கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

புனித திருக்குர்ஆனை நான் போற்றுகிறேன். அதன் சிங்கள மொழிபெயர்ப்பொன்றை (அமைச்சரிடம் காட்டி) அடிக்கடி வாசித்து வருகிறேன்.

நாட்டில் சமூகங்களுக்கு இடையில் நிலவி வரும் நல்லுறவை சீர்கெடுக்கும் விதத்தில் எந்தவொரு இனவாத அமைப்பு முன்னெடுப்புகளை மேற்கொண்டாலும், சமய, சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கு தொடர்ந்தும் தாம் முயற்சிப்பதாக நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் அமரபுர பீடத்தின் சங்கைக்குரிய மஹாநாயக்கர் அக்கமஹா பண்டித தவுல்தென ஞானிஸ்ஸர தேரரிடம் தெரிவித்தார்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமரபுர பீடத்தின் சங்கைக்குரிய மஹாநாயக்கர் அக்கமஹா பண்டித தவுல்தென ஞானிஸ்ஸர தேரரை நுகேகொடை, பாகொடை வீதி, முதலாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள தியான மண்டபத்தில் அன்னாரது அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (25) முற்பகல் சந்தித்து கலந்துரையாடிய போதே இதனைக் கூறினார்.

நாட்டில் பொதுவாக சிறுபான்மைச் சமூகங்களுக்கும், குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கும் எதிராக சில இனவாதக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் நல்லிணக்கத்தைப் பாதிக்கும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஹக்கீம் மஹாநாயக்க தேரருக்கு விளக்கமளித்தார். இந்த இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகள் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந் நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும், புரிந்துணர்வையும் ஏற்படுத்துவது இலங்கை முஸ்லிம்களின் அதிகபட்ச ஆணையைப் பெற்ற அரசியல் கட்சி என்ற வகையில் தமது கட்சியின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லையென குறிப்பிட்ட அமைச்சர், இந்த நாட்டில் சகல இனத்தவரும் நல்லுறுவை பேணி வாழக் கூடிய பின்புலத்தை உருவாக்குவதன் அவசியம் பற்றிய தமது கருத்துக்களை  பகிர்ந்து கொண்டு, பௌத்த பீடங்களில் மஹாநாயக்கத் தேரர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளும் விதத்தில்,  தாம் பௌத்த சமயத் தலைவர்களை கடந்த சில நாட்களாக சந்தித்து கலந்துரையாடி வருவதாக, அமரபுர நிக்காய மஹாநாயக்க தேரரிடம் தனது தரப்பு நியாயங்களை எடுத்துரைத்ததாகவும் கூறினார்.

பௌத்த சாசனத்தோடு தொடர்புடைய விவகாரங்களில் பாராளுமன்றத்தில் சட்டமாக்கவுள்ள மசோதாக்கள் குறித்தும் அமைச்சர் மஹாநாயக்க தேரரிடம் விபரித்ததோடு, சட்டக் கல்லூரிக்கு மாணவர்களை அனுமதிக்கும் விடயம் தொடர்பாக எழுந்த பிரச்சினைகளைப் பொறுத்தவரை தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் எவ்விதமான உண்மையும் இல்லையென்றும் விளக்கமளித்தார்.

சங்கைக்குரிய மஹாநாயக்கர் அக்கமஹா பண்டித தவுல்தென ஞானிஸ்ஸர தேரர், அமைச்சரிடம் கருத்து தெரிவிக்கையில், புனித திருக்குர்ஆனை தாம் போற்றுவதாகவும், அதன் சிங்கள மொழிபெயர்ப்பொன்றை அமைச்சரிடம் காட்டி அதனைத் தாம் அடிக்கடி வாசித்து வருவதாகவும் கூறினார்.
நாட்டின் சகல இன மக்களும் நல்லுறவை பேணி வாழ வேண்டிய அதே வேளையில், குழப்பத்தை ஏற்படுத்த எவர் முன்வந்த போதிலும் நிலைகுலையாமல் பொறுமையோடு விடயங்களை கையாள வேண்டியதன் அவசியத்தையும் தேரர் வலியுறுத்தினார்.

நீண்டகாலமாக இந் நாட்டு முஸ்லிம்கள் சிங்கள பௌத்த மக்களுடன் நல்லுறவைப் பேணி சுமூகமாக வாழ்ந்து வருவதையும், நாடு சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே அமைச்சர் சீ.எ.எஸ். மரிக்கார், கலாநிதி பதுயுதீன் மஹ்மூத் ஆகியோர் உட்பட ஏனைய முஸ்லிம் அமைச்சர்கள் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பை பற்றியும் மஹாநாயக்க தேரர் குறிப்பிட்டார்.

