கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

பொதுபலசேனாவின் ஆட்டம் - ''அன்று சொன்னது இன்று பலித்தது''

இன்று காலை 10.30 மணிக்கு (09.04.2014) கொழும்பு கொம்பனிவீதியில் விஜித தேரரின் தலைமையில் ஜாதிக பலசேனா அமைப்பினர் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பினை பொதுபலசேனா அமைப்பினர் சென்று குழப்பம் விளைவித்து குறிப்பிட்ட நிகழ்வை நடைபெறாது தடுத்திருக்கின்றனர். விஜித தேரர் இனிமேல் இவ்வாறான ஒரு நிகழ்வை தான் நடத்தமாட்டேன் என்று மன்னிப்பு வேண்டி பொலிசார் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். 
இது தொடர்பாக பேசுவதற்கு முன்பு இதுவிடத்தில் நான் சில விடயங்களை மீண்டும் நினைவு படுத்த வேண்டிய கட்டாயமிருக்கிறது.  
 
அதாவது இதே விஜித தேரர் பொதுபலசேனாவினால் தாக்கப்பட்டதாகக் கூறி சகல சமையத்தவர்களையும் உள்ளடக்கிய வரலாற்றுத் தீர்மானம் ஒன்றை நிறைவவேற்றுவதற்கு கடந்த மார்ச் மாதம் 24 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு காலிமுகத்திடலுக்கு வெள்ளை உடைகளுடன் வருகைதருமாறு முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்த துண்டுபிரசுரம் தொடர்பாக அம்மாதம் 22 ஆம் திகதி ஜப்னா முஸ்லிம் வெளியிட்டிருந்தது.
 
அதற்கான மாற்றுக் கருத்தினை 'விஜித தேரரின் அழைப்பை முஸ்லிம்கள் ஏற்க வேண்டுமா? கூடாதா? என்ற தலைப்பின் கீழ் விஜித தேரரின் அழைப்பை ஏற்று முஸ்லிம்கள் செல்ல வேண்டாம் அது எமக்கு நாமே அழிவினை ஏற்படுத்தும் செயலாக மாறிவிடும் என்ற கருத்தின் முன்வைத்து மறுத்துரைத்திருந்தேன். 
 
அக்கருத்தினை பலரும் ஏற்று வரவேற்ககூடிய ஒரு கருத்தாக பின்னூட்டம் செய்த போதும் ஓரிருவர் தங்களது பின்னூட்டத்தை கூறும் போது இது சமூகத்தை கோழைத்தனமாக்கும் ஒரு செயலாகும் எனும் கருத்துப்பட தூரநோக்கான சிந்தனையின்றி குறிப்பிட்டிருந்தனர். அத்தகையோர்களுக்கு கொம்பனிவீதியில் நடந்த இன்றைய நிகழ்வு நல்லதொரு முன்னுதாரணமாகவும் மறவாத பாடமாகவும் அமையட்டும் என்பதை வேண்டிக் கொள்கின்றேன்.
 
அன்று எது நடந்துவிடும் என்று விஜித தேரரின் அழைப்பினை மறுத்து முஸ்லிம்களை பொறுமை காக்கும்படி எனது கருத்தினை முன்வைத்திருந்தேனோ அதனை 100 வீதம் முழுமையாக ஆதாரப்படுத்தும் விதமாகவே இன்றைய கொம்பனி வீதி நிகழ்வு நடைபெற்று முடிந்திருக்கிறது என்பதை எனது கருத்துடன் உடன்பட்டவர்கள் யாவரும் அறிவீர்கள்.
 
மேற்படி நிகழ்வினை ஹிரு தொலைக்காட்சி மிக வெளிப்படையாக படம் பிடித்துக்காட்டியிருக்கிறது. அதில் ஞானசார தேரரின் ஆவேசமான வார்த்தைகளும் துவேசமான வார்த்தைகளும் விஜித தேரருக்கு ஏசிய மிகக் கெட்ட வார்த்தைகளும் எம்மை அதிர வைக்கக் கூடியவை.
 
ஒரு அறைக்குள் கூடியதற்கே இந்த கெதி என்றால் காலிமுகத்திடலில் கூடி இருந்திருந்தால் அதன் விளைவு எப்படி இருந்திருக்கும் என்பதை  இப்போது எம்மால் நினைத்துப் பார்க்கும்படி இந்த நிகழ்வு எமக்கு எடுத்துக்காட்டி இருக்கிறது அல்லவா.   
 
விஜித தேரரின் அழைப்பை ஏற்று நாம் பின்னால் சென்றால் இதுதான் நடக்கும் என்று நான் கூறி ஒரு மாதம் கூட முடியவில்ல அதன் ஆரம்பம் இன்று இவ்வாறு உருவெடுத்திருக்கிறது. இத்தோடு இது முடியப்போவதுமில்லை இதைவிடவும் பெரிய பிரச்சினைகளை அவர்கள் கொண்டுவருவார்கள். இது அன்னாசிப் பழம்தான் பின்னுக்குப் பிலாப் பழம் இருக்கிறது சகோதரர்களே.

