலான மௌதூதி எழுதிய “ஜிஹாத் பீஸபீலில்லாஹ்”, “ஜிஹாத் ஏன் எதற்கு” என்ற புத்தகங்களை விற்றவர்கள் தான் இன்று தேசிய ஜனநாயகம் பற்றி எழுதுகிறார்கள். முரண்பாடுகளின் மொத்த வடிவமாக மாறி நிற்கிறது சத்தியப்பாதையில் இலட்சிய பயணம் செல்ல முற்றபட்ட இஸ்லாமிய இயக்கம். இன்று தாகூத்தோடு அதன் வாழ்வியலோடு சமரசம் செய்து, தேசிய சகவாழ்வு என்ற சரணடைவில் தான் மீட்சி உண்டு ; என சொல்கிறார்கள் . அவ்வாறு சொல்வது சாதாரண ஒரு பாமர முஸ்லீம் அல்ல . இஸ்லாமிய அரசியலை பேசிய ஒரு இஸ்லாமிய இயக்கம் !! இவர்கள் குப்ரை திருப்திப்படுத்துவதில் அஹ்லாகை வரைவிலக்கணப் படுத்துகிறார்கள் . ஒரு தெளிவான ஜாஹிலீயத்துக்கு இஸ்லாமிய சாயம் பூசி முஸ்லிம் உம்மத்தை ஏமாற்றுகிறார்கள் .
இலங்கை ஜமாதே இஸ்லாமியின் மாத இதழான 'அல் ஹசனாத்தின் 'பெப்ரவரி வெளியீடு பலத்த அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது . அது முழுக்க முழுக்க குப்ரிய அரசியலான தேசியத்தையும் அதன் கொடியையும் அதன்மீதான அதீத பற்றையும் கட்டி பறக்க விடப்பட்ட ஒரு வெளியீடாக இருந்தது . இந்த தேசியம் எனும் ஏமாற்று இலங்கையின் முஸ்லீம்கள் அல்லாத மட்டங்களிலேயே பலத்த கேள்விகளையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தி இருக்கும் இன்றைய நிலையில் இவர்களது செயல் நாய் வாலை நிமிர்த்தும் தரத்தில் அமைந்துள்ளது .(இன்னொருபுறம் இலங்கையில் முஸ்லீம்கள் வழிவாராக கடைப்பிடிக்காத ஒரு விடயத்தை அனாவசிய அடையாளப்படுத்தல் மூலம் பிரித்துக் காட்ட எத்தனிக்கிறார்கள் !! அதன் முடிவு காலத்தால் ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயப்படுத்தப் படலாம் . அல்லாது விடின் குற்றம் செய்யாத நிலையிலும் தேசத் துரோகி என்ற கொடிய பார்வை அவன் மீது பதிக்கப்படலாம் . இப்படி ஒரு வடிவம் தேவையா !?)
நிகழ்கால குப்ரிய மனித அடிமைத்துவ பொறிமுறை அரசியலின் எல்லைப்படுதப்பட்ட வடிவமே இந்த தேசியம் எனும் விடயமாகும் .அது குறுந் தேசியம் மற்றும் அதற்குள் பற்பல முரண்பாடுகள் போன்ற சாபக்கேட்டை சுமந்த அரசியல் வடிவமாகும் . இங்கு பெரும்பான்மை என்ற சண்டித்தனமிக்க எஜமானனை அண்டி வாழும் ஜனநாயகத்தை சுற்றியே சகல விடயங்களும் அமைந்திருக்கும் என்பது அனுபவ பூர்வ உண்மை . இப்படி சமூக அநீதி ஒரு உயர்ந்த விடயமாக போற்றப்படும் ஒரு அகீதா தரத்தில் இருந்து சத்தியம்,நன்மை என்பன எவ்வாறு தோற்றம் பெற முடியும்!?
சரி நடப்பு தேசம் ,தேசியம் மற்றும் அதுசார் அரசியல் பற்றி ஜமாதே இஸ்லாமி அறியாமலா இதை பேசியது !? இந்தக் கேள்வி வழி நடப்பு ஆதிக்க சித்தாந்தம் தொடர்பில் ஜமாதே இஸ்லாமியின் கருத்து என்ன என்பதே ஆகும் !? இப்போது சொல்வது சரியாக இருந்தால் நேற்று இவர்கள் பேசிய இகாமதுத் தீன் ,தீனே இலாஹியத் ,ஹாக்கீமியத் போன்ற விடயங்களின் அர்த்தம் தான் என்ன !? சரி இதெல்லாம் ஒரு ஹிக்மத் என வைத்துக் கொண்டால் ,இந்த ஹிக்மத்தை செய்வதற்கான சுன்னா தான் என்ன !?
இஸ்லாத்தின் போராட்டம் இப்படித்தான் அமையவேண்டும் என்பதை சிறுபான்மை நிலையிலும் ,பெரும்பான்மை நிலையிலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) காட்டித் தரவில்லையா !? அல்லது இஸ்லாம் காட்டித் தந்த சுன்னாவழி அரசியல் போராட்டம் காலம் கடந்த ஒன்றா !? அப்படியானால சோக்கிரடீஸ் ,தொடங்கி ஆபிரகாம்லிங்கனை ஊடறுத்து இன்றைய நவீன தாகூத்கள் வரை நவீன அரசியளுக்கான நபிமார்களாக போய்விடுவார்கள் !!!
இவர்கள் உண்மையில் பேசி நிற்பது 'நியோ இஸ்லாம்' என்பதில் சந்தேகம் இல்லை .இதன் முடிவிடம் இணைவைப்போடு கூடிய நூதனம் என்பதில் சந்தேகம் இல்லை .குப்ரை அனுசரிப்பதில் வாழ்வுள்ளது என்பதற்கான எந்த ஒரு வஹியின் ஆதாரமும் இல்லவே இல்லை . அல்குர் ஆன் காட்டித் தராத ஒரு அரசியலை ,வாழ்வை "நமதலை நினதடி மேல் வைத்தோமே நமதுயிரே தாயே" என வழிபடும் தேசிய தெய்வமும் ! ஜனநாயக மார்க்கமும் ! கற்றுத் தருகிறதா !? இப்படி இஸ்லாமிய அகீதாவை முட்டிமோதும் ஒரு தவ்வாவை ஒரு இஸ்லாமிய இயக்கம் செய்வது ஆச்சரியமே !
தகூத்தியம் செங்கம்பளம் விரித்து வரவேற்கும் இத்தகு முரண்பாடு பிடித்த இலக்கையா மௌலானா மௌதூதி (ரஹ் ) கற்றுத் தந்தார் !? என்பதை புரிந்து கொள்ள மீண்டும் ஒரு தடவை 'இதுதான் இஸ்லாம்' நூலையும் , "கொத்துபா பேருரை ' நூலையும் படிப்பது நல்லது .அப்படியும் அவர் கூறிய இலக்கை புரியா விட்டால் ... "முஸ்லிமே விழித்து எழு ! இங்கு சரணடைவு அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா ! இஸ்லாத்தை ஓரம் கட்டிய இனிய வாழ்வுக்கான அழைப்பு !! என ஒரு தேசிய முன்னணி ஆக தம்மை அடையாளப்படுத்தட்டும் . அதற்கும் அல்லாஹு அக்பர் சொல்ல ஒரு முரீத் கூட்டம் இருக்கவே இருக்கிறது !!!
கந்தக்களம்
0 comments:
Post a Comment