எந்தவிதமான அடிப்படையும் இல்லாமல் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் மீது குற்றம் சாட்டப்படுவதையும் முஸ்லிம் சமூகத்தின் மீது வீண் பழிகள் சுமத்தப்படுவதையும் ஏனைய அமைச்சர்களும் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன்.
இது நாட்டை அதளபாதாளத்திற்கும், ஆபத்திற்கும்  இட்டுச் செல்லும் குறுகிய இனவாதச் செயல்பாடாகும். இலங்கையில் வசிக்கும் அனைத்துச் சமூகங்களைச் சார்ந்த மக்களையும் இத்தகைய இனவாத கும்பல்களின் அச்சுறுத்தல்களில் இருந்து விடுவிக்க வேண்டும். இதற்காக நாட்டின் ஆட்சித் தலைவரும், அமைச்சர்களும், சமயத் தலைவர்களும் பாடுபட வேண்டும் என்பது எனது பணிவான வேண்டுகோள் ஆகும்.

விஜித தேரரை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தமது அமைச்சில் மறைத்து வைத்திருந்ததாக குற்றம் சாட்டி பொதுபலசேனா அமைப்பினர் அங்கு அத்துமீறி பிரவேசித்தது பற்றி ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோது, பதிலளித்த அமைச்சர் ஹக்கீம் அமைச்சர் ரிஷாத் அவ்வாறு செய்திருப்பாரென தாம் அறவே நம்பவில்லையென்றும், ஆனால் தேரர் ஒருவரோ அல்லது வேறெந்த சாதாரண நபர் ஒருவரோ அச்சத்தின் காரணமாக அபயம் தேடி வந்தால் ஆபத்திலிருந்து தப்புவதற்கு மனிதாபிமான அடிப்படையில் அவ்வாறு தஞ்சம் வழங்கி பாதுகாப்பளிப்பதிலும் தவறில்லை என்றார்.

வில்பத்து சரணாலய பிரதேசத்தில் முஸ்லிம்கள் குடியேற்றப்பட்டிருப்பதாக அமைச்சர் ஒருவரி;ன் மீது குற்றம் சாட்டப்படுவது பற்றி ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போது அதற்கு  பதிலளித்த அமைச்சர் ஹக்கீம், இதுபற்றி சம்பந்தப்பட்ட அமைச்சர் ஊடகவியலாளர் மாநாட்டில் உரிய விளக்கத்தை அளித்திருந்ததாகவும், அவ்வாறு குறிப்பிடப்படும் எல்லைக்குள் குடியேற்றம் நடந்திருந்தால் அதுபற்றி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். சட்டத்தை மீறி ஏதும் நடந்திருந்தால் நீதிமன்றத்தை நாடி யாரும் செல்லலாம். நீதிமன்றத்தின் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம். நீதி, நியாயத்தை கோரும் உரிமை ஒவ்வொரு பிரஜைக்கும் உண்டு.  நீதி எல்லோருக்கும் சமமானது. அவ்வாறன்றி, அரச அதிகாரிகளோடு சம்பந்தப்பட்ட விடயமாக இருந்தால் அந்த அதிகாரிகள் ஊடாக உரிய தீர்வுகளை காணலாம்.

சமயங்கள் தொடர்பான பிரச்சினைகளை அணுகுவதற்கு என்று தனியான பொலிஸ் பிரிவொன்றை நிறுவுவதில் எந்தப் பயனும் இல்லை என்பதுவே தனது அபிப்பிராயம் என்றும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட மூலோபாய அபிவிருத்தி சட்ட மூலம் பற்றி ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஹக்கீம், தாம் அந்த சட்ட மூலத்தை எதிர்ப்பதாகவும், ஆயினும் தற்பொழுது முன்வைக்கப்பட்டுள்ள வர்த்தமானியில் கசினோ சூதாட்டம் பற்றி உள்ளடக்கப்படவில்லை என்றும், ஆயினும், சந்தேகத்திற்கிடமாக இருப்பதால் சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதிலிருந்து தமது கட்சி தவிர்ந்து கொண்டதாகவும் கூறினார். பின்னர் கசினோ சூதாட்டம் பற்றிய விடயத்தை பின்னர்  சட்டமாக்க முற்பட்டால் தமது கட்சி அவ்வாறான தீர்மானத்தை வன்மையாக எதிர்க்கும் என்றும் கூறினார்.
இந்தச் சந்திப்பில் மேல் மாகாண சபை, கொழும்பு மாவட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் அர்ஷாத் நிஸாம்தீன், நீதியமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி மஹிலால் த சில்வா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

முன்னதாக அமைச்சர் ஹக்கீம் கடந்த 16 ஆம் திகதி கண்டியில் மல்வத்தை சங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல மஹாநாயக்க தேரரையும், அஸ்கிரிய பீடத்தின் சங்கைக்குரிய மஹாநாயக்கர் உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரரையும், ராமண்ய நிக்காயவின் மஹாநாயக்கர் சங்கைக்குரிய நாபானே பிரேமசிறி தேரரையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
ஊடகச் செயலாளர்  

0 comments:

Post a Comment