இன்றைய விஜித தேரரின் ஊடகவியலாளர் சந்திப்பினை குழப்பும் பொருட்டு உள்ளே நுழைந்த பொதுபல சேனா கூறிய சில கருத்துக்கள் வருமாறு.
 
- மேற்படி ஊடகவியலாளர் சந்திப்பு எங்கள் முன் நாங்களும் அமர்ந்து நடக்க வேண்டும். இந்த ஊடகவியலாளர் சந்திப்பினை மேற்கொள்வது முஸ்லிம்களா? தேரர்களா என்பதும் எங்களுக்குத் தெரிய வேண்டும். பொலிஸாரும் எங்களைத் தடுக்க முடியாது 
 
- முஸ்லிம்களின் பிரச்சினைகளை மௌலவிகளை வைத்துதான் முஸ்லிம்கள் தீர்க்க வேண்டும். காவி உடுத்த தேரர்களை வைத்துப் பேசக் கூடாது.
 
முஸ்லிம்களிடம் வாங்கிய காசிக்காக இப்படிச் செய்கிறாயா? என்று விஜித தேரரை கை நீட்டியும் கேட்கிறார்கள்.
 
பார்த்தீர்களா பழி யாரின் மீது கூறப்படுகிறது? இதனை யார் செய்விப்பதாக அரங்கேற்றப்படுகிறது?  இதைத்தான் நான் குறிப்பிட்டிருந்தேன் நமக்காக தேரர்களும் சிங்கள சகோதர மக்களும் எது செய்வதானாலும் அதனை அவர்கள் எங்களைச் சேர்க்காதவாறு தனித்தே முன்னெடுக்க வேண்டும். அவற்றில் நாங்களும் கலந்து கொள்ளாது விலகியே இருக்க வேண்டும்.
 
குறிப்பிட்ட சம்பவ இடத்திற்கு பொதுபல சேனா வந்து இறங்கிய வாகனத்தைப் பார்த்தால் அவர்களின் அரசியல் பின்னணி எவ்வளவு பெரியது என்பதையும் புரிய முடிகிறது. இதுவரை சாதாரண பயணிகள் பயணிக்கும் பேருந்துகளில் மதகுருவுக்கான ஆசனத்தில் சென்ற தேரர்களைத்தான் நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் அமைச்சர்கள் செல்லும் வசதிகள் கொண்ட வாகனத்தில் பொதுபல சேனா பகிரங்கமாக பயணிக்கின்றார்கள் என்றால். பௌத்த வாதத்திற்கான தீவிரவாதத்தின் பின்புல சக்திகளை நாம் குறைத்து மதிப்பிட முடியாது.
 
எனவே இதுபோன்று இன்று இலங்கை முஸ்லிம்கள் மீது ஏற்படுத்தப்பட்டுவரும் அனைத்து அடக்குமுறைகளுக்கும் எதிராக நாம் ஒழுங்கற்ற தீர்மானங்களையும், தீர்க்கமற்ற சிந்தனைச் செயற்பாடுகளையும் கொண்டு நினைத்தபடி களத்தில் இறங்குவது எந்த வெற்றிகளையும் எமக்குத் தந்துவிடாது மாறாக அது அழிவுக்கே வழிவகுக்கும்.
 
எனவே முதலில் முஸ்லிம் எதிர்ப்புணர்வுகளுக்கான செயற்பாடுகளை ஒருமுகப்படுத்த வேண்டும் இவ்வாறான பிரச்சினைகளை பேசித் தீர்ப்பதற்கான ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பு உருவாக்கப்பட்டு அது ஒழுங்குபடுத்தப்பட்ட நடிவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். எமக்குள் ஒருமுகப்படுத்தப்பட்ட சிந்தனைகளும் ஒழுங்குபடுத்தப்பட்ட கருத்துக்களும் இல்லாத நிலையில் நாம் எதனையும் சாதிக்க முடியாது. 
 
இதனை யார் முன்னெடுப்பது மேல் தென் மாகாண சபைத் தேர்தல்களில் இனவாதம் பேசிப் பேசி முஸ்லிம்களின் காவலர்களாக தொண்டை கிழிய கத்திய அரசியல் வாதிகள் எங்கே! இனி அவர்கள் பேசுவதானால் இன்னும் ஒரு தேர்தல்தான் வரவேண்டுமா?  வாக்களித்த விரலில் தடவிய மையும் இன்னும் அழியவில்லை. எங்கள் முன் பெருத்த அழிவு வந்து நிற்கிறது உங்களது பீரங்கிப் பேச்சுகள் எங்கே! வீர வசனங்கள் எங்கே! பேசிய நாவிலாவது ஈரம் இருக்கிறதா? அல்லது அதுவும் நமது சமூகம் போல் வரண்டு கிடக்கிறதா? 
 
(நவாஸ் சௌபி)

0 comments:

Post a Comment