கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

போக்குவரத்து நெரிசலுக்காக பள்ளிவாசலை மூடமுடியாது: நீதிபதி தெரிவிப்பு

பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்பதற்காக பள்ளிவாசலை மூடமுடியாது எனவும் அவ்வாறான நிலைமை இருப்பின் போக்குவரத்து பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தி தீர்வு காணுமாறும் தெரிவித்த நீதவான் அருணி ஆட்டிகல முறைப்பாட்டளர்களின் சாட்சி விசாரணைகளுக்காக நாளைய தினம்வரை வழக்கை ஒத்திவைத்ததுடன் தெஹிவளை, கடவத்தை வீதி பள்ளிவாசலில் தொழுகையை தொடர அனுமதிப்பதா இல்லையா என்பது தொடர்பிலான தீர்மானம் நாளைய தினம் எடுக்கப்படவுள்ளது.

 
ஹிஹவளை, பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெஹிவளை, கடவத்தை வீதி தாருஸ் ஷாபி பள்ளிவாசல் சட்ட விரோதமானது எனவும், அதனால் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் தெரிவித்து தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் சட்டத்தின் 98(1) அத்தியாயத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீதான விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நாளைவரை மீண்டும் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இன்றைய தினம் சுமார் இரு மணி நேரம் வரை நீடித்த விசாரணையில் பிரதிவாதி தரப்பான பள்ளிவாசல் பொறுப்பாளர்கள் சார்பில் மன்றில் விளக்கங்கள் முன்வைக்கப்பட்டன. நுகேகொடை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணைகளில் பிரதிவாதிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர் தலைமையில் சட்டத்தரணிகளான சிராஸ் நூர்தீன், விதுர மஞ்சனாயக்க, சுனீத்தா நாணயக்கார, சப்ராஸ் ஹம்ஸா, ரமீஸ் பஸீர், மொஹம்மட் நளீம் மற்றும் மைத்ரீ குணரத்ன உள்ளிட்ட சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.
இதன் போது குறித்த வழக்கில் பள்ளிவாசலுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைரினால் மறுத்;து பதிலளிக்கப்பட்டது.
பள்ளிவாசலுக்கு எதிராக 10 பேர் முறையிட்டுள்ளதாக தெஹ{வளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த மனுவில் பள்ளிவாசலால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக பிரதான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
இதனை மறுதலித்து வாதிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர் தலைமையிலான சட்டத்தரணிகள் குழு, பள்ளிவாசலால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படவில்லை என தெரிவித்தனர். அத்துடன் பள்ளிவாசலை சுற்றி 9 அடி உயரமான மதில் உள்ளதாகவும், ஒலிபெருக்கி சாதனங்கள் எதுவும் பயன்படுத்தப்படாத நிலையில் பள்ளிவாசலில் இருந்து எவ்வித சத்தமும் வெளியே செல்வதில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
அத்துடன் பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக வருவோர் வாகனங்களில் வருவது குறைவு என சுட்டிக்காட்டிய அவர்கள் பிரதேசத்தில் உள்ள வாகன திருத்தும் இடத்தில் பளுதடைந்த வாகனங்களை பாதையில் வைத்து திருத்துவதையும், மதுக்கடை ஒன்று அப்பிரதேசத்தில் உள்ளதையும் சுட்டிக்காட்டி பள்ளிவாசலால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை என வாதிட்டனர்.
இதனை தொடர்ந்து இரண்டு கிலோமீற்ரர்களுக்குள் 8 பள்ளிவாசல்கள் இருப்பதாக மன்றில் முன்வைக்கப்பட்டிருந்த கருத்துக்கு பதிலளித்த பள்ளிவாசல் தரப்பு சட்டத்தரணிகள் 2 கிலோமீற்றர்களுக்கு உட்பட்ட பகுதியில் இரு பள்ளிவாசல்களே இருப்பதை நிரூபித்தனர்.
அத்துடன் அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்று நிரூபம் ஒன்றைக் காரணம் காட்டி பள்ளிவாசலை சட்ட விரோதமானது என வாதிட முடியாது என வாதாடிய சடத்தரணிகள் பாராளுமன்ரத்தினால் அங்கீகரிக்கப்பட்ட வக்பு சட்டத்தின் கீழ் பள்ளிவாசல் பதிவு செய்யப்பட்டுள்ளதை குறிப்பிட்டதுடன் சுற்று நிரூபத்தை விட சட்டத்துக்கு வலிமை அதிகம் என அவர்கள் வாதிட்டனர்.
அத்துடன் சுற்று நிரூபத்தை வைத்து பள்ளிவாசல் சட்ட விரோதமானது என வாதிடுவது முறையற்றது என வாதிட்ட பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் பள்ளிவாசல் சட்ட ரீதியானது என்பதற்கான அனைத்து ஆவணங்களும் இருக்கும் நிலையில் ஒரு தரப்புக்கு மாத்திரம் சார்பாக செயற்பட்டு பொலிஸார் நீதிபதியை தவறாக வழி நடத்துவதாக குற்றம் சுமத்தினர்.
இதனையடுத்து பள்ளிவாசல் சட்ட விரோதமானது என்பதை நிறுவ வேறு ஆதாரங்கள் ஏதும் உள்ளதா என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கரவிட்ட விடம் நீதவான் வினவினார். அதற்கு அவர் இல்லை என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து போக்குவரத்து நெருக்குதல்களுக்காக பள்ளிவாசலை மூட முடியாது என தெரிவித்த நீதவான், அவ்வாறு போக்குவரத்து நெரிசல் காணப்படுமிடத்து போக்குவரத்து பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தி அதனை சரி செய்துகொள்ளுமாறு அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து நாளைய தினம் குறுக்கு விசாரணைகளுக்காக இந்த வழக்கை நீதிவான் ஒத்திவைத்தார். நாளைய தினம் விசாரணைகளை தொடர்ந்து தெஹிவளை, கடவத்தை வீதி தாருஸ் ஷாபி பள்ளிவாசலில் விதிக்கப்பட்டிருக்கும் தொழுகை தடையை நீக்குவதா இல்லையா என்ற தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

0 comments:

Post a Comment