கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

பீ.பீ.எஸ். இன் 9 ஆம் திகதி சம்பவம் குறித்து வெளியான செய்திகள்!


பொதுபல சேனா கடும்போக்கு பௌத்த அமைப்பு, கடந்த 9 ஆம் திகதி நிப்பொன் ஹோட்டலில் நடைபெற்ற ஜாதிக பலசேனாவின் ஊடகவியலாளர் சந்திப்பில் பலாத்காரமாக நுழைந்து மேற்கொண்ட நாஷகார நடவடிக்கைகள் குறித்து பல்வேறு ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தன. தமிழ் இணைத்தளங்கள் சிலவற்றில் அவ்வேளையிலேயே, வெளியான முக்கிய சில செய்திகளை அவ்வாறே வாசகர்களின் தேவை கருதி ஒரே கண்ணோட்டத்தில் இங்கே தருகின்றோம். 
பி.பி.சி. தமிழ் சேவை: 
'ஜாதிக பல சேனா மீது பொது பல சேனா தாக்குதல்'!
இலங்கையில் சமூகங்களுக்கு இடையிலான ஒற்றுமையை வலியுறுத்தி தொடங்கப்பட்டுள்ள அமைப்பொன்றின் ஊடகவியலாளர் சந்திப்புக்குள் அதிரடியாக நுழைந்த பொது பல சேனா அமைப்பின் பிக்குகள், ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தவிடாமல் தடுத்து தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக காவல்துறையிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜாதிக பல சேனா என்ற பெயரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அமைப்பே கொழும்பில் ஹோட்டல் ஒன்றில் இன்று புதன்கிழமை காலை இந்த ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது.
ஜாதிக பல சேனா அமைப்பைச் சேர்ந்த பௌத்த பிக்கு வட்டரெக்க விஜித்த தேரர், முஸ்லிம் மதபோதகரான மௌலவி ஆர்.எம். நியாஸ் ஆகியோர் மீது பௌத்த கடும்போக்கு அமைப்பான பொது பல சேனாவின் பிக்குகள் தாக்குதல் நடத்தியதாக கொழும்பு கொம்பெனித் தெரு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரமீஸ் பஷீர் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர், ஜாதிக பல சேனா அமைப்பின் முக்கிய ஆவணங்கள் அடங்கிய கோப்புகளையும் பறித்துச் சென்றுவிட்டதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி ரமீஸ் பஷீர் தெரிவித்தார்.
ஜாதிக பல சேனா அமைப்பை நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்த முயன்றபோதே தாம் தடுக்கப்பட்டதாக வட்டரெக்க விஜித்த தேரர் பிபிசியிடம் கூறினார்.
'இலங்கையின் அனைத்து மக்களினதும் சமூக, கலாசார அடையாளங்களையும் மத சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்காக குரல்கொடுப்பது தான் ஜாதிக பல சேனாவின் பிரதான நோக்கம்' என்றார் வட்டரெக்க விஜித்த தேரர்.
ஞானசார தேரர் தலைமையிலான பொது பல சேனா சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான வெறுப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டுவருவதாக கடும் விமர்சனங்கள் உள்ளன
'சமூகங்களுக்கு இடையில் அச்சமும் சந்தேகமும் வளர்ந்து வருகின்ற இன்றைய சூழ்நிலையை மாற்றி, சமாதானமான சூழலை உருவாக்குவது தான் எங்களின் நோக்கம்' என்றும் அவர் கூறினார்.
ஞானசார தேரர் பதில்
ஜாதிக பல சேனாவின் ஊடகவியலாளர் சந்திப்புக்குள் புகுந்து கலகம் விளைவித்தமை பற்றி பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலபொடஅத்தே ஞானசாரத் தேரரிடமும் பிபிசி விளக்கம் கேட்டது.
'உண்மையை திரிபுபடுத்தி, முஸ்லிம் பள்ளிவாசல்களுக்குச் சென்று நாட்டின் புத்த சாசனத்துக்கு பிக்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும் விதத்தில் போலியான பிரச்சாரங்களை (வட்டரெக்க தேரர்) மேற்கொண்டுவருகிறார்' என்றார் கலபொடஅத்தே ஞானசார தேரர்.
'பல சந்தர்ப்பங்களில் நாங்கள் பொறுத்திருந்து பார்த்தோம். இன்றும் இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் அடிப்படைவாதக் குழுக்களுடன் சேர்ந்துகொண்டு தவறான கருத்துக்களை அவர் பரப்பிவருகிறார். இது தொடர்பாக கேட்டுப்பார்க்கவே நாங்கள் அங்கு சென்றோம்' என்றும் ஞானசார தேரர் கூறினார்.
தாம் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டையும் அவர் நிராகரித்தார்.
கடந்த காலங்களில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மதக்குழுக்களுக்கு எதிராக நடந்த தாக்குதல்கள் தொடர்பிலும் வெறுப்புணர்வுப் பிரச்சாரங்கள் தொடர்பிலும் பொது பல சேனா அமைப்பு மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்துள்ளன.
அப்படியான விமர்சனங்கள் எழுகின்ற போதெல்லாம் அந்தக் குற்றச்சாட்டுக்களை பொது பல சேனா மறுத்தே வருகின்றது.
பொது பல சேனாவின் கடும்போக்கு நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்ற விமர்சனங்களை முஸ்லிம் அமைச்சர்களே கடந்த காலங்களில் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
டெய்லி ஸிலோன் இணையத்தளம்!
 ஜாதிக பல சேனாவின் ஊடகவியலாளர் சந்திப்பில் பொதுபல சேனா குழப்பம்! வீடியோ
ஜாதிக பல சேனா அமைப்பின் செயலாளர் வடரக விஜித்த தேரர் தலைமையிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று காலை 10:30 மணியளவில்  கொழும்பு நிபோன் ஹோடேலில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த  ஹோடேலிற்கு வருகை தந்த பொதுபல சேனா அமைப்பின் செயலளார் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தவிடாமல் தடுத்ததை அடுத்து அங்கு பதற்றமான நிலை உருவானது.
பின்னர் ஊடகவியலார் சந்திப்பை ஏற்பாடு செய்த ஜாதிக பல சேனா அமைப்பின் செயலாளர் வடரக விஜித்த தேரர் பொதுபல சேனா அமைப்பின் செயலளார் கலகொட அத்தே ஞானசார தேரர்  உட்பட அனைத்து பௌத்த மக்களிடத்திலும் மன்னிப்புக்கேட்டார். (ஸ)

