இரவு நித்திரைக்குச் சென்ற இளம்யுவதி காலையில் நீலநிறமாகி சடலமாக மீட்பு
இரவு நித்திரைக்குச் சென்ற மகள் மறுநாள் காலையில் எழும்பவில்லை. உடல் முழுவதும் நீல நிறமான நிலையில் உயிரிழந்து காணப்பட்டதாக அவரது தாயார் தெரிவித்தார். இச்சம்பவம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிளூரில் 27-02-2014 வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;
புதன்கிழமை இரவு நித்திரைக்குச் சென்ற மாதுமி கங்காதரன் என்ற 22 வயது யுவதி அதிகாலை நான்கு மணியளவில் சிறுநீர் கழிப்பதற்காக வெளியில் சென்று மீண்டும் நித்திரை செய்துள்ளார். காலை ஏழு மணியாகியும் இவர் எழும்பாததால் அவரின் தாயார் அறைக்குச் சென்று பார்த்த போது அவரது உடம்பு முழுவதும் நீல நிறமாக எந்தவித உணர்வும் அற்ற நிலையில் காணப்பட்டது. உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதாரவைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போதும் மகள் இறந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சர் குணசிங்கம் சுகுணனிடம் கேட்டபோது ;
யுவதியைக் கொண்டு வரும் போதே அவர் உயிரிழந்து காணப்பட்டதாகவும் விசத்தினால் இம் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பிரேதப் பரிசோதனையின் பின்னே அதனை உறுதிப்படுத்திக் கூற முடியும் எனவும் தெரிவித்தார்.
இந்த யுவதிக்கு களனி பல்கலைக்கழகத்திற்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும் உயர் கல்வியைத் தொடர்வதற்காக தயாரான நிலையில் இருந்தவர் எனவும் குடும்பத்தவர் தெரிவித்தனர். சடலம் பிரேதப் பரிசோதனைக்காக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
jaffnamuslim
0 comments:
Post a Comment