அத தெரண இணையம்!
முஸ்லிம்கள் - பௌத்த தேரர் கலந்து கொண்ட ஊடக சந்திப்பில் பிபிஎஸ் குழப்பம்! 
மத நல்லிணக்கம் தொடர்பாக தெளிவுப்படுத்தும் நோக்கில் ஜாதிக பலசேனா என்ற அமைப்பு கொழும்பில் இன்று (09) ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் பதற்றம் நிலவியது. 
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு இடத்திற்கு பொதுபல சேனா அமைப்பினர் சென்றதால் இந்த பதற்றம் ஏற்பட்டது. 
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இஸ்லாமிய பிரதிநிதிகளும் வட்டரெக்க விஜித தேரர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். 
குறித்த இடத்திற்குச் சென்ற பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட அந்த அமைப்பின் பிரதிநிதிகள் ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டமைக்கான காரணத்தை வினவினர். 
இதன்போது வாய்த்தர்க்கம் ஏற்பட்டு பதற்ற நிலை தோன்றியது. 
முஸ்லிம்கள் பிரச்சினையை முஸ்லிம்களே பேச வேண்டும் எனவும் அதற்கு பௌத்த பிக்குவை பயன்படுத்தக் கூடாது எனவும் ஞானசார தேரர் இங்கு தெரிவித்தார். 
நாட்டின் ஆட்சியாளர்கள் மற்றும் நிர்வாகிகள் குறித்தும் அவர் விமர்சித்தார். 
வட்டரெக்க தேரரை திட்டியதுடன், இறுதியில் வட்டரெக்க தேரர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இலங்கையில் உள்ள ஒட்டுமொத்த பௌத்தர்களிடமும் மன்னிப்புக் கோரினார். 
அதன் பின்னர் சிறிய பிக்குகள் அவரிடம் ஆசி பெற்றனர். 
இதனையடுத்து ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்படாமலே அனைவரும் வெளியில் சென்றனர்.

உதயன் இணையம் !
ஊடக சந்திப்பை குழப்பிய பொதுபல சேனா!
 மத நல்லிணக்கம் தொடர்பாக தெளிவுப்படுத்தும் நோக்கில் ஜாதிக பலசேனா என்ற அமைப்பு கொழும்பில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் பொதுபல சேனா அமைப்பினர் அத்துமீறி நுழைந்ததால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொழும்பு கொம்பனித் தெரு பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் வட்டரெக்க விஜித தேரர் உட்பட ஏனைய மதங்களை சேர்ந்த பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு சென்ற பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட அந்த அமைப்பின் பிரதிநிதிகள் தமக்கு ஊடக சந்திப்பில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
இந்த கோரிக்கையை ஜாதிக பலசேனா நிராகரித்ததை தொடர்ந்தும் இரண்டு தரப்பினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற பொலிஸார் இருத் தரப்பினரை சமாதானப்படுத்தியுள்ளனர்.
வட்டரெக்க தேரர், இப்படியான ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்தமை தொடர்பில் மன்னிப்பு கோர வேண்டும் என்று தெரிவித்ததுடன் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்த முஸ்லிம் மதப் பிரதிநிதிகளுடன் பொதுபல சேனா அமைப்பினர் வாக்குவாதப்பட்டதுடன்  அங்கிருந்து வெளியேற்றியும் உள்ளனர். 

0 comments:

Post a Comment